சமூக பிரச்சினைகளாக தலைதூக்கும் நிதி நிறுவனங்கள்
10-08-2014 03:36 PM
Comments - 0       Views - 890
-ச.சேகர்
 
நாட்டில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவிய யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து, குறித்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு அதிகளவு தமது கிளைகளை திறப்பதில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்தன. குறித்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தல் தொடர்ந்திருந்தையடுத்து அவர்களின் வைப்புகளை பெற்றுக் கொள்வது ஆரம்பத்தில் இந்த நிறுவனங்களின் இலக்காக அமைந்திருந்தன. 
 
இதற்கு காரணம், கொழும்பை மையமாக கொண்டியங்கிய நிறுவனங்களின் எண்ணம், குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகளிடமிருந்து அதிகளவு பணம் உதவியாக கிடைக்கும், அவற்றை பேணி வைப்பதற்கு அவர்கள் நிதி நிறுவனங்களை நாடுவார்கள் என்பதாக அமைந்திருந்தது. ஆனாலும் ஒரே நேரத்தில் சகல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறித்த பிரதேசத்தில் தமது பிரசன்னத்தை மேற்கொண்டமையால் அந்நிறுவனங்களுக்கிடையிலான போட்டிகரத்தன்மையின் காரணமாக கணிசமானளவு இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
 
இதன் காரணமாக, மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை உதவிகளை வழங்குகிறோம் எனும் தொனிப்பொருளில் பெருமளவான நிறுவனங்கள் கடன் வழங்கல் மற்றும் லீசிங் வழங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தன. 
 
வெவ்வேறு வகையான விளம்பர நுட்பங்கள், சந்தைப்படுத்தல் வார்த்தைகள் போன்றவற்றின் மூலம் மக்களை அணுகி, ஆசை வார்த்தைகளை வழங்கி தமது மாதாந்த விற்பனை இலக்குகளை எய்துவதற்கு இந்த நிறுவனங்களில் பணியாற்றிய விற்பனை அதிகாரிகள் முறையான ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலேயே கடன்களை வழங்கியிருந்தனர்.
 
சாதாரணமாக கடன் அல்லது எந்த வகையான நிதி வழங்கல்களையும் நிதிசார் நிறுவனமொன்று (வங்கி உள்ளடங்கலாக) மேற்கொள்ளும் போது கடுமையான பின்புல தேடல்களை மேற்கொள்வது வழமை. குறிப்பாக பெற்றுக் கொள்ளும் தொகையை குறித்த தவணைகளில் தவறாமல் மீள செலுத்தக்கூடிய தன்மை, பெற்றுக் கொள்ளும் தேவை, உத்தரவாதமளிப்போர் மற்றும் முகவரி மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், வருமானம் என பல விபரங்களை குறித்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டி ஆராய்ந்த பின்னரே பண வழங்கல்களை மேற்கொள்ளும். 
 
ஆனாலும், சில பிரதேசங்களில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கரடியனாறு போன்ற பகுதிகளில் இவ்வாறான முறையான தேடல்கள் எதுவுமே மேற்கொள்ளாமல், மக்களுக்கு நிதிகளை வழங்கி, பின்னர் அவர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு வெவ்வேறு விதமான கடுமையான பிரயோகங்களை குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கொண்டிருந்ததன் காரணமாக பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையை கூட எதிர்நோக்கியிருந்ததாகவும், இதன் காரணமாக, செங்கலடி பிரதேச செயலாளர், குறித்த சில நிறுவனங்களுக்கு பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு விஜயம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலைகளும் எழுந்திருந்ததாக அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த நாம் அவதானித்திருந்தோம். 
 
அரசசார்ந்த நிதி நிறுவனங்களில் கடன்களையும் குத்தகைகளையும் பெற்றுக் கொள்வது என்பது சற்று காலம் எடுக்கும் கடினமான செயற்பாடு என பொதுவாக கருதும் மக்கள், தனியார் நிறுவனங்கள் துரித கதியில் தமக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் என கருதி, பெருமளவு மக்கள் தனியார் நிறுவனங்களையும் நாடுவதையும் பரவலாக அவதானிக்க முடிகிறது.
 
மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய வழிகாட்டியாக அமைய வேண்டிய நிதி நிறுவனங்கள், இவ்வாறான தமது விற்பனை இலக்குகளை எய்துவதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையை தவிர்த்துக் கொள்வது உண்மையில் சமூக அபிவிருத்திக்கும், நிறுவனங்களின் நீண்ட கால அடிப்படையிலான செயற்பாட்டுக்கும் வழிகோலுவதாக அமையும். 
"சமூக பிரச்சினைகளாக தலைதூக்கும் நிதி நிறுவனங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty