‘ஆயுதப்போராட்டத்துக்கு தந்தை செல்வாவே பிள்ளையார் சுழி போட்டார்’

-அ.கரன்

யுதப்போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வாவே ஆவார். அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான், முப்பது வருட காலத்தில் ஆயுதப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது” என, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

வவுனியா - கிடாச்சூரி கிராமத்தில் நேற்று முன்தினம் (06) மாலை தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால், அந்த இளைஞர்களின் தாய், தந்தையர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்களோ கிடையாது. தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்தான் வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள். அந்தவகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தவர்கள் கூட இந்தப் பாரம்பரியத்தில் வந்த கட்சிகள்தான். ஒரு கட்டத்தில் தனது அகிம்சைப்போர் தோல்வியடைந்ததன் பின்னர் தந்தை செல்வநாயகம் தெரிவித்திருந்தார். “‘இளைஞர்கள் என்னைப்போல் பேச மாட்டார்கள். வேறொரு மொழியிலே பேசுவார்கள்’ எனத் தெரிவித்து, ஆயுதப்போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்கள் போட்ட பிள்ளையார் சுழிதான் முப்பது வருட காலத்தில் ஆயுதப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான் உலகம் தமிழ் மக்களை திரும்பி பார்த்தது.  

“தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பல்வேறு மனித உரிமைகள் மீறப்பட்டது படுகொலைகள் நடைபெற்றது. இன அழிப்பு நடைபெற்றது என்பது ஆயுதப்போராட்டத்தின் மூலமே உலகுக்கு உணர்த்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக் கூடாது எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட பொறுமை காத்திருந்தோம். அத்துடன் முடிந்த அளவு இந்த சர்வதிகாரத் தலைமையை திருத்துவதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இல்லை வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்” என்றார். 

“இத்தேர்தல் முடிந்ததன் பின்னர், ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கம் தொடர்பான ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு வருடகால நீடிப்புடன் மீண்டும் எமது நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மீண்டும் இரண்டு வருடம் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அறிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தமிழரசுக்கட்சியை பயன்படுத்திக்கொண்டுள்ளது. அதாவது, இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் ஆகவே சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் இணைந்ததான் புதிய அரசியல் யாப்பை கொண்டு வந்திருக்கிறோம் ஆகவே இந்த யாப்பினூடாகத்தான் பிரச்சனைகளுக்கு தீர்வை காண உள்ளோம் என ஒரு செய்தியை அரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்சொல்ல தயாராக இருக்கிறார்கள்.  

“ஆகவே அப்படிப்பட்ட ஒரு படுபாதகமான வேலைக்கு நாங்கள் துணைபோக கூடாது. இந்தத் தேர்தலானது, இப்பிரதேங்களின் அபிவிருத்தியுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்ட வேண்டும். அதே போல் தமிழ் மக்களுக்கான ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை வேண்டும்” என்று அவர் கூறினார்.


‘ஆயுதப்போராட்டத்துக்கு தந்தை செல்வாவே பிள்ளையார் சுழி போட்டார்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.