2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தீர்மானங்களை நிறைவேற்ற செயலர் தடையாக இருக்கிறார்: சந்திரமோகன் கடிதம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சபையின் செயலாளர் தடையாகவுள்ளதாக தெரிவித்து பிரதேசசபையின் உபதலைவர் பி.சந்திரமோகன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சருக்கே நேற்று திங்கட்கிழமை அவர் மேற்படி கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றும் இ.ம.யோகராஜா என்பவர் சபையினுடைய சுமூகமான நடவடிக்கைகளுக்கும் அதனுடைய செயற்பாடுகளுக்கும் எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இதனால், சபையினுடைய நாளாந்த நடவடிக்கைகளை தவிசாளரால் கொண்டு நடத்தமுடியாமல் உள்ளது. இதனால் சபையினுடைய வருமானங்கள் பாதிப்படைவதுடன் மக்களுக்கான சேவைகளையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

இச்செயலாளருக்கு எதிராக முன்னைய தவிசாளரினால் 17.06.2013  திகதியிடப்பட்ட  கடிதம் மூலம் 19 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து உரிய ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநர்;, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளா ஆகியோருக்கும் கணக்காய்வு திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளபோதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரையில்  எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் அதில் கட்சியின் பெயர்கள் குறிப்பிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுவதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த மறுப்புத் தெரிவிப்பதும் இவருடைய தொடர்ச்சியான செயற்பாடாக உள்ளது.

மேலும் தவிசாளரினால் மேற்கொள்ளப்படும் பணிப்புரைகளை ஏற்று கடமையாற்றும் சபையின் உத்தியோத்தர்கள், ஊழியர்களுக்கெதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரிகை தயாரித்து அவர்களின் சுயவிபரக்கோவையிலிட்டு அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றார்.

அத்துடன் சபையின் அரச சொத்துக்களை வீண்விரயம் செய்தும் சபையின் வருமானங்களை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதில் காலதாமதங்களை ஏற்படுத்தியும் சபையினுடைய நாளாந்த சேவைகளை சரியாக செய்யமுடியாமலும் பொதுமக்களிடமிருந்து சபையின் மீது அபகீர்த்தியான கருத்துக்கள் எழுவதற்கும் இவரின் செயற்பாடுகள் காரணமாக அமைகின்றது. தான் ஒரு அமைச்சரின், அரச கட்சியை சார்ந்தவன் என்றும் தன்னை எவரும் எதுவும் செய்யமுடியாதெனவும் கூறி தனது சுயவிருப்பத்தின் பெயரில் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்.

எனவே, தொடர்ந்தும் இச்சபையின் சுமூகமான செயற்பாடு ஊடாக பொதுமக்களுக்கு சிறந்த சேவையை எமது சபையினூடாக வழங்குவதற்கு இவர் தொடர்ந்தும் இடையூறாக இருப்பதனால் சபையை நல்லமுறையில் கொண்டுசெல்வதற்கு மாற்று ஒழுங்குகளை மேற்கொண்டு உதவுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--