உறுப்பினரை வெளியேற்றி கதவை மூடிய தவிசாளர்

-எஸ்.என்.நிபோஜன்,  நடராசா கிருஸ்ணகுமார்

தவிசாளரின் செயற்பாட்டை விமர்சித்த உறுப்பனர் ஒருவரை, தவிசாளர், சபையிலிருந்து வௌியேற்றி, கதவை மூடிய சம்பவம் ஒன்று, கரைச்சி பிரதேச சபையில் இன்று (12) காலை நடைபெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் நான்காவது அமர்வு, இன்று (12) தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, காலை 9.30 மணிக்கு ஆரம்பமான சபை அமர்வின் போது, தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பில்  ஆராயப்பட்டது.

இதன்போது, அறிக்கை தொடர்பில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் தங்களின் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர். கடந்த  கூட்டத்தில் தாங்கள் பேசிய  முக்கிய விடயங்கள்  பல அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்தரப்பு உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் தொடர்ச்சியாக  சபை  செயற்பாடுகளை கட்சி சார்ந்து கொண்டு செல்கின்றார் எனவும் தவிசாளர்  சபை வாகனத்தை  கட்சியின் மே தினக் கூட்டத்துக்காகக் கொண்டு சென்ற விவகாரம் காரணமாக, சபை ஒத்திவைக்கப்பட்டது.  ஆனால்  அறிக்கையில்  அது தொடர்பில் எவ்வித பதிவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இவ்வாறு, ஒவ்வொரு விடயத்திலும் தவிசாளர் தனது கட்சி சார்ந்து சபையைக் கொண்டு நடத்தி செல்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  பல நடவடிக்கைகள் சபைக்குத் தெரியாமலே  இடம்பெற்று வருகின்றன.  சபையில் 35 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 21 வட்டாரத்தில் இருந்து நேரடியாக வும் ஏனைய 14 பேரும் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்பட்டு வந்தவர்கள்.  ஆனால் தவிசாளர், சபை செயற்பாடுகளை வட்டார உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி கொண்டு செல்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டினர்.

தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைப்  பாரபட்சமாக  நடத்துகின்றார் எனவும்  எனவே தவிசாளர்  நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரினர்.

இதனால் சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதிலளிக்காது வேறுவிடயங்களுக்கு சபையைக் கொண்டு செல்ல முற்பட்ட போது  அதற்கு இடமளிக்காது எதிர்தரப்பினர் தங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

இதன்போது எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்தரப்பு உறுப்பினர் ஒருவரை தவிசாளர் ஒரு மணித்தியாலயத்துக்கு சபையிலிருந்து வெளியேற்றி, சபைக் கதவை மூடினார்.

இதன்போது கடும் வாக்கு வாக்குவாதத்தில்  இரு தரப்பின்னர்களும் ஈடுப்பட்டபோது,  தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சத்தியானந்தன், “போனஸ் உறுப்பினர்கள் வாயை மூடிக்கொண்டு வெளியே  செல்லுங்கள்” எனக் கூறியதால்,  சபையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

பின்னர், எதிர்தரப்பில் உள்ள சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 11 பேரும் வெளியேறிச் சென்று, ஒரு மணித்தியாலயத்துக்குப் பின்னர் மீண்டும் சபையில் வந்து அமர்ந்துகொண்டனர்.


உறுப்பினரை வெளியேற்றி கதவை மூடிய தவிசாளர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.