2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேசியப் பட்டியல் சர்ச்சை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியப் பட்டியல் ஆசனங்கள் முன்னொரு போதும் இல்லாதளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறன.

தேசிய அரசியலிலும், தமிழர் அரசியலிலும், முஸ்லிம்களின் அரசியலிலும் இந்த தேசியப் பட்டியல் விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு முதற்காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கலாமா என்ற சர்ச்சை. இரண்டாவது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு.

இந்த இரண்டு காரணங்களினாலும் தான், தேசியப் பட்டியல் விவகாரம் முன்னெப்போதுமில்லாத பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 29 தேசியப் பட்டியல் ஆசனங்கள் இருக்கின்றன.

196 உறுப்பினர்கள், மாவட்ட அடிப்படையில் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், எஞ்சிய 29 உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் பகிரப்படும்.

தேசிய அளவில், கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த தேசியப் பட்டியல் ஆசனங்கள் பகிரப்படும்.

இந்த தேசியப் பட்டியல் ஆசனங்கள், கட்சிகளுக்கு வெளியே இருக்கும் புலமையாளர்கள், சாதனையாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டவையே அன்றி, அரசியல்வாதிகளுக்கானது அல்ல.

ஆனால், இதுவரையில், புலமையாளர்களை மட்டும் உள்ளடக்கியதாக எந்தவொரு கட்சியும் தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்பிய வரலாறு இல்லை. தேசியப் பட்டியலுக்கான நியமனங்கள் இரண்டு வழிகளில் மேற்கொள்ளப்படும்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை நிறுத்திய கட்சி ஒன்று, தாம் போட்டியிடும் மாவட்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் ஒன்றை அளிக்க வேண்டும்.

எல்லா மாவட்டங்களிலும் போட்டியிடும் ஒரு கட்சி 29 தேசியப் பட்டியல் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இந்தப் பட்டியலில் இருந்தே, கட்சிகள் பெறும் ஆசனங்களுக்கு அமைய உறுப்பினர்களை நியமிக்கலாம்.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற வேட்பாளர்களையும் தேசியப் பட்டியலில் நியமிக்க முடியும்.

ஆனால், இதற்கு முந்திய ஒரு சில சந்தர்ப்பங்களில், இந்த இரண்டு விதிமுறைகளுக்கும் அப்பால், எந்தவொரு வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெறாதவர்கள் கூட தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

உதாரணத்துக்கு, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல்- தேசியப் பட்டியலில் இடம்பெறாமல், பசில் ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இம்முறை அதுபோன்று வெளியில் இருந்து எவரையும் தேசியப் பட்டியலுக்கு நியமிக்க முடியாது என்றும் ஏதாவதொரு வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றால் தான், தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்க முடியும் என்றும், தேர்தல்கள் ஆணையாளர் கண்டிப்பாக முடிவை அறிவித்திருந்தார். இதனால், பல கட்சிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

அதேவேளை, இம்முறை தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்கக் கூடாது என்ற பலமான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான கபே, பப்ரல் போன்றவையும், மாதுளுவாவே சோபித தேரர் போன்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இதனை வலியுறுத்தியிருந்தனர்.

இந்தக் கட்டத்தில், ஒரு சர்ச்சையான விடயம் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாத உறுப்பினர்களை தோல்வியுற்றவர்களாக கருத முடியுமா என்பதே அது.

தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையில், ஒரு வாக்கு குறைவாகப் பெற்றவர் கூட தோல்வியுற்றவராகவே பிரகடனப்படுத்தப்படுவார். அங்கு வெற்றி பெற்றவர் தவிர, மற்றெல்லா வேட்பாளர்களினதும் எதிர்காலம் அத்துடன் சூனியமாகி விடும். வெற்றி பெற்ற உறுப்பினர் பதவி விலகினாலோ, மரணமடைந்தாலோ, இடைத்தேர்தல் தான் நடத்தப்படுமே தவிர, தோல்வியுற்றவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் அவ்வாறான நிலை இல்லை.

7 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டிய ஒரு மாவட்டத்தில் 10 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு அமையவே அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்படுவர்.

அதற்காக, குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களை  தோல்வியுற்றவர்களாகக் கருத முடியாது. ஏனென்றால், அந்த நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்குள் அவர்கள் உறுப்பினராகும் வாய்ப்பைக் கொண்டிருக்கக் கூடும்.

உறுப்பினரொருவர் பதவி இழந்தாலோ, இறந்து போனாலோ, அல்லது பதவி விலகினாலோ, ஏற்படும் வெற்றிடத்துக்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்றவரே நியமிக்கப்படுவார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு உள்ள ஒருவரை எவ்வாறு தோல்வியுற்றவர் என்று அழைக்க முடியும் என்ற கேள்வி உள்ளது. அவர்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும் கூற முடியாது.

மக்களின் போதிய ஆதரவைப் பெறாத- உறுப்பினராகும் தகைமையைப் பெறாத என்ற ஏதோ ஒரு பதத்தைப் பயன்படுத்திக் கொள்வதே பொருத்தம்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராகும் தகைமையைப் பெறாதவர்கள், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்வது முறையல்ல என்பதே, சிவில் சமூகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் போன்றவற்றின் நிலைப்பாடாக உள்ளது.

அதாவது மக்களின் போதிய ஆதரவு கிடைக்காததால் தான், இவர்கள் வெற்றிபெற முடியாது போனதாகவும் அத்தகையவர்கள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வது பின் கதவு வழியாக செல்வதற்குச் சமம் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்திலேயே தேர்தலில் தோல்வியடைவோருக்கு தேசியப் பட்டியலில் இடம் கொடுக்கமாட்டோம் என்று கூறியது ஐ.தே.க. ஜே.வி.பியோ, தமது தேசியப் பட்டியலில் அரசியல்வாதிகள் எவரும் இல்லை என்றும் துறைசார் நிபுணர்களையே நிறுத்தியிருப்பதாகவும் கூறியது.

தேர்தல் முடிந்த பின்னர் இந்த வாக்குறுதிகள் எல்லாமே கலைந்து போயின.

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், 13 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஐ.தே.கவுக்கும், 12 இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் கிடைத்தன.

ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா 2 தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றின. இந்த இடங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் எல்லாக் கட்சிகளுமே, சிக்கலை எதிர்கொண்டன- குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கின்றன.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 29 பேரில், 11 பேர் நாடாளுமன்றம் செல்வதற்குப் போதிய வாக்குகளைப் பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஆசனங்களைப் பெற்ற ஐ.தே.க தம்முடன் கூட்டணி சேர்ந்த அகில இலங்கை மக்கள்; காங்கிரஸுக்கு, வழங்கிய ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டதால், ஐ.தே.கவின் வாக்குறுதி பொய்யாகியது.

அதைவிட, டி.எம். சுவாமிநாதன் தவிர, வேறு தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை, பெண்களுக்கு ஒரே இடம் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் ஐ.தே.க மீது உள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரையில், நாடாளுமன்றம் செல்லும் தகைமையைப் பெறாத 7 பேருக்கு இடமளித்து, அதிக பழியைச் சுமந்து நிற்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கைக் குறைப்பதற்கு, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்த தனது ஆதரவாளர்களை பின்கதவால் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய இக்கட்டான நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டது.

இது அவரது நல்லாட்சித் தத்துவத்துக்குக் கூட ஒரு கரும்புள்ளியாகவே அமைந்து விட்டது.

இடதுசாரித் தலைவர்களையெல்லாம், தேசியப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு, தனது விசுவாசிகளை மட்டும் பெரும்பாலும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஒரே ஒரு தமிழரை மட்டும், தேசியப் பட்டியலில் நியமித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, பெண்களுக்கு இடமளிக்கவேயில்லை.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஜேவிபியைப் பொறுத்தவரையில், தமது தேசியப் பட்டியலில் அனைவருமே துறைசார் நிபுணர்கள் தான் என்று கூறி வாக்குக் கேட்டு விட்டு, போதிய ஆசனங்கள் கிடைக்காத ஏமாற்றத்தினால், தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டது.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சுனில் ஹந்துநெத்தியை பின்கதவால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய ஜே.வி.பி அவருடன் கூடவே ஏற்கெனவே தேசியப் பட்டியலில் இருந்த  சரத் சந்திர மாயாதுன்னவையும் சேர்த்துக் கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 பேர் கொண்ட தேசியப் பட்டியலைக் கொடுத்திருந்தாலும், அதில் இருந்து ஒருவரையேனும், தெரிவு செய்யாமல், வெற்றிபெறும் தகைமையை இழந்த துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரை நியமித்திருக்கிறது.

இவ்வாறான நான்கு பிரதான கட்சிகளுமே, வெற்றிபெறும் வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கே தேசியப் பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருக்கின்றன. இவ்வாறு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்கியதன் மூலம், இந்தக் கட்சிகள் பெற்றிருக்கும் ஆதாயத்தை விட, பாதகங்களே அதிகம் எனலாம்.

பின்கதவால் உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பியதான கெட்டபெயரை மட்டுமன்றி, தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற ஏனையவர்களின் பகையையும் சம்பாதித்திருக்கின்றன.

தேசியப் பட்டியலின் ஊடாக துறைசார் நிபுணர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற அரசியலமைப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டுள்ளது.

இதனை எந்தக் கட்சியும் உணர்வதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக, தேசியப் பட்டியல் ஆசனங்களைத் துறைசார் வல்லுனர்களுக்கு என்று ஒதுக்காமல் வெற்றிபெறாத அரசியல்வாதிகளுக்கானது என்ற மாற்றி வைத்துக் கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X