2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிக்குளம் மக்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மக்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாகவும் இடம்பெயர்ந்த நிலையில்  பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இரு  முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.  முள்ளிக்குளம் மற்றும் ஈச்சிலவத்தை சன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவற்றுள் முள்ளிக்குளம் மக்கள் கடந்த 3 வருடங்களாக இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் வாழ்வதற்கான ஆதங்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்களது கிராமத்தில் கடற்படை நிலைகொண்டுள்ளமையால் அவர்களுக்கு அந்த நிலம் கொடுக்கப்பட முடியாது என்ற நிலை காணப்பட்டு வருகின்றது.

அம்மக்கள் தற்போது தமது உறவினர்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உறவினர்களும்  தற்போது அவர்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு கூறுவதனால் அவர்கள் தற்போது பெரும் வேதனையை அனுபவிக்கின்றனர். 

அதேபோல் சன்னார் மக்கள்  வாழ்கின்ற குறிப்பிட்ட நிலப்பரப்பை இராணுவம் சுவீகரித்துள்ளது. அதற்கும் அப்பால் அவர்கள் வீதிக்கு அருகாமையில் வாழக்கூடாது என்கின்ற ஓர் நியதி சொல்லப்படுகின்றது. மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அமைச்சர் ஒருவர் அம்மக்களை ஓரம் கட்டுகின்ற நிலைமை காணப்படுகின்றது. அம்மக்களும் அதனை ஓர் பாரிய பிரச்சினையாக சந்தித்து கொண்டிருக்கின்றனர். அதற்கான தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வழிகளில் எடுத்திருந்தும் எந்த ஒரு முடிவும் வரவில்லை. இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதம் முதற்கட்டமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் மீள்குடியேற்றப்படாத மக்கள் சார்ந்த போராட்டமாக இருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--