2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ்: பண்பாட்டுச் சுத்திகரிப்பு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

முன்பொருபொழுது உலகம் எப்படி இருந்தது என்ற புதிரை வரலாறு அவிழ்க்க முயல்கிறது. பழமையின் எச்ச சொச்சங்களான புராதன நகரங்களும் கட்டடங்களும் பிற இடங்களுமே வரலாற்றை எம் கண்முன் நிறுத்துபவை. வரலாற்றைக் கண்டுணர்தலின் சாத்தியப்பாட்டை அவையே இயலுமாக்கின. நமது எதிர்காலச் சந்ததிகட்கு நாம் விட்டுச்செல்லும் வரலாற்றின் நீட்சி அதுவே.    

மனிதகுல வரலாற்றின் இயங்கியலையும் வாழ்நிலையையும் எடுத்தியம்புவன, பண்டைய நாகரிகங்கள் நிலவிய இடங்களில் இன்னும் காணக்கிடைக்கும் தொன்மங்கள். அவையே நாமறியும் வரலாற்றை எழுதிவைத்த மூலங்கள். இன்று அவற்றின் எதிர்காலம் இருண்டுள்ளது.

புதிய உலகத்தைப் படைக்கப் புறப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிரியாவில் உள்ள புராதன நகரங்களையும் பொருட்களையும் தரைமட்டமாக்குகின்றனர். கடந்த வாரம் சிரியாவினதும் மத்திய கிழக்கினதும் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சியாளரான காலிட் அல் அசாத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். கொன்று, புராதான நகரின் தூண்களிற் தொங்கவிட்டமை முக்கியமான செய்தியொன்றைச் சொல்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். வெறுமனே புதிய ஆட்சியை நிறுவுதற்காக மட்டும் போரிடவில்லை. மாறாக, வரலாற்றை இல்லாதொழிக்க ஒரு யுத்தத்தைச் செய்கிறார்கள். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் உள்ள பண்டைய நகரங்களையும் புராதனப் பொருட்களையும் அழிப்பதன் மூலம் பண்பாட்டுச் சுத்திகரிப்பைச் செய்கிறார்கள்.

கொல்லப்பட்ட காலிட் அல் அசாத்- சிரியாவின் பல்மைரா என்ற புராதன நகரின் அகழ்வாராய்ச்சியிலும் அதன் புராதனப் பொருட்களைப் பாதுகாப்பதிலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டவர். பல்மைராவின் வரலாறு கி.மு. 7,500ஆம் ஆண்டிற் தொடங்குவது. உரோம நாகரிகத்திலும் அதைத் தொடர்ந்த பாரசிக யுத்தங்களிலும் அது முக்கியம் பெற்றது. பட்டுவழிப் பாதையின் முக்கிய வணிக நகரமாயிருந்து பின்னர் ஒட்டோமன் பேரரசின் எழுச்சியுடன் அதன் முக்கிய நகரங்களில் ஒன்றாகியது. யுனெஸ்கோ அடையாளங்கண்ட மரபுரிமைத் தலங்களில் பல்மைரா முக்கியமானது.

சிரியாவில், அமெரிக்காவுக்கு உடன்பாடற்ற ஜனாதிபதியான

பஷீர் அல் அசாத் ஆட்சியைத்

தூக்கியெறிய உள்நாட்டு யுத்தமொன்றைத் தொடங்கிய அமெரிக்கா உருவாக்கிய கூலிப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். ஜோர்டானில் இராணுவப் பயிற்சி பெற்ற அதேவேளை, சவுதி அரேபியா, கட்டார், அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவியையும், ஆயுதங்களையும் பெற்றது. சிரியாவில் அப்போது இயங்கிய இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாத அமெரிக்கக் கூலிப்படை அமைப்பான அல் நுஸ்ராவுடன் இணைத்தே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. காலப்போக்கில் தனியான அமைப்பாக வளர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., சிரியாவின் சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு ஈராக்கின் சில நகரங்களையும் கைப்பற்றியது. துருக்கியில் அன்றைய ஒட்டோமன் பேரரசின் இஸ்லாமிய அடிப்படையிலான கிலா‡பத் அரசாட்சி வீழ்ந்த பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலா‡பத் ஆட்சியை நிறுவியுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்தது. ஈராக்கிலும் சிரியாவிலும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்துத் தனிநாடாக அறிவித்து, அதனை இஸ்லாமிய அரசு (கிலா‡பத்) என்று அறிவித்தது.

வெளிப்படையாக அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு எதிராகப் போரிடுவதாகக் காட்டினாலும் அதற்கு மறைமுக ஆதரவை வழங்குகிறது. அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் சிரியாவில் அமெரிக்கா ஏற்படுத்தத் தவறிய ஆட்சிமாற்றத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். ஏற்படுத்தும் என நம்புகிறார்கள். அதனாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் அநியாயங்களைச் சொல்லும்போது சிரிய அரசாங்கம் செய்ததாகச் சில அநியாயங்கள் இட்டுக்கட்டப்படுகின்றன. அவற்றுக்கு ஊடகங்கள் முக்கியங் கொடுக்கின்றன. அவை சிரிய உள்நாட்டுப் போருக்குக் காரணம் அசாத்தும் சிரிய அரசாங்கமுமே என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஈராக்கின்

நூதனசாலையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலுள்ள புராதன கட்டடங்களையும் சிலைகளையும் குண்டுவைத்துத் தகர்க்கின்றனர் அல்லது சம்மட்டியாற் சிதைக்கின்றனர். இவ்விடத்தில் அகழ்வாராய்ச்சியாளர் காலிட் அல் அசாத்தின் கொலையானது சில உண்மைகளை வெளிச்சத்துக் கொண்டுவந்துள்ளது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள அரும்பொருட்களை விற்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். ஏராளமான பணத்தை ஈட்டியுள்ளது. பல்மைரா பகுதியைக் கைப்பற்றியவுடன் அதில் உள்ள அரும்பொருட்களை விற்பதன் மூலம் ஏராளமான வருமானத்தை ஈட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டிருந்தது. பல்மைரா ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரப்போவதை உணர்ந்த காலிட் அல் அசாத், அங்கு தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரும்பொருட்களை இரகசியமான ஓர் இடத்தில் மறைத்துவிட்டார். அவர் சிரிய இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால், தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பல்மைரா புதைபொருள் ஆய்வின் மையமான நகரை அவர் நீங்கவில்லை. தான் வாழ்ந்த இடத்திலேயே சாக நினைத்தார் போலும். காலிட் அல் அசாத்தைப்; பயங்கரவாதிகள் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். அவரிடம் வினவப்பட்டதெல்லாம் அவர் அரும்பொருட்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதுதான். அவர் ஒத்துழைக்க மறுத்ததாற் கொல்லப்பட்டுத் 'துரோகி' என்று பொறித்த அட்டையுடன் தொங்கவிடப்பட்டார்.

ஒருபுறம் புராதன நகரங்களைக் தரைமட்டமாக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இன்னொருபுறம் கொண்டுசெல்லக்;கூடிய அரும்பொருட்களை விற்கிறது. ஆனால், உருவங்களும் உருவ வழிபாடும் இஸ்லாத்துக்கு எதிரானவை எனப் பிரசாரம் செய்கிறது. எல்லாவிதமான கொலைகளையும் நியாயப்படுத்தி வீடியோவையோ செய்தியையோ வெளியிடும் ஐ.எஸ்.ஐ.எஸ்., காலிட் அல் அசாத்தைக் கொன்றதை அறிவிக்கவில்லை. அதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டது சிரிய அரசாங்கமே. இக்கொலையை ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிடாமைக்கான காரணங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.

ஸின் உள்ளார்ந்த நெருக்கடியைப் புலப்படுத்துகின்றன. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களின் ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு இல்லை. பல்மைரா நகரம் அமைந்துள்ள சிரியாவின் ஹோம்ஸ் நகர மக்கள்; காலிட் அல் அசாத்தை நன்கறிவர்;. அவரின் கொலை ஐ.எஸ்.ஐ.எஸ். மீதான மக்களின் வெறுப்பை மேலும் அதிகரிக்கும். அதனால் அக் கொலையை அறிவிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். விரும்பவில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ்., தலிபான், அமெரிக்கா ஆகிய மூன்றுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பண்பாட்டுச் சுத்திகரிப்பு. ஆப்கானிஸ்தானில் இருந்த ஆறாம்

நூற்றாண்டின் பாமியன் புத்தர் சிலைகளைத் தலிபான்கள் 2001ஆம் ஆண்டு வெடிவைத்துத் தகர்த்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஈராக்கின் அருங்காட்சியகங்களும் தேசிய

நூலகங்களும் சூறையாடப்பட்டன. அவற்றில் அதி முக்கியமான நிகழ்வு ஈராக்கிய அருங்காட்சியகம் அமெரிக்கப் படைகளின் உதவியுடன் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டமையாகும்.

உலகில் சுமேரியா, அக்காடியா, பபிலோனியா, அசிரியா, சால்டியா நாகரிகங்கள் உட்படப் பண்டைக் கால மொசப்பத்தேமிய நாகரிகங்களின் சின்னங்கள் அனைத்தும் அடங்கிய ஒரே காட்சியரங்காக அந்த அருங்காட்சியகம் விளங்கியது. அங்கு பாரசீகத்தினதும் பண்டைய கிரேக்க, ரோமானிய சாம்ராச்சியங்களினதும் பல்வேறு அரபு அரச பரம்பரைகளினதும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் இடம்பெற்றிருந்தன. உலகின் முதலாவது எழுதப்பட்ட சட்டங்களான ஹம்முரபியின் சட்ட விதிகள் அந்த அருங்காட்சியகத்திற் கல்வெட்டுக்களாக இடம்பெற்றிருந்தன.

