எலும்புக்கூட்டு அகழ்வு பணி இடை நிறுத்தம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்றுடன் (14) 14 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்ற நிலையில் இன்று மதியம் குறித்த அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறித்த அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் நகர் பகுதியில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.

மன்னார் நீதவான் முன்னிலையில், எனது தலைமையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும்,   களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவாகுழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை (14) மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது. மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி பணிகள் தொடர இருக்கின்றது.

கடந்த 14 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது பல்வேறு மனித எலும்புகள் மீட்கப்பட்டதோடு தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது வரை மனித எலும்புகள், மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ள போதும் தற்போது வரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் கருத்துக் கூற முடியாது. அகழ்வு முழுமை பெற்றதன் பின்பே தெரிவிக்க முடியும்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது குறித்த விற்பனை நிலைய வளாகம் படல் பகுதியை சார்ந்தமையினால் குறித்த வளாகத்தில் இருந்து கடல் மட்டத்துக்குக் கீழும், கடல் மட்டத்துக்கு மேல் பகுதியிலும் இரு பிரிவுகளாக மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது மீட்கப்பட்ட மனித எலும்புகளின் கால நிர்ணயத்தை அளவிடும் காபன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மீட்கப்பட்ட மனித எலும்பு மாதிரிகள் தற்போது மன்னார் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது.

தற்போது குறித்த அகழ்வுகளில் இருந்து தடயங்களாக 2 சிறிய மணிகள், சட்டி, பானை, 2 பொலித்தீன் பை, 2 மோதிரத்தை ஒத்த பொருட்கள், 3 சிறிய அளவிலான கருத்த நிற பொருட்கள் என்பன அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(18) வழமை போன்று காலை 7.30 மணிக்கு அகழ்வு பணிகள் இடம் பெறும்.

அகழ்வு பணிகள் முழுமை பெற்றதன் பின்னர் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் முழுமையான விபரம் தெரிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


எலும்புக்கூட்டு அகழ்வு பணி இடை நிறுத்தம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.