மானியத்தில் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்

- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தில் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான பணம் செலுத்தி முடிக்கப்படாத அனைத்து உழவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர்  மாவட்டங்களுக்கு பணித்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் நிலைய ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2010 மற்றும் 2012 ஆகிய காலப்பகுதியில் பொருளாதார அமைச்சும் யப்பான் நிறுவனம் ஒன்றும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள 8 கமநல வேசவைகள் நிலையத்தால் 127 விவசாயிகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

5 இலட்சம் பெறுமதியான  இரு சக்கர உழவு இயந்திரத்தை பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவர்  இரண்டு இலட்சத்து 50 ரூபாயை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி உழவு இயந்திரங்களை பெற்றுக்கொண்ட ஒரு சில விவசாயிகளை தவிர பெரும்பாலனவர்கள் தவணைப்பணத்தை செலுத்தி முடிக்கவில்லை.

ஆனாலும் கடந்த வாரம் கிளிநொச்சி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடலில் மாவட்ட கமநல ஆணையாளர் ஆயகுலன், எதிர்வரும் நவம்பர் மாதத்துள் பணத்தை செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மாவட்டத்தில் நிலவில வருகின்ற வறட்சி, வறுமை, உற்பத்தியாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை போன்ற காரணங்களால் விவசாயிகளால் குறித்த பணத்தை செலுத்த முடியாது போய்விட்டது. பலரது இரு சக்கர உழவு இயந்திரம் பழுதடைந்த போது, அவற்றை திருத்தி பயன்படுத்துவதுக்கான உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை என்பவற்றால் அவற்றை கொண்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது.  இதனாலேயே பணத்தை செலுத்த முடியவில்லை என மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் மிக மோசமான நிலைமையை அமைச்சு, உயரதிகாரிகள் மட்டங்களுக்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில்  தீர்மானங்களை  கொண்டுவருவதுக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

 


மானியத்தில் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.