‘உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தினால் உண்மையைக் கண்டறியமுடியும்’


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்களை, உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தும் போதே, உண்மையை கண்டறிய வாய்ப்பு அமையும் என, மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித எச்ச அகழ்வு பணியை நேற்று (11.) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை மற்றும்  மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆயர் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுடன் உரையாடியது தொடர்பாக, இன்று (12) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மன்னாரில் நடைபெறும் மனித எச்சங்கள் அகழ்வு பணியை மேற்கொள்ளும் இடத்துக்குச் சென்று, அது தொடர்பில் சற்று தெரிந்து கொள்வதற்காக, திங்கட்கிழமை அவ்விடத்துக்குச் சென்றிருந்தோம்.

“இதன்போது, மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, அதன் நிலையை கண்டுபிடிக்கும் நோக்குடன், இவ்வேலையை முன்னெடுத்துச் செல்வதாக, அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு வரும் இந்த எலும்புக்கூடுகள் எந்த காலத்துக்குரியது என உடன் கண்டுபிடிக்க முடியாதுபோல் தெரிகின்றது.

“இந்த இடத்தில் ஒரு பக்கத்தில் குப்பைத் தொட்டியும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  தற்போதைய அகழ்வில் இருந்து, பிஸ்கட் பக்கெட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதிலிருந்து ஓரளவு எந்த காலத்திலுள்ளது என்பதைக் கொண்டும் ஆய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“அகழ்வு செய்யப்படும் ஒவ்வொரு இடத்தையும் பகுதி பகுதிகளாகப் பிரித்து எந்தெந்த இடத்தில் இருந்து எந்த எந்த தடையங்கள்  கண்டுபிடிக்கப்படுகின்றது என்பதை பணியாளர்கள் அளவீடு செய்து வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

“மனித சரீரம் தொடர்பான விடயங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளவர்கள் மூலமே, இப்பணி நடைபெறுவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு நடக்கும் அகழ்வை நோக்கும் போது, கடல் மட்டத்துக்கு சற்று மேல் வரைக்கும் குழிகள் தோண்டப்பட்டுள்ளதையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

“நான் அங்கு கவனித்தபோது மண்டையோடுகள் வெவ்வேறாக எனக்கு தென்படவில்லை.  பெரும்பாலும் ஒரே இடத்தில் காணப்பட்டதாகவே இருந்தது.

“மன்னாரில் 14ஆம் நூற்றாண்டில் 'காலரா '  என்ற நோய் பரவிய காலத்தில் நடை பெற்ற சம்பவமா அல்லது அண்மை காலத்தில் நடைபெற்ற சம்பவமா எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கெல்லாம் உடற்கூறு பரிசோதனை செய்வதன் மூலமே உண்மை நிலையை கண்டறிய முடியும்.   

“தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு வரும் மண்டையோடுகளில் சிறுவர்களுடையதும் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.


‘உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தினால் உண்மையைக் கண்டறியமுடியும்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.