அவற்றைச் சூறையாட அமெரிக்கா ஆதரவளித்த பின்னணியை விளங்குவது இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஈராக்கிலும் சிரியாவிலும் செய்வன பற்றி அமெரிக்காவின் மௌனத்தை விளக்கப் போதுமானது.

அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கு முன்னதாகவும் போரின்போதும் அருங்காட்சியங்களைப் பாதுகாக்கும் தேவைபற்றி எச்சரிக்கப்பட்டது. போர் தொடங்கு முன்னர் பென்டகனில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளை சந்தித்தோருள்; அமெரிக்கக் கலாசாரக் கொள்கைக் குழுப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். அவர்களிற் பெரும்பான்மையானோர் அரும்பொருள் சேகரிப்பவர்களும் கலைப்பொருட்கள் விற்பனையாளர்களுமே. பண்பாட்டுக் கலைப்பொருட்களை ஏற்றுமதிசெய்வதற்கு சதாம் ஹுசேன் தலைமையிலான ஈராக் அரசாங்கம் தடைவிதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இவர்கள், சதாம் போன பின்னர் இப் பொருட்களின் ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கில் இருந்து அரும்பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்வதற்கான நடைமுறைச்; சிக்கல்கள் நீக்கப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இருந்து சூறையாடப்படும் அல்லது திருடப்படும் அரும்பொருட்களுக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாரிய கேள்வி உருவானது. புதியதொரு வர்த்தகத்துக்கான திறவுகோலாக இவ் அரும்பொருட்கள் இருந்தன. ஈராக்கிலிருந்து லிபியா, சிரியா என நீள்கிற போர்கள் இவ் வர்த்தகத்தை உயிர்ப்;புடன் வைத்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியே ஐ.எஸ்.ஐ.எஸ். கலைப் பொருட்களையும் அரும்பொருட்களையும் சூறையாடிச் செய்யும் வியாபாரம். 

போர்கள் பல்வேறு வர்த்தக நோக்கங்கட்காக நடக்கின்றன. மத்திய கிழக்கில் இன்று பரந்து விரிந்திருக்கும் உள்நாட்டு யுத்தங்களும் நிச்சயமின்மையும் இவ்வாறான திருட்டுக்கட்கு இலகுவாகக் களமமைக்கின்றன.

கொண்டுசெல்ல முடியாத பொருட்களையும் கட்டடங்களையும் வெடிவைத்துத் தகர்ப்பது பண்பாட்டுச் சுத்திகரிப்புச் செயற்பாடாகும். ஒவ்வொரு சமூகமும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. மேற்குலகச் சமூகங்களினுஞ் சிறப்பாகக், கீழைத்தேயச் சமூகங்களின் வரலாற்றுத் தொன்மையைப் பண்டைய நாகரிகங்களின் வழி கண்டுணரலாம். இதுவரை அடையாளங்கண்ட கிரேக்கத்துக்கு முந்திய நாகரிகங்களில் எதுவும் மேற்குலகினதல்ல. அவை ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தென்னமெரிக்கா போன்ற பகுதிகளில் தோன்றியவையே. 2001ஆம் ஆண்டு 'பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை' அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவித்தபோது 'நாகரிகங்களுக்கிடையிலான மோதலை'யும் சேர்த்தே அறிவித்தார். இன்று மத்திய கிழக்கில் நடப்பது அன்று தொடங்கிய யுத்தத்தின் நீட்சியே. தங்களை நாகரிகமானவர்கள் என்று சொல்;பவர்கள் எங்கள் நாகரிகங்களையும் அவற்றின் சான்றாதாரங்களையும் மூலங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அழிக்கப்படுவனவும் திருடப்படுவனவும் தனி மனிதர்களுக்குரியனவல்ல. அவை அனைத்து மனிதர்கட்கும் மனிதகுலத்துக்கும் உரியன. அவை எமது இறந்த காலத்தை எதிர்காலத்தோடு இணைக்கும் மெல்லிய நூலிழைகள். இவர்கள் நிகழ்காலத்தில் இறந்தகாலத்தை அழிப்பதனூடு எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறார்கள்.

பண்பாடு துடைத்தழிக்கப்பட்ட சமூகமானது தன்னைச் சமூகமாக அடையாளங்காண முடியாதுபோகும்.

இப்போது நிகழ்வது மக்களின் நினைவுகளினதும் அடையாளங்களினதும் மீதான மறைமுகமான போர். இது மத்திய கிழக்கில் குற்றேவற்காரர்களால் நேரடியாக நடக்கிறது. எமது சமூகத்தில் இத் திருப்பணியைக் குத்தகைக்காரர்கள் செய்கிறார்கள். வேறுபாடு அவ்வளவுதான்.

நாங்கள் ரோமாபுரி பற்றியெரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர்கள்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .