வெள்ளிக்கிழமை, 18 மே 2012

சிடிபி நிறுவனத்தின் வரிக்குப் பின்னரான இலாபம் 28 வீதத்தினால் அதிகரிப்பு

 

சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி. நிறுவனமானது 2011 - 12 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் தனது வளர்ச்சிப் போக்கினை தொடர்ந்து பேணும் வகையில், அனைத்து பிரிவுகளிலும் சிறந்த நிதிப்; பெருபேறுகளை பதிவு செய்துள்ளது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிதிப் பெறுபேறுகளின் பிரகாரம், ஒன்பது மாதங்களுக்கான வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 398 மில்லியனாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அடைவு 28 சதவீத அதிகரிப்பை பிரதிபலிக்கின்றது.

முன்னைய வருடத்தின் தொடர்புபட்ட காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு இலாபத்தில் 25 சதவீத வீழ்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏனைய வருமானப் பதிவுகளில் நடப்பு காலாண்டிற்கு எதிராக, தொடர்புபட்ட முன்னைய காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட ரூபா 114.97 மில்லியன் பெறுமதியான சீராக்கல்களின் காரணமாக இந்தக் காலாண்டில் ரூபா 15.7 மில்லியன் மறைப் பெறுமதி பதிவாகியுள்ளது. இலாபத்தில் வீழ்ச்சி ஏற்பட இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.

எவ்வாறிருந்த போதிலும், மூன்றாம் காலாண்டுப் பகுதிக்கான பிரதான வர்த்தக பிரிவுகளின் இலாபமானது 80 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. அதேபோன்று பிரதான வர்த்தக பிரிவுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற 09 மாதங்களுக்கான வரிக்குப் பின்னரான இலாபம் 98 சதவீத அதிகரிப்பினை வெளிப்படுத்தியுள்ளது. இந்த 09 மாத காலப்பகுதியில் ஏற்பட்ட 36 சதவீதமான உயர்ந்த மட்ட வளர்ச்சியின் காரணமாக மொத்த வருமானம் 2 பில்லியன் ரூபாவினை கடந்து சென்றுள்ளது. தேறிய வரி வருமானமானது 52 சதவீத வளர்ச்சியுடன் ரூபா 886 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடைசியாக கணக்காய்வு செய்யப்பட்ட 31-03-2011ஆம் திகதி இருந்தபடியான ஐந்தொகையைப் பார்க்கிலும் இப்போதைய ஐந்தொகையானது 48 சதவீத வளர்ச்சியுடன் ரூபா 14.8 பில்லியனாக பதிவு செய்யப்பட்டமையினாலேயே, இவ்வாறான அதியுயர்ந்த இலாபத்தன்மை சாத்தியமாகி உள்ளது.

கடன் ஏட்டில் ஏற்பட்ட 52 சதவீத அதிகரிப்பு, வைப்பு சார் விடயங்களில் ஏற்பட்ட 40 சதவீத அதிகரிப்பு மற்றும் கடன் நிதியளித்தலில் ஏற்பட்ட 41 சதவீத அதிகரிப்பு ஆகியவை ஐந்தொகையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளன. மூலதன நிதியங்கள் ரூபா 2 பில்லியன் என்ற இலக்கினை கடந்து சென்ற அதேநேரம் சிடிபி நிறுவனத்தின் ஐந்தொகையையும், ரியர் 1 மற்றும் ரியர் 11 'மூலதன போதுமான வீதங்களை' முறையே 16.45 சதவீதம் மற்றும் 16.68 சதவீதமாக பேணுவதற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளது.

கடன் சேகரித்தலில்; தொடர்ச்சியாக ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக, செயற்படா கடன் வீதமானது 2.15 சதவீதமாகவும், தேறிய செயற்படா கடன் வீதமானது 0.47 சதவீதமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, இத்துறையில் மிகச் சிறப்பான செயற்படா கடன் வீதமாக இது திகழ்கின்றது.

சிடிபி நிறுவனத்தின் சாதாரண பங்கு ஒன்றுக்கான தேறிய சொத்துப் பெறுமதியானது ரூபா 39.68 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன் 2011 டிசெம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த 09 மாத காலப்பகுதிக்கான ஒரு பங்கிற்கான உழைப்பு ரூபா 8.62 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

'09 மாதங்களுக்கான நிதிப் பெறுபேறுகள் எம்மை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன. 2011 - 2012 நிதி ஆண்டினையும் இன்னுமொரு சிறந்த நிதிப் பெருபேறுகளை கொண்ட ஆண்டாக நிறைவு செய்வதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' என்று சிடிபி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார தெரிவித்தார். 'அனைத்து விடயங்களிலும் எமது நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள இந்த சிறந்த நிதிப் பெருபேறுகளானது, கிராமிய கடன் வழங்கல் மற்றும் நகர நிதியீட்டல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எமது நிறுவன வர்த்தக மாதிரியின் உறுதியான நிலை மற்றும் பரிமாணம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன. அதுமாத்திரமன்றி, கிராமிய சமூகங்களுக்கான ஒரு நிகர கடன் வழங்குநராக நாம் எமது நிலையினை பலப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வர்த்தக மாதிரி தொடர்பாக அவர் விபரிக்கையில், 'நாம் கடைப்பிடிக்கும் வர்த்தக மாதிரியானது சாதகமான சந்தை நிலைவரங்;களிலும் அதேபோன்று சவால்மிக்க வேளைகளிலும் பரீட்சிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வர்த்தக மாதிரியாகும். அத்துடன் நிச்சயமற்ற சந்தை நிலைவரங்களையும் திறம்பட சமாளித்து, வர்த்தகத்தின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் உயர்ந்த மட்டத்திலான பெருபேறுகள் ஆகியவற்றை அடைந்து கொள்வதற்கு போதுமான நெகிழ்ச்சித் தன்மையை வழங்கி இடமளிக்கின்றது.

சிடிபி நிறுவனமானது, கணினி மயப்படுத்தப்பட்டு ஒன்லைன் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தனது 34 விநியோக வலையமைப்புக்களை கிராமிய மற்றும் நகரப் பிரதேசங்களுக்கு விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் பொலாரிஸ் அன்ட் மிலேனியம் ஐ.ரி. நிறுவனத்தினால் வலுப்படுத்;தப்பட்டு தனது புதிய 'மைய வங்கியியல் தீர்வு' முறைமையின் கீழ் 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சேமிப்பு கணக்கு செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளது. 2012 - 2013ஆம் நிதியாண்டின் முதற்காலாண்டு காலப்பகுதியில் இந்த புதிய 'மைய வங்கியியல் தீர்வினை' முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி, 'சிடிபி மீஸான்' என்ற வர்த்தக நாமத்தின் கீழ் இஸ்லாமிய நிதிச் சேவை வசதியினை ஆரம்பிப்பதற்கும் சிடிபி நிறுவனம் முனைப்புடன் உள்ளது.

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற 'தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2011' நிகழ்வில், விஷேடத்துவமான வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் பிரிவின் வெற்றியாளராக சிடிபி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட 'வருடாந்த அறிக்கைகள் விருது வழங்கல் 2011' நிகழ்விலும் சிடிபி நிறுவனம் நிதி நிறுவனங்கள் பிரிவில் வெண்கல விருதினை பெற்றுக் கொண்டது. அதேநேரம் சிடிபி நிறுவனத்தின் கூட்டாண்மை கடன் தரப்படுத்தலானது அண்மையில் 'ராம் ரேற்றிங்' இனால் பிபிபி-பி2 (BBB/P2) ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

Views: 68

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.