2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னார் மனித புதைகுழி கிணறு அடையாளம் காணப்பட்டது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு புதன்கிழமை (26) மன்னார் நீதவான் விஜயம் செய்ததுடன் அங்கு உடை மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு நடுவே உள்ளதாக கூறப்பட்ட கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு, புதன்கிழமை (26) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உட்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கு விசாரணையின் போது, காணாமல் போன உறவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது.

கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனைகளுக்கு  உட்படுத்தப்படுவதற்கான மாதிரிகளை தயாரித்தல், அதனை சரியான முறையில் கைமாற்றுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், அதன் பரிசோதனைகளை சர்வதேச ரீதியிலே அங்கிகரிக்கப்பட்ட தடயவியல், தொல்லியல் துறையினர் மற்றும் தடயவியல், மானுடவியல் தொடர்பான சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்தில் கிணறு இருப்பதாக ஏற்கெனவே சட்டத்தரணிகளினால் மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த கிணற்றினை புதன்கிழமை(26) மாலை அடையாளப்படுத்த நீதவான் உத்தரவிட்டார்.

மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நில அளவியல் திணைக்களம் ஆகியோருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் புதன்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி காணப்பட்ட இடத்துக்கு மன்னார் நீதவான் விஜயம் செய்தார்.

இதன் போது சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபூர்தீன் உற்பட சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,ஜெபநேசன் லோகு, ஆகியோறும் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு உடை மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு நடுவே சட்டத்தரணிகளினால் கூறப்பட்டும் கிணறு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிணற்றைச் சுற்றி காணப்படுகின்ற உடை மரங்கள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றி சுத்தப்படுத்தி மீண்டும் வெள்ளிக்கிழமை(28) மாலை அவ்விடத்துக்கு விஜயம் செய்து கிணறு அடையாளப்படுத்தப்பட்டு அதனை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .