2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோடியின் மாநிலத்திலிருந்து இட ஒதுக்கீடு போராட்டம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சியின் விளையாட்டு இப்போது விபரீதமாகி விட்டது. 'எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்' என்று பட்டேல் சமூகத்தினர் நடத்தும் மாபெரும் போராட்டம் இதைத்தான் எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலத்தில் நடக்கும் இந்த இட ஒதுக்கீடு போராட்ட நாயகனாகத் திகழ்கிறார் ஹர்தீப் பட்டேல். 22 வயதான இளைஞர் அம்மாநிலத்தின் முக்கிய சமுதாயமான பட்டேல்களின் புதிய தலைவராகியிருக்கிறார் என்பது மற்ற மாநில அரசியல்வாதிகளை சற்றே மிரள வைத்துள்ளது. டெல்லியில் இளம் வயதில் ஒரு கெஜ்ரிவால் உருவானார். பிரதமராக மோடி வந்த பின்னர் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிரதமரின் காலடியிலேயே பாரதிய ஜனதாக் கட்சியை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தார்.

இப்போது பிரதமரின் சொந்த மாநிலத்தில் உருவாகியுள்ள லீடரான 'ஹர்தீப் பட்டேல்' அம்மாநில பா.ஜ.க.வுக்கு அச்சுறுத்தலாகவும், பா.ஜ.க.வின் செல்வாக்கு இழப்பில் வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸுக்கு தர்மசங்கடமாகவும் மாறியிருக்கிறார். '22 வயதில் இப்படியொரு போர்க்குணம் உள்ள தலைவரா' என்று தன் மாநிலத்தில் உள்ள தன் சமூக மக்களால் அதிசயிக்கப்படுகிறார். தன் சமூகத்தை அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட வைத்தது ஹர்தீப்பின் இமாலய சாதனை.

அதுவும் ஒரே நேரத்தில் 5 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்தியது இதுவரை எந்த லீடரும் சாதிக்காதது. அது மட்டுமின்றி, இன்றைக்கு இந்திய அரசே துணை இராணுவத்தை நடத்தி குஜராத்தில் அமைதியை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட இந்திய பிரதமராக இருப்பவர் தனது சொந்த மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தன் கீழ் உள்ள துணை இராணுவத்தை அனுப்ப வேண்டிய நிலையை உருவாக்கி விட்டார் ஹர்தீப் பட்டேல். இத்தனைக்கும் பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர்தான் குஜராத் மாநில முதலமைச்சராக இருக்கிறார் என்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்திபென் பட்டேல் குஜராத் மாநில முதல்வராக இருக்கிறார். ஆனால், அதே சமுதாயத்துக்காக இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் 'ஹர்தீப் பட்டேல்' அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று அறிவிக்கிறார். அதற்கு அவர் கூறும் ஒரே காரணம், 'ஆனந்திபென் பட்டேல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் அதிகாரம் இல்லை. அதிகாரம் வேறு சிலர் கையில் இருக்கிறது' என்று பூடகமாகக் கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு யார் மீது என்ற கேள்வி எழுந்தாலும், இன்றைய தினம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரமோடி பிரதமராக இருக்கிறார். அதே மாநிலத்தைச் சேர்ந்த அமித்ஷா பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.

இவர்களின் தேர்வுதான் குஜராத் முதல்வராக இருக்கும் ஆனந்திபென் பட்டீல் என்பது நாடறிந்த விஷயம். இந்த பின்னனியில் ஹர்திக் பட்டேலின் குற்றச்சாட்டைப் பார்த்தாலும், பட்டேல் சமூகத்தினர் இந்த அளவுக்கு ஆவேசமாக போராட்டத்தில் குதித்திருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியும் முக்கியக் காரணம். அதனால்தான் ஹர்திக் பட்டேல் என்னை 'ஹர்திக் கேஜ்ரிவால்' என்றோ, 'ஹர்திக் மோடி' என்று அழைக்காதீர்கள். 'ஹர்திக் சர்தார்' என்று அழையுங்கள் என்று பிரகடனம் செய்திருக்கிறார்.

'தங்கள் மாநிலத்தில் ஒதுக்கப்படுகிறோம்', 'தங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இல்லை', 'தங்களின் செல்வாக்கு எவ்வளவு இருந்தாலும் அதிகாரத்தில் நமக்கு இடம் இல்லை' என்ற கோபம் பட்டேல் சமூகத்தினர் மத்தியில் கொப்பளிப்பதற்கு பா.ஜ.க.தான் காரணம். ஒன்று வலுவான பட்டேல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை குஜராத் மாநில முதல்வராக பா.ஜ.க. நியமிக்கவில்லை. இன்னொன்று மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி மீது இருக்கும் கோபத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலை முன்னிறுத்தியதால் வந்த பிரச்சினை. பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி நேருவை விட பட்டேல் சிறந்த தலைவர் என்பது போன்றதொரு தோற்றத்தை பா.ஜ.க. தலைவர்கள் ஏற்படுத்தினார்கள்.

அந்த இரு தலைவர்களுமே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரையொருவர் பரஸ்பரம் மதித்துக் கொண்டார்கள் என்பது தனிக்கதை. இது மட்டுமின்றி சர்தார் பட்டேலுக்கு 597 அடியில் சிலை குஜராத்தில் வைக்கப்படும் என்று இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த போதே அறிவித்தார்.

அதற்காக நூறு கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி வைத்தார் அன்று முதல்வராக இருந்த நரேந்திரமோடி.  அவர் பிரதமரான பிறகும் மத்திய அரசே சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு நிதி ஒதுக்கியது. இப்படி சர்தார் பட்டேலின் புகழ் பற்றி பரப்புரை செய்யப்பட்ட விதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தினருக்கு 'தங்களின் செல்வாக்கு என்ன, தங்கள் தலைவர்களின் பலம் என்ன' என்பதை நினைவு படுத்திக் கொண்டிருந்தது.

அந்த சமூகத்தில் பலம் பெற்றிருந்த கேசுபாய் பட்டேல் போன்றவர்களுக்கும் ஆட்சியும் இல்லை. அதிகாரமும் இல்லை என்ற நிலையில், தங்கள் பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் பட்டேல் சமூக மக்கள். பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி வரும் சமூகம் பட்டேல் சமூகம். ஆகவே 'ஹர்திக் பட்டேல்' போராட்டம் அக்கட்சிக்கு குஜராத்தில் பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. டெல்லியில் எப்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி துவங்கியதும், காங்கிர

ஸுக்கு செல்வாக்கு பறிபோனதோ அதே மாதிரி 'ஹர்திக் பட்டேல்' அரசியல் கட்சி துவங்கினால் முதலில் பலிகடா ஆவது பா.ஜ.க.வாகத்தான் இருக்கும். அதனால்தான் அமைதி காக்குமாறு பிரதமரே அறிக்கை விட்டிருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க 'பட்டேல்' சமுதாயத்தினர் தங்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு' அந்தஸ்து வேண்டும் என்று தொடங்கியுள்ள போராட்டம் வட மாநிலங்களில் அடுத்தடுத்து இது மாதிரியுள்ள சமுதாயங்கள் இட ஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தை தூண்டி விடும் அபாயம் இருக்கிறது.

ஏற்கெனவே இந்தியாவின் வட மாநிலங்களில் ஏறக்குறைய 9 மாநிலங்களில் இருக்கும் 'ஜாட்' சமூகத்தினர் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதற்கான உத்தரவை பிறப்பித்தாலும் அது, இந்திய உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று உத்திரவு பிறப்பித்த இந்திய உச்சநீதிமன்றம், 'ஜாதியை அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்டோர் என்று அறிவிப்பது கூடாது' என்றும் 'அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு சமூக ரீதியிலான பின்தங்கிய நிலைமை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதேபோல், ராஜஸ்தானில் 'குஜ்ஜார்' இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் 'ஜாட்' மற்றும் 'குஜ்ஜார்' இன மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால், வட மாநிலங்களில் இட ஒதுக்கீடு கேட்கும் போராட்டம் முன்பு தமிழகத்தில் வெடித்தது போல் பெரிய அளவிலான போராட்டமாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி இந்த போராட்டத்தை சுமூகமாக கையாள்வதே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்.

'ஹர்திப் சர்தாரின்' போராட்டம் குஜராத் மாநிலத்துக்குள் மட்டும் பா.ஜ.க.வுக்கு விடப்பட்ட சவால் என்ற கருது முடியாது. ஒட்டு மொத்த வட மாநிலங்களிலும் அக்கட்சிக்கு இது பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை 'பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நாயகன்' என்று முன்னிறுத்தி பா.ஜ.க. சென்ற முறை தேர்தல் பிரசாரம் செய்தது. அதனால் நாடு முழுவதும் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் பிரதமராகட்டும் என்று உணர்வு ரீதியாக வாக்களித்தார்கள். அதனால்தான் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியிடம் ' இட ஒதுக்கீடு கேட்டால் கொடுத்து விடுவார்' என்ற நம்பிக்கை பல்வேறு சமுதாயத்தினர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவரை வெற்றி பெற வைத்து பிரதமராக அழகு பார்த்திருக்கும் குஜராத் மக்கள் மத்தியில் இருக்கிறது.

அந்த உணர்வுகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி எப்படி மதிக்கப் போகிறார், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் முடிவு எடுத்தால், கட்சி ரீதியாக பா.ஜ.க. எந்த அளவுக்கு பிரதமருக்கு ஆதரவு கொடுக்கும் என்பதெல்லாம் இனி வரும் காலங்களில் பரபரப்பான அரசியாலாக இருக்கும் என்றே தெரிகிறது. இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முன்னெடுத்து, 'ஹர்திக் சர்தார்' பூனைக்கு மணி கட்டியிருக்கிறார். இனி அந்த மணியின் ஓசை இந்திய அரசியலில் எப்படி கலக்கப் போகிறது? தேசியக் கட்சிகளாக இருக்கும் பா.ஜ.க.வுக்கும், காங்கிர

ஸுக்கும் எது மாதிரியான தலைவலியைக் கொடுக்கப் போகிறது என்பது இனி நடக்கப் போகும் சற்று வித்தியாசமான அரசியல் திருவிளையாடலாகவே இருக்கு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .