X

X
யாழ்ப்பாண அபிவிருத்திச் செயற்றிட்ட வரைவு

-எஸ்.நிதர்ஷன், நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாண நகரத்தை, எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ். 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம், நேற்று (06) மாலை வெளியிடப்பட்டது.

யாழ். நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த செயற்றிட்ட வரைபடத்தை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தலைமையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வெளியிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “சில திட்டமிடல் நிபுணர்களுடன் இணைந்து, குறித்த செயற்றிட்டத்தை உருவாக்கியுள்ளோம். எமது கட்சி, யாழ். மாநகரசபையைக் கைப்பற்றினால், 2020ஆம் ஆண்டுக்குள் யாழ். நகரை, நேர்த்தியாக வடிவமைக்க முடியும்.

"குறிப்பாக யாழில் இரண்டு நவீன சந்தை கட்டடத் தொகுதிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதில் ஒன்று குருநகர் சின்னக்கடையும், மற்றையது யாழ். நகரில் இயங்கி வருகின்ற சந்தையையும் நவீனமயமாக்கப்படும். மேலும், பிரதானமாக மீள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு சூழலுக்குத் தீங்கில்லாத வகையில், திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம், நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். இதன் மூலம், கல்லுண்டாயில் கொட்டப்படும் கழிவுகளுக்கு, நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட முடியும்.

“இது தவிர, யாழ். நகரில் உள்ள வீதிகள் அனைத்துமே, நடைபாதைக்கு என இடம் ஒதுக்கப்படாமல்தான் காணப்படுகின்றன. இதனால் மக்கள், வீதிகளிலேயே நடந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. நோயாளர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே, எமது திட்டத்தில், நகரத்தில் காணப்படுகின்ற அனைத்து வீதிகளுக்கும் நடைபாதைகள் அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“மேலும், நகரில் வாகனத் தரிப்பிடம் ஒன்று நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்த வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படுமாக இருந்தால், வீதிகளின் நடுவே வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படாது.

"அத்துடன், யாழ். மாநகரத்துக்குள் காணப்படும் வாய்க்கால்கள் அனைத்துமே, மாசடைந்த நிலையில் தான் காணப்படுகின்றன. எனவே, சிறந்த வடிகாலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம், டெங்குக் காய்ச்சல் உட்பட பல நோய்களின் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பிலும் எமது திட்ட வரைவில் யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

“இவற்றுக்கு என, இரண்டு நிபுணர் குழுக்களை உருவாக்கி, பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானித்துள்ளோம். குறிப்பாக, நகர அபிவிருத்தியில் ஏற்படுகின்ற சட்டச் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, சட்டத்தரணிகள் கொண்ட குழுவும், நகர திட்டமிடல் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், பொருளியல் நிபுணர்கள் என்போரை உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

“மேலும், எம்மால் கைப்பற்றப்படும் உள்ளூராட்சி சபைகளையும், ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த உறவுகள் பொறுப்பெடுத்து, அந்தச் சபைகளின் கிராம, நகர அபிவிருத்திக்கு நிதி, துறைசார் வளங்கள், பயிற்சிகள், அபிவிருத்திகள் வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்றார்.


யாழ்ப்பாண அபிவிருத்திச் செயற்றிட்ட வரைவு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.