வெள்ளிக்கிழமை, 18 மே 2012

தங்கத்தின் விலை ரூபா 50,000ஐ தாண்டியது

 

- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

(ச.சேகர்)

சரிவுடன் முதல் மூன்று தினங்களும் பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகளவு ஈடுபாட்டின் காரணமாக வெள்ளிக்கிழமை கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது ஏறுமுகமாக நிறைவடைந்திருந்தன. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து நாட்டில் எழுந்த பாதகமான நிலை போன்றவற்றின் தாக்கங்கள் பங்குச்சந்தையில் பிரதிபலிப்பை தோற்றுவித்திருந்ததாகவும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்த நிலை இலங்கையின் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக திகழ்வதாகவும் பங்குமுகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது நிலவும் சூழ்நிலையில் பங்குதாரர்கள் பதற்றமடையத்தேவையில்லை எனவும், நீண்ட கால நோக்கில் பங்குகளை கொள்வனவு செய்து வைத்திருப்பதன் மூலம் அனுகூலங்களை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் சந்தை கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதெனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் பிரதான சுட்டிகள் இரண்டும் வீழ்ச்சியை காண்பித்திருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5285.17 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 4549.43 ஆகவும் அமைந்திருந்தது.

பெப்ரவரி 13ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 8,648,183,513 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 85,529 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 83,162 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,367 ஆகவும் பதிவாகியிருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த பங்கு புரள்வு பெறுமதி சுமார் 3 மடங்கு அதிகரிப்பை காண்பித்திருந்தது.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் லங்கா ஐஓசி, அக்மி, ஹியுஜே, எல்பி ஃபினான்ஸ் மற்றும் மொரிசன்ஸ் (வாக்குரிமையற்ற பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஹேலீஸ் - எம்ஜிடி, சொஃப்ட்லொஜிக் கப், மேர்க் சிப்பிங், ஏஎம்எஃப் கொம்பனி லிமிடெட் மற்றும் சிடிஐசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று சர்வதேச சந்தையில் 53,174 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சர்வதேச செய்திகளின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1401.34 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

Views: 261

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.