2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டரசாங்கமா, குழப்ப நிலை அரசாங்கமா?

Thipaan   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, 'தேசிய அரசாங்கம்' ஒன்றை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கடந்த வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக, தேர்தலுக்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியினதும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் (ந.ஐ.தே.மு) தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். ஆனால், அவ்வாறு கூறாவிட்டாலும் அவ்வாறானதோர் ஏற்பாட்டுக்கு வர ந.ஐ.தே.மு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

அக்கூட்டமைப்பு ஆகக்கூடுதலான நாடாளுமன்ற ஆசனங்களை வென்ற போதிலும் அது ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மைப் பலமல்ல. அக்கூட்டமைப்பு மொத்தம் 106 ஆசனங்களையே வென்றது. 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற, மேலும் ஏழு ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

எனவே, பிரச்சினை இல்லாமல் அரசாங்கத்தை முன்னெடுத்திச் செல்ல ந.ஐ.தே.மு கட்டாயம் ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டுச் சேர்வதோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று ஏனைய கட்சிகளிடமிருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கியோ ஆக வேண்டும்.

ந.ஐ.தே.மு, ஸ்ரீ.ல.சு.கவுடனேயே இந்த விடயத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்ரீ.ல.சு.க என்ற பெயரில் எந்தவொரு கட்சியும் இம் முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஸ்ரீ.ல.சு.க இம்முறை வேறு சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே போட்டியிட்டது. ஐ.ம.சு.கூ தேசிய அரசாங்கம் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராகவே இருக்கிறது. 

அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களை வைத்திருக்கும் கட்சி, ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கமே தேசிய அரசாங்கம் என்றழைக்கப்படலாம். இம்முறை ஆகக்கூடுதலான ஆசனங்களை வென்ற ந.ஐ.தே.மு, நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உத்தியோகபூர்வ கட்சியுடனும் சேரவில்லை. அது ஓர் உத்தியோகபூர்வ கட்சியின் ஓரங்கமான ஸ்ரீ.ல.சு.க.வுடனேயே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எனவே, இதை சட்டப்படி தேசிய அரசாங்கம் என்று அழைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. சட்டப்படி அவ்வாறு அழைக்க முடியாவிட்டால் அரசியலமைப்பின் பிரகாரம் 30க்கு மேல் அமைச்சர்களை நியமிக்கவும் முடியாது.

ஓர் அரசாங்கம் நியமிக்கக் கூடிய அமைச்சர்களின் ஆகக் கூடிய எண்ணிக்கை முதன் முறையாக 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்; மூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அரசாங்கம் அல்லாத பட்சத்தில் 30பேருக்கு மேல் அமைச்சர்களை நியமிக்க முடியாது.

தேசிய அரசாங்கம் ஒன்றின் அமைச்சர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஐ.ம.சு.கூ.வின் தலைவர் என்பதாலும் அவர் இந்தக் கூட்டரசாங்க ஏற்பாட்டை ஆதரிக்கிறார் என்பதாலும் சிலவேளை, தற்போதைய ஏற்பாடு சட்டபூர்வமானது எனவும் சிலர் வாதிடலாம்.

சட்டப்படி எவ்வாறாயினும், அரசியல் ரீதியாக இது தேசிய அரசாங்கம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணி வாதிடுகிறது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் போர் அல்லது வேறு ஏதாவது அழிவு ஏற்பட்டு தேசிய அரசாங்கமொன்றுக்கான தேசிய அவசியம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த தேசிய அரசாங்கம் தேசிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் ம.வி.முவின் தேசியப் பட்டியல் எம்.பி சுனில் ஹந்துன்னெத்தி, சிங்கள வனொலி ஒன்றுக்கு அண்மையில் கூறியிருந்தார்.

இது அவ்வாறான தேசிய அவசியத்தின் காரணமாக உருவாக்கப்படப் போகும் அரசாங்கம் அல்ல என்றும், இது வெறுமனே சம்பந்தப்பட்ட இரு சாராரும் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும்; அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கிக் கொள்ளும் கூட்டரசாங்கம் என்றும் அவர் கூறினார். உண்மை தான்.

ஆனால், ந.ஐ.தே.முவுக்கு ஆட்சியை அமைக்க வேறு வழியுமில்லை. ஒன்றில் அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியோடு சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஆனால், ம.வி.முவுக்கு இருப்பதே 6 ஆசனங்கள் மட்டுமே. அதேவேளை, ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியோடும் தாம் சேரப் போவதில்லை என ம.வி.மு தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தது.

