2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நிம்மதி பறிபோகும் அபாயம்’

வடமலை ராஜ்குமார்   / 2017 மே 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 “இந்த நாட்டின் சமாதானத்துக்கு, பௌத்த கடும் போக்கு இனவாதிகள் அச்சுறுத்தலாக உள்ளனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சில இனவாதச் செயற்பாடுகள், தற்போது உக்கிரம் அடைந்து வருகின்றன. இதனால், நிம்மதி பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது” என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.  

“இந்த நிலைமையையே கட்டுப்படுத்த முடியாமல் நிற்கின்ற ஜனாதிபதியும் பிரதமரும், மாகாண அதிகாரங்களைத் தந்து விடுவரா? என்ற கேள்வி உருவாகியுள்ளது” என்றும் கூறினார்.   
கிழக்கு மாகாண சபையின் 77ஆவது அமர்வு, சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில், நேற்று (23) நடைபெற்றது.  

இதன்போது, முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் இனவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் இனவாதக் குழுக்களைத் தடைசெய்யுமாறும் கோரி, அவசரப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.  

இந்தப் பிரேரணையை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகிய மூவரும் இணைந்தே முன்வைத்தனர்.   

அதன் பின்னர் அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்தும், முஸ்லிம் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் பௌத்த இனவாதக் குழுவின் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மையின மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.  

அத்துடன், இரத்த ஆறு ஓடிய கறுப்பு ஜூலையை மீண்டும் ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.   

மேலும், இந்த நாட்டில் உருவாகவுள்ள புதிய அரசியல் யாப்பில் அனைத்து இன மக்களுக்கும் சமனான உரிமை வழங்குமாறு அமைவதே இதற்கு நல்ல தீர்வாக அமையக்கூடும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X