வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

- க.அகரன்

“வவுனியா மாவட்டத்தில் 2,000 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இருந்து உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலர்கள் 155 பேரை அழைத்துள்ளோம். அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என வவுனியா மாவட்டச் செயலர் சேமரத்தின விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபை தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என்பவற்றுக்கு 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதுக்கான தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களும் இணைந்து தேர்தல் கடமைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.

நாளை (09) வவுனியா மாவட்டத்தில் உள்ள 148 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். தற்போதைய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த அந்த வாக்களிப்பு நிலையங்களில் தான் வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறும். இருந்தாலும் நடைமுறை சார்ந்த பிரச்சனைகள் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 56 வாக்கு எண்ணும் நிலையங்களை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார முடிவுகள் மாவட்ட செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் முடிவுகள் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகம் ஊடாக வெளியிடப்படும்.

இந்த தேர்தல் நடவடிக்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 2,000 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இருந்து உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலர்கள் 155 பேரை அழைத்துள்ளோம். வவுனியா மாவட்டம் முழுவதும் 39 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒவ்வொரு உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரை நியமித்துள்ளோம். வாக்களிப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் என 7 மகா வலயங்களையும் உருவாக்கியிருக்கின்றோம். 10 ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும் இடம்பெறும்.

போலிஸார், விசேட அதிரடிப்படையினர் என 1500 பேர் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.


வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.