அவ்வாறில்லாவிட்டால் ந.ஐ.தே.மு, தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பும் எந்தவொரு கட்சியுடனும் சேர்வதில்லை என்று தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தது. ஆனால், அவர்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைய இப்போது விரும்பலாம். ஆயினும் அவர்களால் அதனைச் செய்ய முடியாது. அவர்கள், அரசாங்கத்தில் சேர்ந்தால் வடக்கிலும் வெளிநாடுகளிலும் உள்ள தீவிர போக்குடையோர் அவர்களை இலகுவாகவே துரோகிகளாகச் சித்திரித்து விடுவர்.

மறுபுறத்தில் ந.ஐ.தே.முவும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்த்துக் கொள்ள அவ்வளவு விரும்பாது, அதற்குக் காரணம், தெற்கே வாழும் தீவிர போக்குடையோரே. ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுய நிர்ணய உரிமையைப் பற்றியும் வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றியும் சமஷ்டி ஆட்சி முறையைப் பற்றியும் பேசி, தென் பகுதி மக்கள் மத்தியில் சந்தேகத்துக்கு உள்ளாகியிருப்பதால் அக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்தால் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது தாம் பாதிக்கப்படலாம் என ஐ.தே.க அச்சப்படுவதாகவும் இருக்கலாம். எனவே, தற்போதைய ஏற்பாட்டைத் தவிர வேறு வழியில்லை போல் தான் தெரிகிறது.

தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க மக்கள் தமக்கு ஆணை வழங்கவில்லை என விமல் வீரவன்ச போன்ற ஐ.ம.சு.கூ தலைவர்கள் கூறுகிறார்கள். ஒரு வாதத்துக்கு அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில், தாம் தேசிய அரசாங்கம் அமைக்கப்பபோவதில்லை என்று கூறியே மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல ஐ.ம.சு.கூ தலைவர்கள் தேர்தல் மேடைகளில் கூறினர்.

ஆனால், தாம் பதவிக்கு வந்தால் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலத்தில் கூறி வந்தார். எனவே, தமக்கு அதற்காக மக்கள் ஆணை வழங்கியிருப்பதாக இப்போது அவர் கூறலாம். பெரும்பாலான மக்கள் தேசிய அரசாங்கமொன்றுக்கே ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று ஐ.தே.கவும் ந.ஐ.தே.முவும் தற்போதைய நிலைமையை நியாயப்படுத்தவும் முடியும்.

இரு பெரும் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தால் அடுத்து பெரும் கட்சியான தமிழரசுக் கட்சிக்கே எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்றும் அதனால் இரு பெரும் கட்சிகள் ஒன்று சேரக் கூடாது என்றும் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்தக் கருத்தை அநேகமாக பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடும். ஏனெனில், அவர்களிடம் தமிழ்த் தலைவர்கள் மீது அவ்வாறானதோர் சந்தேகமும் அச்சமும் இருக்கிறது.

எனவே, ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு சேரவும் கூடாது, அவர்கள் எதிர்க் கட்சித் தலைமையை பெறவும் கூடாது என்ற நிலைப்பாடே தெற்கில் இருக்கிறது. இதற்கு தென் பகுதி அரசியல்வாதிகளையோ அல்லது தென் பகுதி மக்களையோ குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. எவ்வாறு தமிழ் மக்கள் தென் பகுதி அரசியல்வாதிகளை நம்பவில்லையே, அதேபோல் தென் பகுதி மக்களும் தமிழ்த் தலைவர்களை நம்புவதில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனித்து ஆட்சியை அமைக்க முடியாது.

ஐ.ம.சு.கூவை மொத்தமாக ஒரு கட்சியாக இல்லாமல் அதன் ஒரு பகுதியான ஸ்ரீ.ல.சு.கவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கூட்டரசாங்கமொன்றை உருவாக்குவது சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் எவரும் அந்தச் சட்டப் பிரச்சினையை எழுப்பப்போவதுமில்லை. தமிழ்க் கூட்டமைப்போ அல்லது ம.வி.முவோ தற்போதைய ஏற்பாட்டைக் குழப்பி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழ்நிலைமையை உருவாக்கப் போவதில்லை. ஐ.ம.சு.கூவிலுள்ள மஹிந்த சார்பான தலைவர்கள் சற்று பின்வாங்கியிருக்கவே விரும்புவதாக தெரிகிறது.

ஆனால், ஸ்ரீ.ல.சு.கவிலுள்ள மஹிந்த ஆதரவாளர்கள் பலர் தேசிய அரசாங்கத்தில் இணையாது எதிர்க்கட்சியில் அமரப் போவதாக கட்சித் தலைமைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். கட்சி எடுக்கும் முடிவுகளை விமர்சிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கட்சித் தலைமை அதற்கு இணங்கியிருக்கிறது.

அதாவது, மீண்டும் நூறு நாட்கள் திட்டத்தின் கீழ், ஐ.தே.கவின் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட அரசாங்கம் இருந்த காலத்தில் நிலவியதைப் போன்றதோர் நிலைமை உருவாகப்போகிறது. ஒரே கட்சி இரண்டாகப் பிரிந்து ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்கப் போகிறது. ஒரே கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரும் ஆளும் கட்சி அமைச்சர்களும் இருக்கப் போகிறார்கள். ஜனாதிபதி ஆளும் கட்சியைச் சேர்ந்தவரா அல்லது எதிர்க்கட்சியை ஆதரிக்கிறாரா என்று தெரியாத நிலைமையொன்று உருவாகப் போகிறது.

அப்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியின் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்வார்கள், எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து விவாதம் நடத்துவார்கள்.

இவ்வாறு இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்வது அரசியலில் கொள்கை என்பது என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. ஐ.தே.க பதவிக்கு வந்தால் தமிழர்களின் கையோங்கும் என்றும் நாடு பிரிந்துவிடும் என்றும் ஐ.ம.சு.கூ தலைவர்கள் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தனர். அதே தலைவர்கள் எவ்வித வெட்கமும் இன்றி அதே ஐ.தே.க தலைமை தாங்கும் அரசாங்கத்தில் சேர்ந்து அமைச்சர் பதவிகளை ஏற்பது வேடிக்கை என்பதை விட தமக்கு வாக்களித் மக்களை ஏமாற்றுவதாகும்.

இவ்வாறு இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனெனில், நாட்டுக்கு பலமானதோர் எதிர்க்கட்சி இருக்க வேண்டும். அப்போது தான் ஓரளவுக்காவது ஊழல்களை மோசடிகளை தடுக்கு முடியும். அரசாங்கம் பிழையான முடிவுகளை எடுக்கும் போது அதனை தட்டிக் கேட்பதற்கும் விமர்சனங்கள் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கும் உள்ள வாய்ப்பு இவ்வாறான அரசியல் கூட்டுக்கள் தடையாகவே அமையும்.

குறிப்பாக தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது சிறந்ததோர் கருத்துப் பறிமாற்றம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுவதே நல்லது. ஏற்கெனவே தேர்தலுக்கு முன்னர் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஸ்ரீ.ல.சு.கவும் சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமயவும் சிறுபான்மை மக்களும் சிறு கட்சிகளும் பாதிக்கப்படக் கூடிய வகையிலான ஒரு திட்டத்தை முன் வைத்திருந்தது.

அந்த ரணவக்க இந்த அரசாங்கத்திலும் இருக்கிறார். ஸ்ரீ.ல.சு.கவும் தேசிய அரசாங்கம் அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளது. ரணவக்க - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பெரும் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார். புதிய ஏற்பாட்டின் படி, அரசாங்கம் இலகுவாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுவிடலாம். இந்த நிலையில் தேர்தல் முறையை திருத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டால், அது சிலவேளை சிறுபான்மை மக்களை பாதிக்கக் கூடியதாக இருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அதேவேளை, இரு பெரும் கட்சிகள் ஒன்று சேரும் பட்சத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் தப்பித்துக் கொள்ளவும் அது ஓரளவுக்காவது உதவலாம். புதிய அரசாங்கத்தின் தலைவர்களும் ஒன்றும் தூய்மையானவர்கள் அல்ல. ஏற்கெனவே நாட்டில் ஊழலைப் பற்றிய அக்கறையும் வெகுவாக குறைந்துள்ளது. 

எனவே, இரு பெரும் கட்சிகளில் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்பதில் சாதகமான நிலைமைகளை விட பாதகமான நிலைமைகளே அதிகம். ஆனால், தற்போதைய நிலையில் ஸ்ரீ.ல.சு.கவுக்குள் மஹிந்தவின் செல்வாக்கை இந்த ஏற்பாடு வெகுவாக குறைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஜனாதிபதி ஸ்ரீ.ல.சு.கவை ஐ.ம.சு.கூவிலிருந்து முற்றாக பிரித்துவிடப் போவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. அதுவும் மஹிந்தவின் செல்வாக்கை மேலும் குறைத்துவிடலாம்.

தற்போதைய நிலையில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியொன்றுடனான நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமாயின் தமிழ்க் கூட்டமைப்புடன் தான் ந.ஐ.தே.மு கூட்டுச் சேர வேண்டும். தற்போதைய ஏற்பாடு இரண்டு வருடத்துக்கு மட்டுமே என ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவ்வாறாயின் அதன் பின்னராவது தமிழ்க் கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கும் நிலைமையை ஐ.தே.கவும் தமிழ் கூட்;மைப்பும் உருவாக்கிக் கொள்வது நாட்டுக்கு பயன் தரும். ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உள்ள தீவிரவாத போக்குடையோர் அப்போதாவது அதற்கு இடமளிப்பார்களா என்பது சந்தேகமே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .