இணைய தவறுகளைத் தடுக்க மென்பொருள் கண்டுபிடித்து சாதித்த மாணவி
27-08-2015 05:57 PM
Comments - 0       Views - 3076

அமெரிக்காவின், நியூயோர்க்கில், இணையதள தவறுகளை தடுக்கும் வகையிலான மென்பொருளை கண்டுபிடித்து இந்திய வசம்வாவளியைச் சேர்ந்த 13 வயது மாணவியொருவர் சாதனை புரிந்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அதுபல நேரங்களில், பல்வேறு விடயங்களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது.

இதைத் தடுக்கும் வகையில் மென்பொருளை அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலவாசியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா பிரபு என்கிற மாணவி தனது 13 வயதில் உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

'ரீதிங்க்' என பெயரிடப்பட்ட இந்த மென்பொருள் படைப்பால், 2014 ஆம் ஆண்டின் கூகுள் அறிவியல் கண்காட்சியில் உலகளாவிய போட்டியாளர்களில் இறுதியாளாராக திரிஷா தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.  

இவர் முதலில், மூளை தனது செயல்பாட்டிலிருந்து எப்படி விலகிப்போகின்றது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாக வீதி விபத்தில், திரிஷாவின் அத்தை உயிரிழந்ததே இவ் ஆய்வை மேற்கொள்ள காரணமாக அமைந்தது. மூளையின் சின்ன திசைத்திருப்பல்களால் தான் விபத்து நிகழ்வதாக உணர்ந்த அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

ஏற்கனவே மூளை செயல்பாட்டின் மீது ஆர்வம் செலுத்தி வந்த அவருக்கு, இணையதளத்தில் கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்துகொண்டது 'ரீதிங்க்' மென்பொருளை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.

'ஒருவர் தற்கொலை செய்யும் அளவுக்கும் துணியலாம் எனத் தெரிந்தும் அவ்வளவு மோசமாக நடந்துகொள்ள நாம் என்ன மிருகங்கள் கிடையாது. சொன்ன அவச்சொல்லை திரும்பப் பெறவோ, அழிக்கவோ முடியாதுதான். அதை முன்கூட்டியே தவிர்க்கும் வாய்ப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித்தரும்' என அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

"இணைய தவறுகளைத் தடுக்க மென்பொருள் கண்டுபிடித்து சாதித்த மாணவி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty