செலான் வங்கி பி.எல்.சி. நிறுனமானது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிகவுயர்ந்த நிதிப் பெறுபேறுகளை 04ஆம் காலாண்டில் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இக்காலாண்டு காலத்தில் பெறப்பட்ட வரிக்குப் பின்னரான தேறிய இலாபம் ரூபா 699.73 மில்லியனாக பதிவு செய்யப்பட்டதுடன் (2010இல்- ரூபா 383.91 மில்லியன்) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 82வீதமான ஓர் அதிகரிப்பாக இது அமைந்துள்ளது.
செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறுகையில், 'இந்த நிதியாண்டு முழுவதிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 01 பில்லியனையும் தாண்டிச் சென்றுள்ளது. தன்னார்வ ஓய்வுபெறல் திட்டத்திற்காக ரூபா 698.7 மில்லியன் அசாதாரண செலவு ஏற்பட்டிருந்த நிலையிலேயே, வங்கி இவ்வாறான நிதிப் பெறுபேறு ஒன்றினைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் நிறுவனமானது வரிக்குப் பின்னரான இலாபமாக பெற்றிருந்த 1,003 மில்லியன் ரூபாவானது, கடந்த வருடத்தின் இலாப பெறுபேறான 1,229 மில்லியன் ரூபாவை விடவும் குறைவானதாகும். எவ்வாறிருந்த போதிலும் இக்காலப் பகுதியில் தன்னார்வ ஓய்வுபெறல் திட்டத்திற்காக ஏற்பட்ட (ரூபா 698.7 மில்லியன்) செலவுத் தொகையானது இதிலிருந்து வெளியகற்றப்பட்டால், கடந்த வருடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிதிப் பெறுபேறுகளை விடவும் 2011ஆம் ஆண்டின் பெறுபேறுகள் நிச்சயமாக குறிப்பிடத்தக்களவான அதிகரிப்பினை வெளிக்காட்டும்' என்றார்.
2011 நிதியாண்டில் செயற்படும் கடன் ஏட்டில்; தெளிவான வகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது. அதாவது கடனேடு ஆனது 27.6 சதவீத அதிகரிப்புடன் ரூபா 97.5 பில்லியனை அடைந்தது. வைப்புக்களிலும் கூட 9.5 சதவீதமான வளர்ச்சி ஒன்று பதிவு செய்யப்பட்டதுடன், வருட இறுதியில் இதன் பெறுமதி ரூபா 121 பில்லியனாக காணப்பட்டது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த சொத்துக்களின் பெறுமதி 11 சதவீதத்தினால் அதிகரித்து ரூபா 166 பில்லியனாக உயர்ந்த மட்டத்தில் இருந்தது. வங்கியின் மிக முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் இரண்டாவது அரையாண்டில் ஆரோக்கியமானதொரு வளர்ச்சி ஏற்பட்டமையும், கடைசி காலாண்டு காலப்பகுதியில் அதனது உத்வேகமான போக்கு குறிப்பிடத்தக்களவுக்கு அதிகரித்து காணப்பட்டமையும் ஒரு கவனிக்கத்தக்க அம்சமாக அமைந்திருந்தது.
2011 ஆண்டில், முழுமையாக வழங்கி முடிக்கப்பட்ட உரிமைப் பங்கு வழங்கலின் ஊடாக ரூபா 4.7 பில்லியனை செலான் வங்கி வெற்றிகரமாக திரட்டிக் கொண்டது. இந்நிதியாண்டின் இறுதியில் செலான் வங்கியின் பங்குகளின் பெறுமதியானது ரூபா 17.5 பில்லியனாக பதிவானமை கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட ரூபா 12.1 பில்லியனை விடவும் கணிசமானளவு அதிகமானதாகும். வங்கியின் மூலதன போதுமான வீதமானது 14.53ஆக (2010இல் - 12.07 வீதம்) அதிகரித்து, இத்துறையில் மிகவும் உயர்ந்த மட்டத்திலான மூலதன போதுமான வீதங்களில் ஒன்றாக திகழ்வதற்கு இது வழிகோலியது.
3ஆவது காலாண்டுப் பகுதியில் 'பிட்ச் ரேட்டிங்' ஆனது செலான் வங்கி தொடர்பான தரப்படுத்தலை 'ஏ-'' ஆக தரமுயர்த்தியது. 2011இல் வங்கி அடைந்து கொண்ட இன்னுமொரு மைல்கல்லாக இது அமைந்திருந்தது.
கிளை வலையமைப்பினைப் பொறுத்தவரையில், 2011ஆம் ஆண்டில் 04 புதிய கிளைகள் மற்றும் 07 விரிவுபடுத்தப்பட்ட சேவை நிலையங்களை புதிதாக திறந்து வைத்ததன் மூலம் செலான் வங்கியானது தனது சேவைப் பரம்பலை மேலும் விஸ்தரித்தது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பாக சேவையாற்றும் நோக்கில் செலான் வங்கியின் 10 கிளைகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சேவை நிலையங்கள் வேறு மனையிடங்களுக்கு இடம்பெயர்ந்தன. 2011ஆண்டின் இறுதியில் இருந்தபடி, நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் 133 கிளைகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சேவை நிலையங்களைக் கொண்ட நிறுவனம் என்ற பெருமையை செலான் வங்கி பெறுகின்றது. இதற்கு மேலதிகமாக, வங்கியின் ஏரிஎம் வலையமைப்பில் 08 தன்னியக்க டெலர் இயந்திர மையங்களும் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டன. வங்கியின் இதற்கமைய ஏ.ரி.எம். வலையமைப்பு மொத்தமாக 134 மையங்களைக் கொண்டதாக அதிகரித்துள்ளது.
செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கையில், 'நிறுவனத்தின் கட்டமைப்பு முறையினை மறுசீரமைத்தமை, தொழிற்பாடு மற்றும் இடர் முகாமைத்துவ செயற்பாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், மனிதவள நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் போன்ற விடயங்கள் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை பெற்றுத்தர ஆரம்பித்துள்ளன என்பதனை, மேற்படி நிதிப் பெறுபேறுகள் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் நிரூபித்துள்ளன. செயற்படாக் கடன், கிளை கடன், வாடிக்கையாளர் சேவை தராதரம் ஆகியவற்றை மீள் வசூலித்தல், மறுசீரமைத்தலுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளமையானது, வங்கியின் முக்கிய செயற்பாடுகளில் ஸ்திரமான வளர்ச்சி ஏற்படுவதற்கான ஓர் அடித்தளத்தை ஒருங்கிணைந்து வழங்கியுள்ளன. ரூபா 25.7 பில்லியனாக காணப்பட்ட செயற்படா முற்பணங்கள், 2011ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 20.9 பில்லியனாக குறைக்கப்பட்டிருந்தன. இதன்படி ரூபா 4.8 பில்லியன் குறைக்கப்பட்டது. 2010இல் 21.4வீதமாக காணப்பட்ட செயற்படாக் கடன் வீதத்தினை, 2011ஆம் ஆண்டில் 14.2வீதமாக கணிசமான அளவுக்கு குறைப்பதற்கு இது சாதகமான பங்களிப்பினை வழங்கியது' என்று குறிப்பிட்டார்.
செயற்றிறனைப் பொறுத்தமட்டில், 2010இல் 3,622ஆக இருந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 2011ஆம் ஆண்டின் இறுதியில் 3,150 பேராக குறைத்துக் கொள்வதற்கு செலான் வங்கியினால் முடிந்தது. விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஊழியர் குறைப்பானது - மறுசீரமைப்பு, மையப்படுத்துதல், தன்னியக்க முறைமை மற்றும் மீள்பொறிமுறைப்படுத்தல் செயற்பாடுகள் ஆகியவற்றின் உடாக செயற்றிறனைப் பெற்றுக் கொள்வதற்கு சாதகமான காரணமாக அமைந்தது.
குழுமத்தின் நிதிப் பெறுபேறுகளைப் பொறுத்தவரையில், வங்கியின் பங்குகளை வைத்திருப்போருக்கு வழங்கப்பட வேண்டிய இலாபமானது 2011ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 1,006 மில்லியனாக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. பங்கொன்றுக்கான குழுமத்தின் தேறிய சொத்துக்களின் பெறுமதி ரூபா 52.99 ஆக பதிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த நிதியாண்டில் காணப்பட்ட ரூபா 49.17 இனை விடவும் இதில் ஒரு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளமை புலனாகின்றது.
தேசிய நோக்குடன் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வங்கி ஆரம்பித்த 'செலான் பரிசு மேல் பரிசு' ஊக்குவிப்பு பிரசாரத் திட்டமானது, வர்த்தக குறியீட்டை கட்டியெழுப்புதல் மற்றும் வைப்புத் திரட்டல் ஆகிய விடயங்களில் மிகவுயர்ந்த வெற்றியை தேடித்தந்த முன்னெடுப்பாக அமைந்தது. அத்துடன் வாழ்க்கையின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்தவர்களாக, நாடு எங்கிலும் வாழும் இலங்கையர்களின் கவனத்தை மிகச் சிறப்பாக ஈர்த்தெடுத்த பிரசாரமாகவும் உள்ளது.
நிதியாண்டின் 3ஆம் மற்றும் 4ஆம் காலாண்டு காலப் பகுதியில், தமது கிளை வலையமைப்பில் பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்புடனும் அவர்களை உள்வாங்கிக் கொண்டும், அதேபோன்று நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு செயற்பாடுகளோடும் இணைந்து 4 வருடங்களுக்கான உபாய திட்டம் ஒன்றினை செலான் வங்கி வகுத்தது. வாடிக்கையாளர் சேவை, சொத்துத் தரம், தன்னியக்கமயப்படுத்தல் மற்றும் முன்னேற்றகரமான செயற்றிறன் ஆகியவற்றில் வங்கி அதிக கவனம் செலுத்தி செயற்படுகின்ற வேளையில் அடுத்துவரும் 4 வருடங்களில் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மையை மேம்படுத்திக் கொள்வதை மையப்படுத்தியதாக இந்த உபாய திட்டம் காணப்படுகின்றது.
'உபாய திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்து வைப்பது மிகவும் பொருத்தமான ஒரு நேரத்தில் இடம்பெறுகின்றது. அதாவது, எதிர்வரும் வருடங்களில் வளர்ச்சி அடைவதற்காக வங்கியானது தன்னளவில் சிறப்பாக கூட்டிணைக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இது நிகழ்கின்றது. 2011ஆம் ஆண்டினை திரும்பிப் பார்க்கையில், பல்வேறு விடயங்களை கூட்டிணைப்பதற்கான ஆண்டாக அது அமைந்திருந்தது. அவ்வருடத்தில் - வளர்ச்சி மட்டங்கள் மற்றும் செயற்றிறன் வீதங்கள் சரியான திசையை நோக்கி நகர்ந்த அதேவேளை, மிகச் சிறந்த தனியுரிமையுடைய வளர்ச்சியை அடைதல் மற்றும் இலங்கையின் வங்கியியல் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக தனது ஸ்தானத்தை பலப்படுத்திக் கொள்வதல் ஆகியவற்றுக்கு தேவையான உறுதியான அடித்தளம் ஒன்றும் இடப்பட்டுள்ளது' என்று வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறி முடித்தார்.

