2019 ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை

Huawei தடையும் தாக்கங்களும்

ச. சந்திரசேகர்   / 2019 ஜூன் 19 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் இணையத் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை வலையமைப்பு எனக் கருதப்படும் 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது, ஆதிக்கம் செலுத்துவது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவுக்கும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான Huawei  க்கும் இடையே முறுகல் நிலை உக்கிரமடைந்த வண்ணமுள்ளது.

5G என்பது, பல மில்லியன் கணக்கான IoT சாதனங்களை இணைக்கும் வலையமைப்பாக அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில், வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மில்லிமீற்றர் அலைவரிசையில் 5G தொழில்நுட்பம் இயங்கும். அதனால் மட்டுப்படுத்தப்பட்டளவு சென்றடைவு காணப்படும். எனவே, ஒரே வலையமைப்புக் கோபுரத்துடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய, பல சாதனங்களின் இணைப்புத்திறன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே, பெருமளவு முதலீடுகளுக்கான தேவை எழும். 5G வலையமைப்பை, வணிக ரீதியில் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான உட்கட்டமைப்பு, பரிசோதனை, வினைத்திறன் வாய்ந்த வகையிலான அறிமுகம் போன்றன தேவைப்படுகின்றன. 

5G வலையமைப்பை விநியோகிப்பதில், உலகளாவிய ரீதியில் முன்னோடிகளாகத் திகழ்வதற்குத் தேசங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்ட வண்ணமுள்ளன. ‘மேசன்’ ஆய்வு நிறுவனத்தால் தயார்படுத்தப்பட்ட ‘5G தயார் நிலைச் சுட்டி’யின் பிரகாரம், இந்த வலையமைப்புச் சேவைகளை அறிமுகம் செய்வதில் அமெரிக்காவும் சீனாவும் முன்னிலையில் திகழ்கின்றன. அத்துடன், இவற்றைத் தொடர்ந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

 அமெரிக்கா, சீனா இடையே பொருளாதார நெருக்கடி, உச்சக் கட்டத்தை எய்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் Huawei தயாரிப்புகளை, பயன்பாட்டை அமெரிக்க அரசாங்கம் தடை செய்திருந்தது. இது உலகளாவிய ரீதியில், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நெருக்கடி நிலை, இலங்கைக்கு இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி, அவதானம் செலுத்தப்படவேண்டியுள்ளது.

Huawei தடைக்கான காரணங்கள்

சீன அரசாங்கத்துடன் Huawei நிறுவனம் கொண்டிருந்த நெருக்கமான தொடர்புகள், அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் எனும் பாதுகாப்புக் காரணத்தை முன்வைத்து, இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. 

பாதுகாப்புக் காரணங்களுக்காக Huawei தயாரிப்புகளை, அமெரிக்கா தடை செய்திருந்த போதிலும், அவ்வாறான சம்பவங்கள் ஏதும், இதுவரையில் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை.

 தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு இடர்கள் தவிர்க்கப்பட முடியாதவை. சைபர் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்துவது, புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றினூடாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். உதாரணமாக, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள், தமது பாதுகாப்புக் கட்டமைப்புகளை உறுதி செய்ததன் பின்னர், Huawei சாதனங்களை அனுமதிப்பதற்கு உடன்பட்டுள்ளன. எச்சரிக்கைகளுக்கு மத்தியில், ஐக்கிய இராஜ்ஜியம் தமது உட்கட்டமைப்பின் பிரதானமற்ற பகுதிகளில், Huawei இன் பங்களிப்புக்கு அனுமதியுள்ளது.

 அமெரிக்காவின் Huawei தடையைத் தொடர்ந்து, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் Google நிறுவனத்தின் android அனுமதியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில், Huawei பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. 

குறிப்பாக, அலைபேசிகளில்  காணப்படும் மிகவும் முக்கியமான செயலிகளான (app) Google Chrome, Gmail, Play Store போன்றவற்றை, எதிர்காலத்தில் தமது சாதனங்களில் பயன்படுத்துவதில் சிக்கல் நிலையை Huawei எதிர்கொண்டுள்ளது. இது, உலகளாவிய ரீதியில் Huawei அலைபேசிகளின் விற்பனையில், பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

5G இன் முக்கியத்துவம்

5G இல் காணப்படும் உள்ளம்சங்களின் சிறப்புத்திறன் காரணமாக, 5G உட்கட்டமைப்புச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில், நாடுகள் ஆர்வம் செலுத்தத் தூண்டப்பட்டுள்ளன. 

இதில், வேகம் என்பது முக்கியமானது. உதாரணமாக, 3G வலையமைப்பில் HD திரைப்படம் ஒன்றைப் பதிவிறக்கம் செய்ய, 26 மணித்தியாலங்கள் வரை தேவைப்படும். அதுவே, 4G வலையமைப்பில் ஆறு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தை, 5G வலையமைப்பினூடாக, வெறும் 3.6 செக்கன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 4G சுணக்க நேரத்துடன் ஒப்பிடுகையில், 5G வலையமைப்பில் 60 முதல் 120 மடங்குகள் வேகமானதாக அமைந்துள்ளது.

