இரவு நேர பல்துலக்கும் விழிப்புணர்வு திட்டம் சிக்னல் மூலம் தொடர்ந்து முன்னெடுப்பு
24-04-2012 06:13 PM
Comments - 0       Views - 289
யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வாய் சுகாதார பராமரிப்பு தயாரிப்பான சிக்னல், கடந்த ஆண்டு முன்னெடுத்திருந்த 'இரவு நேர பல்துலக்கல்' விழிப்புணர்வு நடவடிக்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இவ்வருடம் வாடிக்கையாளர்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. விசேடமாக சிறுவர்களிடையே இரவு நேர பல்துலக்கும் பழக்க வழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு திட்டம் அமையவுள்ளது. இந்த விழிப்புணர்வு திட்டத்துக்கு 'பிரஷ் அன்ட் டான்ஸ்;' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ச்சியாக 21 தினங்கள் இடைவிடாது இரவு வேளையில் பற்களை துலக்குவதற்கு ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

கடந்த 5 தசாப்த காலமாக சிக்னல், பல தலைமுறைகளுக்கும் தாய்மார்களுக்கும் பற்சுகாதாரம், பற்பசை, பற்தூரிகை மற்றும் மேலும் பல தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டவண்ணமுள்ளது. பிரதானமாக நாளாந்தம் இருமுறை பற்களை துலக்குவது குறித்த விழிப்புணர்வை அவர்களின் பிள்ளைகளின் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

பெற்றோர்களுடன் சேர்ந்து இரவு வேளையில் சிறுவர்களும் தமது பற்களை துலக்குவதை களிப்பூட்டும் நடவடிக்கையாக அதிகளவில் மேற்கொள்ள விரும்புவதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமையால், சிக்னல் 'இரவு நேர பல்துலக்கல்' விழிப்புணர்வு திட்டத்தை பழக்கவழக்கத்தை மாற்றும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஆரம்பித்திருந்தது. சிக்னல் வர்த்தக நாமத்தின் முகாமையாளர் மிஹிர குலதுங்க இந்த விழிப்புணர்வு திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'கடந்த சில ஆண்டுகளாக சிக்னல் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் மூலம் சிறுவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெறுவதுடன், அவர்களால் பின்தொடரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சாதாரணமாக 21 நாட்கள் தொடர்ச்சியான செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே சிக்னல் இந்த புதிய பழக்க வழக்கத்தை தோற்றுவிக்க இந்த விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்திருந்தது' என்றார்.

சிறுவர்கள் காலையிலும் இரவிலும் புளோரைட் அடங்கிய பற்பசையின் மூலம் பல்துலக்குவதனால் 50 வீதம் வரை பற் சிதைவு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாய் சுகாதாரம் தொடர்பான அறிக்கையின் மூலம் சிறுவர்களின் பற்களின் தன்மை குறித்து கண்டறியப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு அமைவாக, சராசரியாக, இலங்கை சிறுவர் தமது 14 வயதிலேயே முறையான பல்துலக்கலை ஆரம்பிக்கின்றனர். இதன் காரணமாக பற்கள் தொடர்பான சிதைவுகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதற்கான கால அவகாசம் அதிகளவு காணப்படுகிறது. இலங்கையிலுள்ள 70 வீதமானோர் நாளாந்தம் பரிந்துரைக்கப்பட்ட இரு வேளைகள் தமது பற்களை துலக்கி சுத்தம் செய்து கொள்வதில்லை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், இவ்வருட திட்டம், இரவு நேர 'பிரஷ் அன்ட் டான்ஸ் சலேன்ஜ்' எனும் தலைப்பில் பிள்ளைகளையும், தகப்பன்மார்களையும் இலக்காக கொண்டு இரவு நேரத்தில் பல்துலக்கும் போது, நடனமாடி களிப்பாக முன்னெடுக்கும் வகையில் அமையவுள்ளது. இந்த திட்டம் மே மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பெற்றோர்கள் செய்ய வேண்டியது, சிக்னல் 160 கிராம் பெக்கினை கொள்வனவு செய்து, அதிலிருக்கும் 21 ஸ்டிக்கர்களை கொண்டிருப்பதுடன், பிள்ளைகளை தினமும் இரவில் பல்துலக்கச் செய்வதுடன் ஆடவும் வைக்க வேண்டும்.

தொடர்ந்து 21 நாட்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், தமது சிறுவர்களின் கலண்டரை ஸ்டிக்கர்களுடன் இணைத்து, கலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் பெட்டி இலக்;கம் 2120 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்களிலிருந்து, குலுக்கல் முறையில் 10 அதிர்ஷ்டசாலி சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டு, லுமாலாவிடமிருந்து 25,000 ரூபா பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதுடன், பெற்றோருக்கு 75,000 ரூபா பெறுமதியான பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. மேலும் 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஜூன் 1 முதல் 21ஆம் திகதி இடையே, ஒரு பொதி நிறைய விளையாட்டுப் பொருட்களை நாளாந்தம் வெற்றி கொள்வதற்கான எஸ்எம்எஸ் மூலமான பங்குபற்றலும் இடம்பெறவுள்ளது. இதற்கான நாளாந்தம் இரவில் சிறுவர்கள் பற்களை துலக்கிய பின்னர் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டத்தின் வெற்றியாளர்களுள் ஒருவரான வைத்தியர் அஜித் பெர்னான்டோ இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'சிறுவயது முதலே ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், வயது முதிர்ந்த நிலையை அடையும் பொழுது, ஆரோக்கியமானதும் செயற்றிறன் மிக்கதுமான வாழ்க்கையை கொண்டு நடத்த பெரும் உதவியாக அமையும். இதன் அடிப்படையில், சிக்னல் முன்னெடுக்கும் இந்த விழிப்புணர்வு திட்டம், பெற்றோரையும், பிள்ளைகளையும் இரவில் புளோரைட் அடங்கிய பற்பசையினால் பற்களை துலக்கச் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயற்பாடாக அமைந்துள்ளது' என்றார்.
"இரவு நேர பல்துலக்கும் விழிப்புணர்வு திட்டம் சிக்னல் மூலம் தொடர்ந்து முன்னெடுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty