2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேசியப்பட்டியலில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிக்கு வாய்ப்பளிக்கவும்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமுக்கு வழங்க வேண்டும் எனவும் அதன் மூலமாக இந்த மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் 27 வருட கனவை ரவூப் ஹக்கீம் நனவாக்க வேண்டும் எனவும் முஸ்லிம் புத்திஜீவிகளும் முஸ்லிம் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால செயலாளர் நாயகமாக இருந்தவர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சைத் ஹாஜியார். இவர் கட்சிக்காக பல்வேறு பங்களிப்புக்களை வழங்கி சேவை செய்துள்ளார். இவரது சேவையை மதித்து எமது மாவட்ட வேட்பாளரான ஷாபி ரஹீமுக்கு தேசியப்பட்டியல் மூலம் நியமனம் வழங்க தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, 2002ஆம் ஆண்டு கட்சியின் தேசியத் தலைவர் கம்பஹா மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்குவதாக வாக்களித்திருந்தார். அதனை இப்போது ஞாபகப்படுத்துகிறோம். 2010ஆம் ஆண்டு வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழுகின்ற ஒருவருக்கு தேசியப்பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்குவதாக தலைவர் கூறியிருந்தார். களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் முஹம்மத் அஸ்லம் ஹாஜியாருக்கு தேசியப்பட்டியல் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இவ்வாறு வடக்கு, கிழக்குக்கு வெளியே புத்தளம், குருநாகல், களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு தேசியப்பட்டியல் மூலமாக இதுவரை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இம்முறை அந்த வாய்ப்பு கம்பஹா மாவட்டத்துக்கு வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமானதாகும். இம்முறை அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 37 ஆயிரத்து 537 ஆகும். இவர்களில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.2 வீதமாகும். அதாவது 68 ஆயிரத்து 776 ஆகும். பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 12 இலட்சத்து 82 ஆயிரத்து 347 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 78 சதவீதம் வாக்களித்துள்ளனர்.

இவற்றில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12 இலட்சத்து 74 ஆயிரத்து 401 ஆகும். ஜனாப் ஷாபி ரஹீம் இந்த முறை நடந்த தேர்தலில் 33 ஆயிரத்து 746 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது 50 சதவீதமாகும். இதில் அளிக்கப்பட்ட முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கையோ அல்லது நிராகரிக்கப்பட்ட முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை.

அப்படியாயின், கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான முஸ்லிம் மக்களும் ஏனைய இனத்தவர்களின் கணிசமான வாக்குகளும் ஜனாப் ஷாபி ரஹீமுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்த முறை நடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தை 27046 மேலதிக வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. அந்த கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஷாபி ரஹீம் 33,746 விருப்பு வாக்குகள் பெற்றதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் முஸ்லிம் ஒருவருக்கு வாக்களித்ததாலேயே பிரதான கட்சியில் இணைந்து போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற முடியும். காரணம் இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

எனவே, இந்தத் தடைவை இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு தேசியப்பட்டியல் மூலமாக நியமனத்தை வழங்க வேண்டியது கட்சியின் தார்மீகக் கடைமையும் பொறுப்புமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .