கடற்றொழில் செய்யும் பெண்
23-07-2014 09:36 AM
Comments - 0       Views - 1445

-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
உலகில் பெண்கள் பல்வேறு சாதனைகள் படைத்துவரும் இக் காலப்பகுதியில் 36 வருடங்களாக பெண்ணொருவர் தனியாக கடலுக்கு சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார்.
 
புத்தளம், முள்ளிபுரம் கிராமத்தில் வதியும் ஆர். பாத்திமா எனும் 54 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார். இவர் மாலை 5.00 மணிக்கு கடலுக்கு சென்று, அடுத்த நாள் காலையிலேயே கரை திரும்புவது வழமையாகும்.
 
குறித்த பெண் அவருடைய அனுபவம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார்.
 
''நான் கல்வி கற்கும் போதே மீன்பிடித்தொழிலில் அதிகம் ஆர்வமுடையவளாக இருந்தேன். இதனால் கல்வியில் அதிக அக்கறை காட்டவில்லை. எனது தந்தை மீன்பிடித்தொழில் ஈடுப்பட்டதினால் எனக்கு அத்தொழிலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
 
எனது 18 வயதில் நான் முதலாவதாக கடலுக்கு வள்ளத்தில் செல்ல ஆரம்பித்தேன். தற்போது வயது 54. இது வரையும் நான் தொடர்ச்சியாக தனியாக வள்ளத்தில் சென்று மீன் பிடித்து வருகின்றேன்.
 
ஆரம்பத்தில் தனியாக கடலுக்கு செல்வது பயமாக இருந்தது. எனினும் தைரியத்தினை வரவழைத்துக்கொண்டு கூரிய ஆயுதங்களினையும் தற்பாதுகாப்புக்கு எடுத்து கொண்டுதான் கடலுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
 
தற்போது இத் தொழில் வழக்கமாகி விட்டது. இரவு சாப்பாட்டினை எடுத்துக்கொண்டுதான் நான் கடலுக்கு செல்வது வழக்கம். இரவு வேளைகளில் மின் விளக்கினூடாகவே மீன் பிடிப்பது வழக்கம். என்னிடம் எண்ணெய் விளக்குகள் இல்லை. எனவே இரவு நேரமாகியதும் என்னை நோக்கி ஏனைய மீனவர்கள் வருகை தந்து எனது உணவினை பெற்று அவர்களுடைய எண்ணெய் விளக்கில் சூடாக்கி தருவார்கள். அதனை நான் சாப்பிடுவேன்.
 
நான் மீன் பிடிக்க சென்றபோது சுழல் காற்றுகளிலும் புயல் காற்றுகளிலும் சிக்கி உயிர் தப்பிய அனுபவங்களும் உண்டு. ஒருமுறை சுழற்காற்றில் சிக்கி படகின் துடிப்பான் கடலுக்குள் வீழ்ந்து விட்டது. அதனையடுத்து படகினை பிடித்தப்படி அதில் அமர்ந்து கொண்டேன். பின், படகு ஒரு காட்டுப்பகுதியில் சென்றபோது அங்கிருந்த மரம் ஒன்றின் கிளையினை பிடித்துக்கொண்டேன். பிறகு காற்று ஓய்ந்த பின், சிரமத்துக்கு மத்தியில் அதிகாலை மூன்று மணிக்கு கரையினை வந்தடைந்தேன்.
 
நான் பிடிக்கும் மீன்களினை எனது கணவருக்கு நான் விலைக்கு வழங்குவேன். அவர் அதனை விற்று விட்டு வருவார். 6 மாதங்களுக்கு மீன் அதிகளவு பிடிக்கலாம். 03 மாதங்கள் இறால் மற்றும் நண்டு என்பன பிடிக்கலாம். 03 மாதம் தொழில் மந்தமாக காணப்படும். ஒரு நாளில் 5,000 ரூபாவும் உழைத்ததுண்டு. அதே மாதிரி 500 ரூபாவும் உழைத்ததுண்டு. சில சமயம் 5 ரூபாவுக்கு கூட மீன் கிடைக்காமல் திரும்பியதும் உண்டு.
 
நான் மீன்பிடித்தொழிலில் ஈடுப்படுவதினை எனது கணவரோ எனது பிள்ளைகளோ தடுக்கவில்லை. என்னுடைய மகள்மார்கள் மூவருக்கும் கடலில் வள்ளத்தினை செலுத்த கற்றுக்கொடுத்துள்ளேன். அவர்களும் கடலில் வள்ளத்தினை செலுத்த தகுதியுடன் உள்ளார்கள். 
 
கடலுக்கு சென்று வந்த பின் அல்லது ஓய்வு நாட்களில் தென்னை ஓலைகளினை இழைப்பது, உப்பளத்திற்கு தொழிலுக்கு செல்வது உட்பட பல்வேறு கூலி வேலைகளுக்கும் நான் செல்கின்றேன்.
பெண்கள் எந்தவிடயத்துக்கும் தாங்கள் பெண்கள் என்ற மனப்பாங்குடன் பின்நிற்க கூடாது. துணிவுடன் செயற்பட முன்வரவேண்டும்'' என அவர் மேலும் தைரியத்துடன் கூறுகிறார்.
"கடற்றொழில் செய்யும் பெண்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty