அபிவிருத்திக்கு பெரும் சவாலாகும் நகர குடிசைகள்: சன்யோகிதா ஏட்ரி
18-05-2014 12:11 PM
Comments - 0       Views - 977

18SG நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான சன்யோகிதா ஏட்ரி

டாடா ஹவுசிங் நிறுவனத்தின் மூலம் கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிதாக நவீன வசதிகள் படைத்த தொடர்மனைகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளமை தொடர்பில் கடந்த வாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதில் டாடா ஹவுசிங் நிறுவனத்துக்கும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குமிடையில் உடன்படிக்கை கைச்சாத்தானமை தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. டாடா குழுமம் என்பது இந்தியாவின் முன்னணி வர்த்தக தாபனங்களில் ஒன்று, இலங்கையிலும் டாடா குழுமத்தைச் சேர்ந்த வெவ்வேறு வர்த்தக செயற்பாடுகள் காணப்படுகின்றன.

டாடா ஹவுசிங், இலங்கையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிர்மாண செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதான காரணகர்த்தாவாக இந்தியாவின் வர்த்தக பெண்மணி ஒருவர் திரைக்குப் பின்னாலிருந்து தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

இலங்கை அரச தரப்புக்கும் (நகர அபிவிருத்தி அதிகார சபை) டாடா ஹவுசிங் குழுமத்துக்கும் இடையே இணைப்பாளராக 18SG நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான சன்யோகிதா ஏட்ரி பணியாற்றியிருந்தார்.

இவர் கடந்த வாரம் கொழும்பில் தங்கியிருந்த வேளையில், அவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு தமிழ்மிரர் வணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் பகுதிக்கு கிடைத்தது. இதன்போது சன்யோகிதா கருத்து தெரிவிக்கையில்,

”அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை பொறுத்தமட்டில் நகர் மத்தியில் காணப்படும் குடிசைகள் என்பது நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக நாட்டின் அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துரித கதியில் அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் போது, நாட்டின் பிரதான நகரத்தில் பெறுமதி வாய்ந்த பிரதேசங்களில் காணப்படும் குடிசைகள் காரணமாக, நாட்டின் அபிவிருத்தி முடங்கி விடுகிறது என்றே குறிப்பிட வேண்டும். இதுபோன்ற சவால்கள் நிறைந்த செயற்பாட்டை நாம் சமாளித்து, நாட்டுக்கும் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் நவீன வசதிகள் படைத்த தொடர்மனைகளை அமைத்துக் கொடுக்கும் செயற்றிட்டங்களை நாம் பரிந்துரை செய்கிறோம்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் எமது 18SG நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் ஆரம்பமாகியது. இந்தியாவில் வெவ்வேறு நகர் பகுதிகளில் நாம் இதுபோன்ற அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். இதன் காரணமாக எமக்கு சீஷெல்ஸ், மாலைதீவுகள் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் வெவ்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கக்கூடிய வகையில் விலை மனுக்கோரல்களின் மூலம் வாய்ப்பு கிடைத்திருந்தது.

எமது முதலாவது சர்வதேச பாரிய செயற்றிட்டம் 2009ஆம் ஆண்டு ஆரம்பமானது. மாலைதீவுகளில் 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் இதுவாகும். இதற்காக கார்கவால் எனும் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் பெறப்பட்டிருந்த போதிலும், இந்த திட்டத்தின் முதலீட்டுக்கு போதியளவு வசதிகளை அந்நிறுவனம் கொண்டிராமையால், டாடா ஹவுசிங் எம்முடன் இந்த திட்டத்தில் இணைந்து கொண்டது. இதனை தொடர்ந்து, தொடர்ச்சியாக டாடா ஹவுசிங் நிறுவனத்துடன் இணைந்து நாம் பல்வேறு நிர்மாண செயற்றிட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

இலங்கையை பொறுத்தமட்டில், 2007ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் Reyl குழுமம், தென் பகுதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் மரீனா திட்டத்தை செயற்படுத்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்காக அவர்கள் இலங்கை வந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக, அவர்கள் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க பெரியளவில் ஈடுபாட்டை காண்பிக்கவில்லை.

இலங்கையுடன் நான் சுமார் 9 ஆண்டுகளாக தொடர்புகளை பேணி வருகிறேன். இந்தியாவை அண்மித்த நாடு எனும் வகையில் எனது இரண்டாம் வீடாக நான் இலங்கையை கருதுகிறேன். இலங்கை வாழ், பின்தங்கிய நிலையிலிருக்கும் மக்களின் வாழ்வில் புதுமலர்ச்சியை ஏற்படுத்த என்னாலான பங்களிப்புகளை வழங்க வேண்டும் என கருதினேன். இதற்காக கொம்பனித்தெரு பகுதியில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது, குடிசைகளை அகற்றி, அப்பகுதியில் நவீன வசதிகள் படைத்த தொடர்மனைகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பரிந்துரைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் எழுந்தது. நான் இந்த செயற்பாட்டில் டாடா ஹவுசிங் மற்றும் இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய இரு தரப்பினரையும் இணங்கச் செய்ய சுமார் 3 வருடங்களாக கடுமையாக உழைத்திருந்தேன்.

இந்த செயற்றிட்டத்தின் பிரகாரம், தற்போது கொம்பனித் தெரு பகுதியில் காணப்படும் குடிசைகளில் வதிவோருக்கு பிரிதொரு பகுதியில் வசிப்பதற்கு போதியளவு கொடுப்பனவு வழங்கப்பட்டு, அவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து படிப்படியாக அகற்றப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, 8 ஏக்கர் கொண்ட இந்த பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, 3 ஏக்கர் பகுதியில் பொது மக்களுக்கான நவீன வசதிகள் படைத்த தொடர்மாடித் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், எஞ்சிய 5 ஏக்கர் பகுதியில் நவீன வசதிகளை கொண்ட ஹோட்டல்கள், சினிமா, களியாட்டம் மற்றும் ஷொப்பிங் போன்ற பகுதிகளை கொண்ட தொடர் அமையவுள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படும் தொடர்மனைகள், ஏற்கனவே இந்த பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த நிலத்தின் அளவுக்கு ஏற்ப வழங்க நாம் முன்வந்துள்ளோம். இவை முற்றிலும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக, நிலப்பகுதியில் 400 சதுர அடி பரப்பில் தமது இல்லத்தை இந்த பிரதேசத்தை சேர்ந்த வாசி ஒருவர் கொண்டிருந்தால், அவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மனையில் 400 சதுர அடிப் பரப்பில் அமைந்த வீடொன்று வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் பகுதி அதிகமாக கூட இருக்கலாம்.

நாம், மும்பாய் நகரில் இவ்வாறு மேற்கொண்டிருந்த திட்டத்தின் போது, மீள குடியமர்த்தப்பட்டவர்கள், உயர்ந்த பெறுமதிக்கு தமது வீடுகளை விற்பனை செய்திருந்தனர். எனவே எதிர்காலத்தில் இந்த பகுதிகளிலும் இது ஒரு பிரச்சினையாக அமையக்கூடும். எனினும் தொடர்மனைகளில் வசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் நாம் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதுவரை இரு செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நிர்மாணப்பணிகள் 30 மாதங்களில் பூர்த்தியடையும் என நாம் எதிர்பார்த்துள்ளோம். இதற்கு மேலாக நாம் இரு திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இரு பகுதிகளை நாம் இனங்கண்டுள்ளோம். BCC காணி மற்றும் சென்ரல் சினிமா காணி போன்றன இந்த பகுதிகளாகும்” என்றார்.

நேர்காணலும், படமும்: ச.சேகர்

மாலைதீவுகளில் டாடா ஹவுசிங் மற்றும் 18SG ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த 500 வீடுகள் திட்டத்தின் அனிமேஷன் அமைப்பு.
"அபிவிருத்திக்கு பெரும் சவாலாகும் நகர குடிசைகள்: சன்யோகிதா ஏட்ரி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty