2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ்த் தேசிய அரசியலின் நீட்சிக்கான கூட்டுப்பொறுப்பு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கசப்பான- கடுமையான ஆறு ஆண்டுகளைக் கடந்து அரசியலுரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கிய பெரும் நகர்வை மேற்கொள்ள வேண்டிய இடத்தில் தமிழ் மக்கள் இப்போது வந்து நிற்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்துக்கு ஒத்துழைத்ததன் மூலம் தமிழ் மக்கள்- ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் மீள் நம்பிக்கையொன்றை கடந்த ஜனவரி மாதம் முதல் சிறிதாகக் கொள்ள ஆரம்பித்தனர். அந்த நம்பிக்கை, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான ஆட்சி- காட்சி மாற்றங்களோடு சற்று வலுத்திருக்கின்றது.

அரசியலுரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை மீண்டும் சரியாக ஒருங்கிணைப்பதிலும் முன்னோக்கிப் பயணப்பதிலும் வேகமாக அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்த் தரப்பு, இன்னமும் பொதுத் தேர்தல் வெற்றி தோல்விகள் பற்றிய விவாதங்கள்- வியாக்கியானங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

தேர்தல் வெற்றி - தோல்விகள் தொடர்பிலான ஆய்வுகள் அவசியமானவைதான். ஆனால், ஆய்வுகள் என்கிற நிலையைத் தாண்டி காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகளுக்கான ஏற்பாடுகள் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் அரசியல் நிலைபெறுகைக்கு ஒவ்வொரு நகர்வின் ஒவ்வொரு கட்டமும் ஆய்வு செய்யப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், வெற்றி தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை கண்டறிவதற்குப் பதில், தமது தரப்பினை நியாயப்படுத்தும் காரணங்களை கண்டறிவது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளப்படுகின்றது. அது, ஆரோக்கியமானது அல்ல.

பௌத்த சிங்கள பேரினவாதத்தினை அமைதியாக ஆனால், ஆழமாக முன்வைக்கும் ரணில் விக்ரமசிங்க என்கிற அரசியல் சாணக்கியரை எதிர்வரும் ஐந்து ஆண்டுகள், தமிழ் மக்களும்- தமிழ்த் தேசிய அரசியல் தளமும் எதிர்கொண்டு வெற்றிகளைப் பெற வேண்டியிருக்கின்றது. நெகிழ்வுப் போக்குள்ள வெளித்தோற்றத்தோடு எமக்குள் ஊடுருவி பெரும் அழிவினையும்- அலைக்கழிப்பையும் செய்யும் வல்லமை ரணில் விக்ரமசிங்க போன்றவர்களுக்கு உண்டு. அதனை, நாம் ஏற்கெனவே கண்டுணர்ந்திருக்கின்றோம்.

அப்படியான நிலையில், மிகவும் அவதானிப்புடனும், தீர்க்கதரிசனத்துடனும் எமது அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது. (மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றம், அது திறந்து விட்டுள்ள சிறிய ஜனநாயக இடைவெளி மற்றும் தமிழ் மக்களுக்கு அவசரமான தேவைப்பட்ட ஜனநாய இடைவெளி ஆகிய பற்றி இந்தப் பத்தியாளர் ஏற்கனவே இங்கு  பல தடவை எழுதியிருக்கின்றார்.)

தமிழ் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான அரசியல் வெளி சூன்யமாக்கப்பட்டிருக்கின்றது என்கிற தொடர் வாதம் கடந்த ஆறு ஆண்டுகளாக புத்திஜீவிகள்- அரசியலாளர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது, ஆயுதப் போராட்டத்தின் முடிவோடு மக்கள் எதிர்கொண்ட அதைப்பான (பெரும் அழுத்தம் மிக்க) கால கட்டத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

ஆனால், அந்த அதைப்பான கால கட்டத்திலிருந்து விடுபடுவதற்கான வெளி இப்போது சற்றுத் திறந்திருக்கின்றது. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் நீட்சி சாதாரண மக்கள்- (இளைஞர்கள்), சிவில் சமூக அமைப்புக்கள்,  அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், புலம்பெயர் சமூகம், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தரப்புக்களினூடான தொடர் ஊடாடல் மூலம் நிகழ்த்தப்பட வேண்டியது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமது இயங்கு நிலையை இன்னமும் அழுத்தமாக்க வேண்டும். மாறாக, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2016ஆம் ஆண்டுக்குள் சமஷ்டித் தீர்வினைப் பெற்றுத் தந்துவிடும். அதனைக் காண்பதற்காக காத்திருக்கின்றோம்' என்கிற எள்ளலை வெளிப்படுத்துவதற்கோ- 'ஒரு நாடு இரு தேசம் கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை மக்கள் பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிகளைவிடவும் மோசமாக தோற்கடித்திருக்கின்றார்கள்' என்கிற விடயத்தை முன்வைத்து போலியாக மகிழ்நிலை கொள்வதற்கோ இது தருணம் அல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையான மக்கள் 2016ஆம் ஆண்டுக்குள் இரா.சம்பந்தன் தீர்வை வாங்கித்தருவார் என்று நினைத்தோ, அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்த 18,000க்கும் அண்மித்த மக்கள் தேசமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைச் சிக்கல்களை புரிந்து கொள்ளாமலோ வாக்களிக்கவில்லை. மக்கள் 'மா'க்கள் என்கிற நிலையில் இல்லை. அவர்களின் உணர்திறன் பெரியது. அதை முதலில் எள்ளல் செய்யும் தரப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் தேவை என்ன, தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் தற்போது எவ்வாறு நோக்குகின்றார்கள்?, என்கிற அடிப்படையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மிக நெருக்கமாக கவனிக்க வேண்டும். அரசியல் போராட்டங்களின் மீதான நம்பிக்கையீனத்தின் போக்கு என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எவ்வளவு அச்சுறுத்தலானது என்பதையும், அதன் நிலைபெறுகைக்கான முயற்சிகளையும் நியாயமான முறையில் கள யதார்த்தங்களை உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

சர்வதேசத்தின் பெரும் எதிர்பார்ப்போடு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தவிர்க்க முடியாமல் ஜனநாயக இடைவெளியை இன்னும் சில காலத்துக்கு திறந்து விடும். அந்தக் காலப்பகுதியினை மிக உச்சபட்ச அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களையும்- அரசியல் போராட்டங்களின் கூர்மையுள்ள தரப்பான இளைஞர்களையும் ஒரே புள்ளியில் இணைக்க வேண்டும்.

அந்த இணைப்பு அரசியல் போராட்டங்களின் பாய்ச்சலுக்கான வழிகளைத் திறந்து விடும். அத்தோடு, தமிழ்த் தரப்புக்களிடையே பிரிவினையும்- பிளவினையும் ஏற்படுத்தும் தீர்க்கமான திட்டங்களை பொது எதிரியும் (பௌத்த சிங்கள பேரினவாதம்), இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளும் சரியான காய் நகர்த்தலினூடு முன்வைக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், சதுரங்கத்தில் காய்களை இலாவகமாக நகர்த்தி வெட்டுவது போல, எமக்கு எதிரான காய்களை நாம் வெட்ட வேண்டும். குறைந்த பட்சம் எதிர்கொள்ள வேண்டும். அதிக தருணங்களில் எமக்கு எதிரான காய்கள் என்று தெரியாமலேயே நாம் வெட்டப்பட்டிருக்கின்றோம்.

இந்த இடத்தில், தாயக மக்களினதும்- புலம்பெயர் மக்களினதும் இணக்கப்பாடும் புரிந்துணர்வும் மிகவும் அவசியமாகின்றது. கடந்த காலங்களில் இரு தரப்புக்குள்ளும் ஏற்பட்டுள்ள அல்லது சில தரப்பினரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள இடைவெளியின் அளவு அச்சுறுத்தும் நிலையைத் தொட்டிருக்கின்றது. ஆக, அந்த நிலைகளை சரியாக உள்வாங்கி ஆராய்ந்து மிக நேர்த்தியாக இயக்க வேண்டும்.

அது, அடுத்து வரும் சில ஆண்டுகளின் மிகவும் அவசியமானது. அது, அரசியல் ரீதியான முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல. பொருளாதார ரீதியிலான அபிவிருத்திக்கும் அவசியமானது. தாயக- புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி என்பது அந்தந்தப் பிராந்தியத்தில் உட்பிளவுகளை பெருமெடுப்பில் ஏற்படுத்த வல்லன. அது, அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் ரீதியாக பெருமெடுப்பில் பிரதிபலிக்கும். அது, பலவீனமான நிலையைத் தோற்றுவிக்கும்.

இன்னொரு பக்கம், மக்களிடையே அரசியல் ஆர்வத்தினை ஏற்படுத்தி மேலெழுந்து வரச் செய்வதற்கான முயற்சிகளை சீராக- சீரான காலப் பகுதியில் செய்ய வேண்டும். அது, தமிழ்த் தேசிய அரசியலையும், அதைப் முன்னிறுத்தும் கட்சிகளையும் சரியான பாதையில் பயணிக்கச் செய்வதை உறுதி செய்யும்.

அதற்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள்,  செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர் மிக அர்ப்பணிப்பாக செயற்பட வேண்டும். மாறாக, 'பருவகால பறவைகள் போல' தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் செல்வதும், அறிக்கைகளை விடுவதும் நியாயமான அரசியல் அறிவினையும்- மேல் நோக்கிய அரசியல் அழுத்தத்தினையும் ஏற்படுத்தாது. அது, அறம் சார்ந்த அரசியல் செயற்பாட்டு போக்குமல்ல. அதில், குறுகிய நலன்கள் பிரதிபலிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

அதுபோல, சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் என்பது யாழ்ப்பாணத்துக்குள் அல்லது வடக்குக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதும் ஆரோக்கியமானது அல்ல. வடக்கு- கிழக்கு மாத்திரமின்றி வடக்கு- கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் குறிப்பிட்டளவான கவனிப்பினையும்- செயற்பாட்டினையும் ஆற்ற வேண்டும். விமர்சனங்களும்- வியாக்கியானங்களும் இலகுவாக முன்வைக்கப்படுபவைதான்.

ஆனால், செயற்பாடு அல்லது நேர்த்தியான இயங்குநிலை என்பது பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட வேண்டியது. அதற்கு, சிவில் சமூக அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கிடையில் நேர்த்தியான கட்டமைப்பு உரையாடலும்- பங்கிடலும் கூட அவசியமாகின்றது. அது, கட்சி அரசியலைத் தாண்டி தீர்க்கமான முனைப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். அப்படியான பிரதிபலிப்பொன்றுக்கான திட்டங்களும் செயற்பாடும் எம் மத்தியில் அவசரமாக தேவைப்படுகின்றன. மீள்குடியேற்றம், அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுதல், காணாமற்போனவர்களை மீட்டெடுத்தல்- அல்லது அவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரை பொறுப்புக் கூறப் பணித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், உட்கட்டமைப்பு சீராக்கம், திட்டமிட்ட போதைக்கு எதிரான செயற்றிட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் அர்த்தபூர்வமான இலக்கினை தமிழ் மக்கள் அடைய வேண்டும்.

அதற்கு பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் அர்த்தபூர்வமாக அரங்காற்ற வேண்டும். அது, தமிழ்த் தேசிய அரசியல் போக்கினை சரியான கட்டத்தில் நகர்த்துவதற்கு குறிப்பிட்டளவு உதவும். அது, அவசியமானதும் கூட.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .