2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசியலின் பின்கதவு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

நல்லாட்சி என்பது நாட்டின் ஆட்சியில் எந்தக் கட்சி பிரதான கதாபாத்திரம் வகிக்கப் போகின்றது என்பதேயன்றி, அது அந்த ஆட்சியில் எப்படியானவர்கள் அங்கம் வகிக்கப் போகின்றார்கள் என்பது பற்றியதல்ல என்பதை - தேசியப்பட்டியல் நியமனங்கள் ஊடாக பிரதான கட்சிகள் நியாயப்படுத்த விளைவது போல் தெரிகின்றது.

இது எப்படி இருக்கின்றது என்றால் - ஒரு பெரிய அண்டாவில் சுத்தம் சுகாதாரமான முறையில் பிரியாணியை சமைத்துவிட்டு, பந்தி வைக்க முன்பு சில பழுதடைந்த மரக்கறி குப்பைகளையும் உள்ளே போட்டு கலக்குவது மாதிரியானது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடைந்து விட்டபோதிலும், பதவிகளை பங்குபோடுவதில் மற்றும் ஆட்சியை நிறுவுவதில்;, இக்கணம் வரைக்கும் இழுபறி காணப்படுகின்றது. தேசியப் பட்டியல்களையும் அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளையும் பகிர்ந்தளிப்பதில் பிரதான கட்சிகளும் உதிரிக் கட்சிகளும் கடுமையான சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் எடுக்கின்ற முடிவுகள் மக்களால் பகிரங்கமாக விமர்சிக்கப்படுவதுடன் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தும் ஒரு சூழலும் உருவாகியிருக்கின்றது.

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கும் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத நபர்களுக்கும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படாது என்று ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி- தேர்தலுக்கு முன்னமே அறிவிப்புச் செய்திருந்தது. தேர்தல்கள் ஆணையாளரும் இவ் விடயத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால், இன்று அதற்கு மாற்றமான விதத்தில் தேசியப் பட்டியல் நியமனங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். ஒவ்வொரு கட்சியும் ஆகக்குறைந்தது மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரையேனும் தேசியப் பட்டிலுக்குள் உள்வாங்கி இருப்பதாக பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் இதற்கு ஒப்பான ஒரு நிலைமை அவதானிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்ட ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில், நல்லாட்சிக்குப் பொருத்தமற்ற சில அரசியல்வாதிகளும் நல்லாட்சிக்குள் உள்வாங்கப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அபிமானிகளோடும் தம்மால் விமர்சிக்கப்பட்ட முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களோடும்  தற்போதைய அரசாங்கம் உறவு கொண்டாடுவது மக்களை முகம் சுழிக்க வைத்தது.

ஆயினும் குறுகிய ஆயுட்காலத்தைக் கொண்ட ஓர் அரசாங்கமாக அது இருந்தமையாலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு தேவை காணப்பட்டதாலும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்னுமொரு (பொது) தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தமையாலும் யாரையும் புறக்கணிக்காமல் செயற்பட வேண்டிய ஓர் இக்கட்டான நிலை அரசாங்கத்துக்கு அப்போதிருந்தது. எனவே, நல்லாட்சி அமைகின்றது என்ற ஆறுதலில் இவற்றையெல்லாம் மக்கள் பொறுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், இப்போது அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளமை மிக உன்னிப்பாக பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. படித்தவர்களையும் அறிவாளிகளையும் அதேபோல் தனித்து வாக்களிப்பதன் மூலம் ஒரு எம்.பி.யை பெற முடியாதளவுக்கு சிறுதொகுதியாக வாழும் மக்கட் பிரிவின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு உள்வாங்குவதற்காகவுமே தேசியப் பட்டியல் முறைமை உருவாக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருப்பவர்களும், போதைப் பொருள் வியாபாரிகளும், சண்டித்தனம் பேசுவோரும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான ஒரு பின்கதவாகவே தேசியப் பட்டியல் பாவிக்கப்பட்டது.

இதனை அப்போது எதிர்க் கட்சியாக இருந்த தற்போதைய ஆளும் கட்சி கடுமையாக விமர்சித்தது மட்டுமன்றி, தமது ஆட்சியில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாது என்று அடித்துக் கூறியிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றுவிட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் அக்கட்சியோடு கூட்டுச் சேரவிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டன என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

தமது தேர்தல் மாவட்டத்தில் தோல்வியுறும் எந்த வேட்பாளருக்கும் தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படாது என்பதை தேர்தலுக்கு பல நாட்கள் முன்னரே ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அழுத்தமாகச் சொல்லியிருந்தார். ரணில் சொன்னதை எப்படியும் செய்து விடுவார் என்பதை அறிந்திருந்த ஐ.தே.க. வேட்பாளர்கள், எப்படியாவது தமது தொகுதியையும் மாவட்டத்தையும் வென்றுவிடக் கடுமையாக உழைத்தனர். இதனால் அதிக ஆசனங்களை அக்கட்சி பெற்றுக் கொண்டது.

இன்னுமொரு சிறுகட்சியை இணைத்துக் கொண்டு மிக இலகுவாகவே ஆட்சியமைக்கக் கூடிய சூழல் இருக்கின்றமையாலும் தேசிய அரசாங்கம் பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளமையாலும், தேசியப் பட்டியலைக் கொடுத்து யாரையும் வளைத்துப்போடும் தேவை பிரதமர் ரணிலுக்கு கிடையாது.

எனவே, தோல்வியுறும் வேட்பாளர்களை தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிப்பது இல்லை என்ற விதியை அவர் இம்முறை மிக இறுக்கமாக கடைப்பிடித்திருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது, 13 பேரின் பெயர்களை உள்ளடக்கியதாக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிய தேசியப் பட்டியலில் - மலிக் சமரவிக்கிரம, கரு ஜயசூரிய, டி.எம். சுவாமிநாதன், அதுரலிய ரத்னதேரர், ஜயம்பதி விக்கிரமரட்ண, திலக் மாரப்பன, பேராசிரியர் மாரசிங்க, அனோமா கமகே, சிறினால் டி மெல், குணவர்தன, எம்.எச்.எம்.நவவி, டொக்டர் ஹபீஸ், சல்மான் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக  இருந்து, தேர்தலில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தோல்வியுற்ற பலருக்கு தேசியப் பட்டியலில் ரணில் இடமளிக்கவில்லை. ஆனபோதும் மக்கள் காங்கிரஸின் சிபாரிசில் ஐ.தே.க. தேசியப் பட்டியலில் நியமிக்கப்படும் எம்.எச்.எம்.நவவி, தேர்தலில் தோல்வியடைந்தவராவார்.

தோல்வியுற்ற ரோஸி சேனநாயக்க போன்ற கட்சி முக்கியஸ்தர்களுக்கோ நல்லாட்சிக்காக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்துவந்த அஷாத் சாலிக்கோ அல்லது வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதிக்கோ நேரடியாக ஐ.தே.க. தேசியப் பட்டியலில் இடமளிக்காத தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பங்காளிக் கட்சி என்பதற்காக மக்கள் காங்கிரஸினால் பிரேரிக்கப்பட்ட ஒருவருக்காக மாத்திரம் தனது கொள்கையை தளர்த்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஐ.ம.சு.கூவோடு ஒப்பிடுகையில், ஐ.தே.கட்சியானது தனது தேசியப் பட்டியல் நியமனத்தை மிக 'சுத்தமாக' செய்திருக்கின்றது என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. ஆனால், நிராகரிக்கப்பட்டவர்களை தேசியப் பட்டியலில் நியமிக்கும் போக்கு ஐ.ம,சு.கூவுக்குள் மிகத் தீவிரமாக காணப்படுகின்றது.

சுதந்திரக் கட்சி இம்முறை தேசியப் பட்டியலில் - மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா, திலங்க சுமதிபால, சரத் அமுனுகம, விஜித் விஜயமுனி சொய்சா, மலிக் ஜயதிலக, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அங்கஜன் இராமநாதன், பௌஸி, பைசர் முஸ்தபா ஆகிய 12 பேரை பிரேரித்திருக்கின்றது. இதில் பலருக்கு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவிருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள சிலரது பெயர்களைப் பார்த்த போது முற்போக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் மட்டுமன்றி சாதாரண பொது மக்களும் முகம் சுழித்தனர். யார் யாருக்கெல்லாம் இனி அரசாங்கத்தில் இடம் கிடைக்காது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்களோ அவர்களில் பலர் மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் வந்திருக்கின்றனர் என்பதை மக்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

குறிப்பாக - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புடவையை உருவி அவமானப்படுத்துவேன் என்ற தோரணையில் பகிரங்கமாகக் கூறிய எஸ்.பி. திஸாநாயக்க - சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் தேசியப் பட்டியல் எம்.பி.யாவும் நியமிக்கப்பட்டது மட்டுமன்றி அவருக்கு அமைச்சும் வழங்கப்படலாம். அதேபோல், நான்கைந்து நஞ்சுக் குப்பிகளுடன் தொலைக்காட்சிகளில் தோன்றி நல்லாட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த டிலான் பெரேரா போன்றோருக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைத்திருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முதன்முதலாக கட்சி மாறிய ஹூனைஸ் பாரூக்குக்குக் கிடைக்காத தேசியப் பட்டியல் எம்.பி., மஹிந்தவின் சால்வையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்குக் கிடைத்திருக்கின்றது. மிகக் குறைவான வாக்குகளால் தோல்வியடைந்தமைக்காகவும் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காகவுமே இப்பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கையில், முன்னமே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே இப்பதவி கிடைத்ததாக புதுக்கதை ஒன்றை ஹிஸ்புல்லா கூறியுள்ளமை புதுச் சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றது.

எது எப்படியோ, தேசியப் பட்டியல் நியமனத்தின் நியதிகள் மீறப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அமைப்புக்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையானவை என்ற தீர்மானத்துக்கே வரவேண்டி இருக்கின்றது. 

ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது கட்சியைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு தலைவர் என்ற வகையில் இது இயல்பானதும் கூட.

அதன் காரணமாகவே - மஹிந்தவை ஆதரிக்காத காரணத்தால் தோல்வியுற்ற அரசியல்வாதிகளையும் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையானவர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக மைத்திரிபால, சுதந்திரக் கட்சிக்கு உள்ளே எடுத்திருக்கின்றார். இதில் நியாயம் இல்லாமலும் இல்லை.

இருப்பினும், கடந்த ஆட்சியில் தனியே மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவரை மட்டும் மக்கள் ஒதுக்கவில்லை. அவரது வலது -இடது கைகள், அல்லக்கைகளையுமே மக்கள் ஒதுக்கித் தள்ளினர். அதற்கெதிரான வாக்குகளே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஆக்கியது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியது. அதன் பிற்பாடு இவர்கள் இருவரது பதவியையும் ஆட்சியதிகாரத்தையும் பொதுத் தேர்தலின் ஊடாக வாக்காளப் பெருமக்கள் மீள உறுதிப்படுத்தவும் அதுவே அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றது.

தேசியப் பட்டியலில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல்வாதிகளை நியமிக்கும் போக்கு அரசியலைப் பொறுத்தமட்டில் சர்வ சாதாரணம் என்றாலும், மக்களின் நல்லபிப்பிராயத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு செய்திருப்பதை மக்களால் நம்ப முடியவில்லை.

நீதியான - வன்முறைகளற்ற தேர்தல், சுமுகமான வாக்களிப்பு... என வரலாற்றில் மிகப் பெரிய சாதனைகளை இப் பொதுத் தேர்தல் சாத்தியமாக்கியுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமை கௌரவப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்குரிமையின் உண்மையான பலாபலனை மக்கள் அனுபவிப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம்.

ஆனால், தேசியப் பட்டியல் மூலம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர முடியுமென்றால் மக்களின் வாக்குகளுக்கு இருக்கின்ற உண்மையான மரியாதைதான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் முன்னைய அரசாங்கங்கள் செய்த அதே தவறை, நல்லாட்சி அரசாங்கமும் செய்துவிடக் கூடாது என்பதே மக்களின் கரிசனை.

மக்களால் தோற்கடிக்கபட்டவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்குவது என்றால், குறைந்தபட்சம் - ஐந்து வருட ஆட்சிக்கான ஆணையை வழங்கியிருக்கின்ற நாட்டு மக்களுக்கு அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகள் தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .