2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மீற்றர் வட்டி தொல்லையால் 16 பசுக்கள் ரூ.3 இலட்சத்துக்கு விற்பனை

Gavitha   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பகுதியில் வியாபாரி ஒருவரிடம் 3 இலட்சம் ரூபாயை மீற்றர் வட்டிக்கு வாங்கிய நபரொருர் கடன் பிரச்சினை காரணமாக, 16 பசுமாடுகளை 3 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாங்கிய மூன்று இலட்சத்துக்கு வட்டியும் முதலுமாக 15 இலட்சம் ரூபாயை கொடுத்துள்ளதாக அவ்வியாபாரி காங்கேசன்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் வியாழக்கிழமை (03) முறையிட்டுள்ளார்.

அம்முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1 இலட்சத்துக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் வீதம் என்ற அடிப்படையில், சந்தை வியாபாரி ஒருவரிடம் தனது சகோதரன் 3 இலட்சம் ரூபாயை வட்டிக்கு பெற்றிருந்தார். தொடர்ந்து வட்டிப்பணத்தை செலுத்தி வந்தாலும் சில மாதங்கள் தவறியதால் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டிப்பணத்தை, சந்தை வியாபாரி அறவிட்டுள்ளார்.

பணம் வாங்கியவர் மாத வட்டியினை செலுத்த முடியாததன் காரணமாக தலைமறைவாகியுள்ளார். எனினும் அவர் வளர்த்த 16 பசுமாடுகளை குறித்த சகோதரி வளர்த்து வந்துள்ளார்.

பணம் கொடுத்தவர் மாடுகளை பலவந்தபடுத்தி பறித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து, மாடுகளுக்கு தண்ணீர் வைக்கவிடாது தடுத்துள்ளதுடன், பணம் வாங்கியவன் வந்து மாடுகளுக்கு தண்ணீர் வைக்கவேண்டும் எனவும் மிரட்டி, மொத்தமாக 15 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு பெற்ற பணம், வாங்கிய பணத்தினை விட 5 மடங்கு அதிகம் எனவும் இதனால் குறித்த பசுமாடுகளை வளர்க்க முடியாத சகோதரி, 16 மாடுகளை 3 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நெல்லியடி பகுதியில் சட்டவிரோதமான பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவர்களை கண்டறிந்து கைது செய்யுமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நெல்லியடி பொலிஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தொடர்பில், கண்டறிவதற்கு காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .