கடன் தரப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி ஒரு பார்வை
10-08-2014 03:45 PM
Comments - 0       Views - 1881
கடன் தரப்படுத்தல் (Credit rating)
நிறுவனங்கள் தமது செயற்பாட்டிற்குத் தேவையான நிதிமுதலை, உரிமை நிதியாக அல்லது கடன் நிதியாக அல்லது இரண்டும் இணைந்ததாக திரட்டிக்கொள்கின்றன. பொதுவாக பல்வேறுபட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் வழங்கும் நிறுவனங்களினால்; வேறுபட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன.
 
இச்சந்தர்பத்தில் கடன் வழங்கும் நபர் அல்லது நிறுவனம் கடன் பெறும் நபரின் அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையினை (Credibility) உறுதிப்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது. இவ் உறுதிப்படுத்தல்கள் வேறுபட்ட தோற்றப்பாடுகளின் அடிப்படையில் அமையப் பெறலாம். அதாவது உடமைகளைப் பிணையாகக் கொடுத்து கடன் திரட்டப்படும் சந்தர்ப்பங்களில் கடனை மீட்க முடியாது போனால் பிணையாகக் கொடுத்த சொத்துக்களை இழப்பதன் ஊடாக அல்லது அவற்றினை விற்பனை செய்வதூடாக கடன்பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ள முடியும். 
 
மாறாக வாக்குறுதிகளை மட்டும் வழங்கி கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் அதாவது கடன்கொடுத்தவர்கள், கடன் வாங்கிய நபர் அல்லது நிறுவனம் வாங்கிய கடன்பத்திரத்திற்கான முதல் மற்றும் வட்டியினை உரியகாலத்தில்  மீளச்செலுத்தும் உயரிய ஆற்றலினை உறுதிப்படுத்தல் வேண்டும். இது நிறுவனங்களின் கடன்தீர்க்கும் ஆற்றல் (Credit worthiness) எனப்படும்.
 
இங்கு கடன்தீர்க்கும் ஆற்றல் கடன்தரப்படுத்தல் (Credit rating) ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது. கடன்தரப்படுத்தல் என்பது நபர் அல்லது நிறுவனம் கடன் தீர்க்கும் ஆற்றலினை தரப்படுத்தி, உறுதிப்படுத்தி வழங்குகின்ற ஒருவகையான சான்றிதழ் ஆகும். இச்சான்றிதழ் பொதுவாக நிறுவனத்தின் கடந்தகால நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்கால சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுசெய்து நீண்ட மற்றும் குறுங்கால அடிப்படையில் கடன் தரப்படுத்தல் நிறுவத்தினால் வழங்கப்படுகின்றது. 
 
கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் (Credit rating agencies)
இலங்கைக் கம்பனிச்சட்டதிற்கு அமைவாக பதிவுசெய்யப்பட்டு செயற்படும் கம்பனிகளின் கடன் தீர்க்கும் ஆற்றலை (Credit worthiness) தரப்படுத்தி உறுதிப்படுத்தல்களை வழங்கும் நோக்கில் இலங்கைப் பிணைகள் பரிமாற்று ஆணைக்குழுவின் அனுமதியுடன் தன்னிச்சையாகச் செயற்படும் நிறுவனங்கள் கடன் தரப்படுத்தல் முகவர்கள் எனப்படும். 
 
இலங்கையில் கடன் தர உறுதிப்படுத்தல்களை வழங்க Fitch Rating Lanka மற்றும் RAM Rating Lanka நிறுவனங்கள் கடன் தரப்படுத்தல் முகவர்களாகச் செயற்படுகின்றன.          
 
தரக்குறியீடுகள் (Rating code) 
நிறுவனங்களின் கடன் தீர்க்கும் ஆற்றலினை மதிப்பீட்டு எல்லைகளுக்கு அமைவாக (Scales) குறியீட்டு ரீதியாக வகைப்படுத்தி ஒரேபார்வையில் வெளிப்படுத்தும் அளவீடு தரக்குறியீடு எனப்படும். உதாரணமாக தற்போது செலான் வங்கி (A-) எனவும், இலங்கைக்கான தரக்குறியீடு (BB-) எனவும் குறிப்பிடமுடியும். 
 
பொதுவாக நீண்டகால கடன்பிணைப் பத்திரங்களுக்கான கடன் தரப்படுத்தல் 'AAA' தொடக்கம் 'D' வரை அமைந்து காணப்படும். இங்கு 'AAA' தரக்குறியீடானது அதியுயர் கடன் உத்தரவாதத்தையும், 'D' தரக்குறியீடானது முழுமையான கடன் நட்ட அச்சத்தையும் உணர்த்தி நிற்கின்றது. (மேலதிக தகவல்களுக்கு www.Ram.com.lk).
 
முக்கியத்துவம் (Importance)
கடன் தரப்படுத்தல் நிறுவனங்களினால் வழங்கப்;படுகின்ற நிதி நிறுவனங்கள் தொடர்பான தரக்குறியீடுகள் அந்நிறுவனத்தின் நற்சான்றிதழ்களாகக் கொள்ள முடியும். குறிப்பாக நிதி நிறுவனங்கள் தமது முதல் நிதியினைப் போல் பலமடங்கு நிதியினை கடனாக வழங்குகின்றன, கடனாகப் பெறுகின்றன (வைப்புக்கள்). சில சமயங்களில் கடன் எல்லைகள் நிறுவனங்களின் இயலுமைக்கு அப்பாற்பட்டதாக அமையும் நிறுவனங்கள் தமது சமச்சீர் தன்மையை இழக்கும் சந்தர்ப்பங்கள் எற்பட வாய்ப்புக்கள் உண்டு. எனவே நாம் பணத்தை வைப்புச்செய்கின்ற மற்றும் பங்குகளில் முதலீடு செய்கின்ற சந்தர்ப்பங்களில் தரக்குறியீடுகளை உறுதிப்படுத்தல் மிகவும் அவசியம். மேலும் ஒவ்வொரு காரணிகளையும் தொடர்புபடுத்தி தரக்குறியீடுகளின் முக்கியத்துவத்தை விபரிக்க முடியும். இருந்தும் ஆக மொத்தத்தில் சிறந்த முதலீட்டுத் தெரிவின் அடையாளமாக நாம் பயன்படுத்த முடியும்.
 
தொகுப்பு:- மு. திலீபன் (கொழும்பு பங்குப் பரிவர்த்தனை - யாழ். கிளை)
"கடன் தரப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி ஒரு பார்வை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty