2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கன்னியமர்வு இன்று: 5பேருக்கு மட்டுமே ஆசனங்கள் ஒதுக்கீடு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னியமர்வு இன்று 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு ஆரம்பமாகும்.

இன்றைய நாள் அமர்வு, இரண்டு அமர்வுகளால் இடம்பெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

முதலாவது சபையமர்வு இன்றுக்காலை 9.30க்கு ஆரம்பமாகும் இதன்போது, 8ஆவது நாடாளுமன்றத்துக்கான சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். அவர், சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர்.

அதன் பின்னர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுவர். பின்னர், சபை முதல்வர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாக்களின் பெயர்களை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவிக்கும். இதன்போது எதிர்க்கட்சித் தலைவரின் பெயரும் பிரேரிக்கப்படும்.

இரண்டாவது அமர்வு மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகும். குதிரைப்படை சகிதம் நாடாளுமன்றத்துக்கு வருகை தரும்  ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி நாட்டு மக்களுக்கு அவையிலிருந்து உரையாற்றுவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர் கரு ஜயசூரியவினால், புதிய சபாநாயகரின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய நாடாளுமன்றத்துக்கான சபாநாயகர் ஏகமனதாக தெரிவு செய்யப்படவில்லையாயின், வாக்கெடுப்பை நடத்தி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

கன்னியமர்வை யொட்டி, நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழிகளின் இருமருங்குகளிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.   

நாடாமன்றம் வளாகமும் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கன்னியமர்வை கண்டு களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், இராஜதந்திரிகள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மக்கள் கலரியில் அமர்வதற்காக மட்டும் சுமார் 600 அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அக்காரியாலயம் அறிவித்துள்ளது.

இன்றைய கன்னியமர்வின் போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளப்பட்ட அமைச்சர்கள் மூவர் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்வர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான ஆசனங்களில் அமரலாம், சபாநாயகர் தெரிவு செய்ததன் பின்னரே, ஒழுங்குமுறையின் பிரகாரம் ஆசனங்கள் ஒதுக்கிக்கொடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .