2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் நாடகத் திருவிழா – 2015

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஈழத்தின் முன்னணி நாடக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற செயல் திறன் அரங்க இயக்கமும் யாழ்ப்பாண மாநகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த நல்லூர் நாடகத் திருவிழா – 2015 சனிக்கிழமை (29) தொடக்கம் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள குறுக்கு வீதியில் செயல் திறன் அரங்க இயக்கத்தின் பஞ்சபூத அரங்கில் நடைபெறவுள்ளது.

நாடக விழாவை யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் ஆரம்பித்து வைக்கின்றார். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழா மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

'நாமும் நமக்கென்றொரு நலியாக் கலையுடையோம்' என்ற தொனிப் பொருளில் இந்த நாடகத் திருவிழா நடைபெறவுள்ளது.
சிறுவர் நாடகங்கள், பாரம்பரிய நாடகங்கள், நவீன நாடகங்கள் மற்றும் ஓராள் நாடகங்களென பன்னிரெண்டு நாட்கள் நடைபெறுகின்ற விழாவில் 20 நாடகங்கள் மேடையேறுகின்றன.

'ஈழத்தின் நவீன நாடகத்தின் தாய்' என்று வர்ணிக்கப்படுகின்ற குழந்தை ம.சண்முகலிங்கத்தின் சிறுவர் நாடகங்களான 'கூடிவிளையாடுபாப்பா' மற்றும் 'பஞ்சவர்ண நரியார்' நாடகங்களும் ஈழத்தின் சிறந்த நாடக நெறியாளர் தே.தேவானந்தின்  எழுத்துரு நெறியாள்கையில் 'சிரிப்பு மூடை', 'வேடதாரிகள்', 'வெண்மை எழில்', 'தாலி', 'ஏகாந்தம்', 'மரணச்சான்றிதழ' போன்ற நாடகங்களும் மேடையேறுகின்றன.

இதனோடு இணுவில் இளம்தொண்டர் சபையின் 'பக்த நந்தனார்' இசை நாடகமும் நாட்டார் வழக்கியற்கழகத்தின் 'மயானகாண்டம்' பாரம்பரிய கலைமேம்பாட்டுக்கழகத்தின் 'காத்தவராயன் கூத்து' காந்தி சனசமூக நிலையத்தின் 'சத்தியவான் சாவித்திரி' இசைநாடகமும் மேடையேறுகின்றன.  

செயல்திறன் அரங்க இயக்கம் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக 'தேச அபிவிருத்திக்கான வளமான அரங்கப்பண்பாடு' என்ற தூர தரிசனத்தோடு இயங்கி வருகின்ற ஒரு பண்பாட்டு நிறுவனமாகும்.

இதுவரையில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கின்றது. குறிப்பாக சிறுவர் நாடகங்களைத் தயாரித்து பலநூறு பாடசாலைகளில் மேடையேற்றி சாதனை படைத்துள்ளது. சமூக அரசியல் பிரச்சினைகளைப் பேசுகின்ற வௌ;வேறு வகையான நாடக வடிவங்களான தெருவெளி நாடகங்கள், ஓராள் நாடகங்கள், கலந்துரையாடல் அரங்கு என்பவற்றில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள்.

ஈழத்து நாடக ரசிகர்களுக்கும் சிறுவர்களுக்கும் பெருவிருந்தாக அமைகின்ற இந்த நாடக விழா இலவசமாக காண்பிக்கப்படுகின்றது. செயல்திறன் அரங்க இயக்கம் 2013 ஆம் ஆண்டு தனது முதலாவது நாடக விழாவை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடத்தியிருந்தது.

பின்னர் தனக்கான சொந்த இடத்தில் 2014ஆம் ஆண்டு இரண்டாவது நாடக விழாவை நடத்தியிருந்தது. இப்போது மூன்றாவது நாடக விழா பிரமாண்டமான ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .