விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு?

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில், இடம்பெற்ற விபத்தொன்றில் மாணவன் ஒருவர் உயிரிழக்கவும் ம‌ற்றொரு மாணவன் காயமடையவும் காரணமாக இருந்த சாரதிக்கும் பொலிஸாருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில், நேற்று (09) மாலை வேகமாகப் பயணித்த கனரக வாகனம் ஒன்று வேகக்கட்டுபாட்டை இழந்து, தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், ஒரு மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவன் படுகாயமடைந்தான். 

முழங்காவில் மகா வித்தியாலயத்தில் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற முழங்காவில் - இராஜபுரத்தைச் சேர்ந்த உதயகாந்தன் பிரசாந் என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்துக்குக் காரணமாக இருந்த சாரதி, அண்மையில் முழங்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாகவும் எனினும், பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து சட்டத்தின் முன்னிறுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த நபர், சிறுவன் ஒருவனுக்கு வலுக்கட்டயமாக மதுபானம் வழங்கியதாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்களால் பொலிஸாரிடம் முறையிட்டபோதும், அது தொடர்பில், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த நபருக்கும் பொலிஸாருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வதில் மேற்குறித்த காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.   


விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.