இந்த, வயர்லெஸ் தொழில்நுட்பத்தினூடாக, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில், நிலைபேறான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, வீதிக் கட்டமைப்புடன் சுயமாக இயங்கும் கார்களை இணைக்கும் ஆற்றல் மற்றும் ஏனைய கார்களுடன் அவற்றின் நிலையில் பேணக்கூடிய திறன் போன்ற அம்சங்களினூடாக வருடாந்தம் சுமார் 22,000 உயிர்களை, வீதி விபத்துகளிலிருந்து பாதுகாக்கக்கூடிய தன்மை காணப்படுகின்றது.

அதுபோன்று, ரோபோ சத்திரசிகிச்சை இயந்திரங்களைக் கொண்டு, சத்திரசிகிச்சை நிபுணர்களால், உடலில் சத்திரசிகிச்சைகளை மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். கல்விச் செயற்பாடுகளில் VR நுட்பங்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.தொழிற்சாலைகளில் ரொபோக்களை இயங்கச் செய்து, அவற்றுக்கிடையே துரிதமான தொடர்பாடல்களைப் பேணி, இயங்கச் செய்வதனூடாக உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

திறன்நகரச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், உதாரணமாக, 5G தொழில்நுட்பத்தினூடாகச் சுமார் மூன்று மில்லியன் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அதனூடாக அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில், 500 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை

தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப்படும் பாரிய மாற்றங்கள், இலங்கையிலும் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கையிலும் இந்த வலையமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், சில சேவை வழங்குநர்கள் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். 2018 இல் Huawei, Ericsson ஆகியன ‘டயலொக்’ நிறுவனத்துடன் இணைந்து, தெற்காசியப் பிராந்தியத்தில் முதலாவது 5G வலையமைப்புப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தன.

 Huawei தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5G வலையமைப்பை இயங்கச் செய்வதில் காணப்படும் வாய்ப்பை, இந்தப் பரிசோதனை உறுதி செய்திருந்ததுடன், எதிர்காலத்துக்கான வளர்ச்சிக்கும் அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தது. அது போன்று ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துடன் கைகோர்த்து, 5G LTE பரிசோதனையை முன்னெடுத்திருந்தன. மொபிடெல் தமது 5G வலையமைப்பு விஸ்தரிப்புக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

இலங்கையில் 20 வருடங்களுக்கு மேலாகத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநர் எனும் வகையில் Huawei,  4G-LTE சேவைகளை ஆரம்பிப்பதில் இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தது. தெற்காசியப் பிராந்தியத்தில், இலங்கையில் 4G-LTE சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில், Huawei பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதிலும், இலங்கையில் இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்தவற்குத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நான்கு பிரதான பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகின்றது: 

1. அறிவுப்பிர்வு, மனித மூலதன அபிவிருத்தியில் முதலீடுகள். 

2. 5G, IoT, AI, cloud போன்ற நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகமும் பகிர்வும்

3. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு சர்வதேச நிபுணத்துவத்துக்கு உதவுதல்.

4. திறன் நகர் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல் என்பன இவற்றில் அடங்கியுள்ளன.

எனவே, இவ்வாறான அனுகூலங்கள் நிறைந்த திட்டங்களினூடாக, நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்க உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சந்தையாகவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவும். புத்தாக்கம், தொழில்நுட்பம் சார் பின்புலங்களை உருவாக்கி, முன்னெடுத்துச் செல்ல இது சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும்.

எவ்வாறாயினும், 5G வலையமைப்பை நிறுவுவதில், உயர் திறன் படைத்த நபர்களுக்கான தேவை,  பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் போன்றன சவால்களாகக் காணப்படுகின்றன. இந்த வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு உயர்திறன் படைத்த உட்கட்டமைப்பு வசதி தேவைப்படுகின்றது. எனவே, கிராமிய மட்டத்தில் இவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் பெருமளவு சவால்கள் நிலவும். இந்தச் சவால்களுக்கு முகங்கொடுத்து, இந்த அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு, நவீன அபிவிருத்திகளுக்கு நிகராக நாட்டைப் பேணக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புகளை நெகிழ்ச்சியானதாக இலங்கை மாற்றியமைக்க வேண்டும். 

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கு, தரவு பிரத்தியேகத் தன்மை, இணையப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தொடர்பாடல் வலையமைப்புகளில் நீண்ட கால அடிப்படையிலான முதலீடுகளை மேற்கொள்ளல்,  உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தல் போன்றன அனுகூலம் வாய்ந்தனவாக அமைந்திருக்கும்.

தொழிற்றுறைகள், முதலீட்டாளர்கள்,  ஒழுங்குபடுத்துநர்களுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமாக செயலாற்றுவதனூடாக, பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இணையத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகபொருளாதார கட்டமைப்பை நோக்கி உற்பத்திச் செயன்முறைகள் முதல் சமூக ஊடகங்கள் வரையில் உலக பொருளாதாரம் நகர்ந்த வண்ணமுள்ளது. எனவே, இந்த மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில், இலங்கை தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .