
கொழும்பின் புதிய அடையாளமாகத் திகழும் 'தாமரைத் தடாகம்' (நெலும் பொக்குண) மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற 'ஹமீடியா திறமைகாண் நிகழ்ச்சி 2012' இற்கு ஹமீடியா நிறுவனத்தின் பணியாளர்களுள் அங்கம் வகிப்பவர்கள் என்ற வகையிலும், பங்காளர்களாகவும் ஒன்றுகூடியிருந்த 1200 இற்கும் அதிகமானவர்களுக்கு நீலம், கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலான தாமரை மலர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஐக்கிய அமெரிக்காவில் வர்த்தக நோக்கத்திலான இருமாத பயணம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து நேரடியாக இந்நிகழ்வுக்கு வருகைதந்த ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஹுசைன் சாதிக் வருகை தந்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க பிரமுகர்களுள் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவன தலைவர் துஷார பெரேரா, பேராசிரியர் றிஸ்வி ஷெரீப், மது ரத்நாயக்க, பெரோஸ் காதர், பேராசிரியர் சிறிகந்தையா போன்றோரும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த பல வருடங்களாக நிறுவனத்தினால் அடைந்து கொள்ளப்பட்ட சாதனைகளை கொண்டாடும் வகையில், பிரமாண்டமான பரிமாணத்துடன் இவ்வருடத்துக்கான 'திறமைகாண் நிகழ்ச்சி' இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கடந்த 63 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் வாழும் ஆடவர்களின் வாழ்க்கையில் அசைக்க முடியாத ஓர் அங்கமாக ஹமீடியா வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே நிதர்சனமாகும்.
தாமரை மலர்கள் பொறிக்கப்பட்ட ரீ-ஷேர்ட்களை அணிந்தவர்களாக, ஹமீடியா நிறுவனத்தின் ஊழியர்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தனர். அத்துடன் ஹமீடியா முகாமைத்துவத்தினர், விநியோகஸ்தர்கள், வர்த்தகப் பங்காளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குழுவினர் ஆகியோருடன் ஒன்றிணைந்து எட்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த விநோத வெகுமதியளிக்கும் நிகழ்வில் அவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இடம்பெற்ற 'தாமரை நடனம்' மிகவும் வசீகரிப்பதாக அமைந்திருந்தது. இந்த நடனத்தை நிறுவனத்தின் தொழிற்சாலையில்; பணிபுரியும் யுவதிகள் வழங்கியதுடன், இதற்கான பயிற்சிகள் நடன ஆசிரியரினால் வழங்கப்பட்டது. ஹமீடியா நிறுவனத்தின்; அங்கத்தவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களம் ஒன்றினை இந்நிகழ்வு வழங்கியிருந்தது. நாடகம், இசை, பாடல் மற்றும் நடனம் என தம்மிடம் மறைந்துள்ள புத்தாக்க திறமைகளை பரந்தளவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பார்வையாளர்கள் முன்னிலையில் பிரகாசமான ஒளிக்கற்றை வெளிச்சத்தின் கீழ் அவர்கள் வெளிப்படுத்தினர். நடித்தல் மற்றும் மேடை நுணுக்கம் போன்ற விடயங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில், மிகப் பிரபலமான இயக்குநரான பெரோஸ் கமர்தீன் முக்கியமானதொரு பங்கினை வகித்தார்.
ஹமீடியா ஊழியர்கள் வழக்கமாக தமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் ஆடைகளை அணிந்து கொண்டு மொடல்களைப் போன்ற தோற்றத்தில் அவர்களே பங்கேற்ற நவநாகரிக ஆடைக் காட்சியும் இதன்போது இடம்பெற்றது. இவ்வாறு பங்கேற்ற எட்டு மொடல்கள் வர்த்தக குறியீட்டிற்கு பெருமை சேர்த்ததுடன், மிகுந்த நம்பிக்கையுடனும் லாவகமாகவும் ஒய்யார நடை நடந்தனர்.
மாற்றுத்திறனாளிகளான ஒரு குழுவினர் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்கி தமது திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் பார்வையாளர்களின் சிறந்த கைதட்டலை பெற்றுக் கொண்டனர். 'ஹமீடியா திறமைகாண் நிகழ்ச்சி 2012' நிகழ்வின் மிகவும் விஷேடத்துவம் மிக்க ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. அனைத்து ஊழியர்களுக்கும் சமமான வாய்ப்பினை உறுதிப்படுத்துவதில் ஹமீடியா நிறுவனம் காட்டிவரும் முனைப்புக்கு அமைவாக, சமூகத்தில் வாழும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு இடமளிக்கும் வகையில் ஹமீடியா நிறுவனமானது தனது கொள்கையை உருவாக்கியுள்ளது.
'63 வருடங்களுக்கு முன்னர் எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எமது ஊழியர்களுள் அங்கம் வகித்த தனிப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கிய பங்களிப்பினை நாம் மதிக்கின்றோம். கடந்த பல வருடங்களாக அவர்கள் வெளிப்படுத்திய தூய்மையான அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவையே, ஹமீடியாவை இன்று வீடுகள் தோறும் பிரபலமான ஒரு வர்த்தக குறியீடாக மாற்றியமைத்துள்ளது. அவர்களை நாம் பாராட்டுகின்றோம் என்பதையும் எப்போதும் கவனம் செலுத்துகின்றோம் என்பதையும் இந்த நிகழ்வு வெளிச்சம்போட்டு காட்டுகின்றது' என்று முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார்.
நாடகம், நடிப்பு மற்றும் பாடல் ஆகிய கலை நிகழ்ச்சிகளின் போது ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்களுடன் பல்வேறு பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர். தமது அணிக்கும் நிறுவனத்திற்கும் முழு அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை வழங்கிய அதேநேரம் இந்நிகழ்வின்போது உயர்ந்தளவில் திறமைகளை வெளிப்படுத்தியோருக்கும் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
20 ஊழியர்கள், விஷேட கௌரவ விருதுகளுடன் அனைத்துச் செலவுகளும் நிறுவனத்தினால் கொடுக்கப்படும் வகையில் வெளிநாட்டில் விடுமுறையை கழிப்பதற்கான வாய்ப்பினையும் வெகுமதியாக பெற்றுக் கொண்டனர். அதேவேளை, எம்.ரீ.எம்.பளீல், ஷபீக் நசீர் மற்றும் ஜே.ஈபேர்ட் ஆகியோர் 'இவ்வாண்டிற்கான ஹமீடியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி விருது' இனை கூட்டாக பெற்றுக் கொண்டனர். அதுமாத்திரமன்றி, நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 211 ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 22 கெரட் தங்கப் பதக்கங்களை அணிவித்தும் ஹமீடியா நிறுவனம் அவர்களுக்கு கௌரவமளித்தது.
'ஹமீடியா என்ற பெரியதொரு குடும்பத்தின் அங்கத்தவர்களான, எம் ஒவ்வொருவர் இடையேயும் பிணைப்பை ஏற்படுத்தும் விடயத்தில் இந்நிகழ்வானது மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. நாம் வேறுபட்ட இன, கலாசார மற்றும் மொழிப் பின்புலங்களில் இருந்து வந்துள்ள போதிலும் ஹமீடியா வர்த்தக குறியீட்டினால் நாம் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளோம். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நாம் பெற்றுள்ள வெற்றியின் அடிப்படையான மையக் கரு இதுவேயாகும்' என்று பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஹுசைன் சாதிக் கூறினார்.
தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் அவற்றை தட்டிக் கொடுப்பதற்கும் அதேநேரம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் ஹமீடியா ஏற்பாடு செய்த இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. இங்கு இடம்பெற்ற நடிப்பு மற்றும் நிகழ்ச்சி நெறியாள்கை உள்ளடங்கலாக இந்நிகழ்வின் 95 சதவீதமான விடயங்கள் ஊழியர்களினாலேயே கையாளப்பட்டன. தலைமை அலுவலகம், தொழிற்சாலை, களஞ்சியப் பகுதி மற்றும் சில்லறை விற்பனைக் காட்சியறைகள் என்று - ஹமீடியா குடும்பத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும், இந்நிகழ்வு நேர்த்தியாக அமைவதற்கான தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
அதேவேளை, ஒவ்வொரு ஊழியரும் எட்டு மணித்தியாலங்கள் தன்னார்வ (தொண்டு அடிப்படையிலான) பணியினை மேற்கொள்வதற்கு அவசியமான பயிற்சியினையும் இந்நிகழ்வு அவர்களுக்கு வழங்கியது. தனிப்பட்ட நபர்களாக சமூகத்திற்குள் சென்று, பாடசாலைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவகங்களுடன் தாம் பெற்றுள்ள அனுபவங்களையும் அறிவினையும் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் இப்போது அனைத்து ஆற்றல்களையும் கொண்டவர்களாக தயார்படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பயிற்சியானது அவர்களை சுய திருப்தியுடையவர்களாக மாற்றுகின்றது. அதன்மூலம் ஏனையவர்களில் தங்கியிருக்கும் தன்மை குறைக்கப்படுவதன் ஊடாக, அனைத்து விடயங்களும் உட்பொதிந்த சுய கௌரவத்தையும் அவர்களுக்கு அளிக்கின்றது.


