2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறிய, நடுத்தர தொழிற்துறை முயற்சிகளே நன்மை பயக்கும்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் எம்முடைய சமூக, சூழல் விழுமியங்களுக்கு ஏற்புடையதான SMS எனப்படும் சிறிய, நடுத்தர தொழிற்துறை முயற்சிகளே எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூடிய நன்மை பயக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி, கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04) பகல் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1979ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் பலவிதமான கைத்தொழில்கள் அப்போதைய இந்திய அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு மூன்று தொகுதிகளாக அவை பற்றிய நூல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. அவற்றை அப்போதைய கைத்தொழில் அமைச்சராக இங்கிருந்த சௌமியமூர்த்தி தொண்டைமான் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்.

இயந்திரவியல், உலோகவியல் சம்பந்தமான தொழில்களும் மின்சாரம், மின்னியல் சம்பந்தமான தொழில்களும் இரசாயனவியல் சம்பந்தமான தொழில்களும், மட்பாண்ட கலை சார்ந்த தொழில்களும், உணவு சார்ந்த தொழில்களும், தோல் சம்பந்தமான அல்லது தோல் பதனிடும் தொழில்களும் முதலாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தன. 

இரண்டாவது தொகுதியில் அதே வகையான வேறு பல தொழில்களும் அத்துடன், பின்னப்பட்ட உள்ளாடைகள், காலுறைகள் சம்பந்தமான தொழில்களும் விளையாட்டுகள் சம்பந்தமான தொழில்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. 

மூன்றாவது தொகுதியில் மின்சாரம் சார்பான வேறு தொழில்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நூல் பிரதிகள் இன்றும் என் கைவசம் உள்ளன. தொண்டைமானின் அமைச்சுச் செயலாளர் கனடா செல்லமுன் என்னிடம் அவற்றைத் தந்து விட்டுச் சென்றார்.

1969 தொடக்கம் 1976 வரை வேப்பமரம் பாவிப்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து பயன் தரக் கூடியவாறு எவ்வெந்தக் கைத்தொழில்களை ஏற்படுத்தலாம் என்பது சம்பந்தமான நூல் ஒன்று இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரதியும் என் கைவசம் உள்ளது.

எந்தளவுக்கு அந்த நூல்கள் எமக்குப் பயனுடையதாக இருப்பன என்று என்னால் கூற முடியாதிருப்பினும் சிறிய நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் எம்மால் நடைமுறைப்படுத்தப்படும்போது எம்மக்களுக்கு நன்மை தருவனவாக அமையக் கூடிய தொழில்கள் எவையென அடையாளப்படுத்தப் பொருத்தமான தகவல்கள் அந்நூல்களில் காணக்கூடியதாக இருக்கின்றன.

இவ்வாறு தொழில்கள் அடையாளப்படுத்தப்பட்டு எமது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு எமது மக்களின் ஆற்றல் அவற்றினூடாக வெளிக்கொண்டு வரப்படும் போது அவர்களது உற்பத்திகளை தேசிய ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் ஆவண செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பது எமது தலையாய கடமையுமாகும் எனக் கருதுகின்றேன்.

இவ்வருடம் எமது கண்காட்சியானது மூன்று பிரதான தொகுதிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கூடம், செயன்முறைக் கூடம் மற்றும் விற்பனைக் கூடம் என வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயன்முறைக் கூடத்தில் கைத்தறி நெசவு, பேப்பர் உற்பத்தி, மரவேலை, மண்பாண்ட உற்பத்தி, சிப்பியினாலான தொழில் உற்பத்தி, பனைசார் தொழில் உற்பத்தி, உணவு உற்பத்தி, தோல்சார் உற்பத்தி பொருட்கள் என பல பொருட்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும் பலவற்றை நாங்கள் வருங்காலங்களில் உள்ளடக்க வேண்டும் என்பதே எனது அவா. அதற்காகவே மேற்குறிப்பிட்ட அந்நூல்கள் பற்றி நான் இங்கு குறிப்பிட்டேன்.

குறித்த நூல்களை வேண்டுமெனில் எமது திணைக்களத்தினரிடம் கையளிக்க எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவை இந்திய நாட்டுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் எமது மக்களுக்குப் புதிய கைத்தொழில்களை அடையாளப்படுத்தி அவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்த அந்நூல்களின் மூலம் முடியுமானால் எமது மக்களுக்கு அவை பொருளாதார விருத்தியை ஏற்படுத்திக் கொடுப்பன என நான் கருதுகின்றேன்.

தொழில்த்துறைகளில் ஈடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில்த் திணைக்களம் என்பவற்றின் மத்தியஸ்தர்கள் மூலம் தரமான எம்மவர் ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறும் கைப்பணிப் பொருட்கள் தேசிய அருங்கலைகள் பேரவையினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியிலும் கைத்தறிப் பொருட்கள் புடவைக் கைத்தொழில்த் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டும் பெறுமதிமிக்க பரிசில்களை அவை பெற்று வந்துள்ளன என்று நம்புகின்றேன்.

எமது அலுவலர்கள் நடைமுறையில் இருக்கும் தொழில்கள் சார்பான கைவினைஞர்களை இனங்காண்பது மட்டும் போதாது. நாட்டுக்குப் பயன் தரும் புதிய கைத்தொழில்களை அடையாளங்கண்டு எமது மக்களிடையே அவற்றை அறிமுகப்படும்துவதும் முக்கியமானதாகும் எனக் கருதுகின்றேன்.

மேலும், எமது திணைக்களத்தின் வியாபார ஆலோசனை நிலையத்தினூடாக வணிக வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கான முதலீட்டு ஆதரவு, தொழில் முயற்சி மேம்பாடு, வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு போன்ற பல சேவைகளையும் நாங்கள் வழங்கி வருவதாக அறிகின்றேன். எனினும், எமது நடவடிக்கைகளானவை விரிவாக்கம் செய்யப்பட்டு போதியவாறு வட மாகாணத்தில் கைத்தொழில்களை மேம்படுத்த நாம் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றுக்கான உதவிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X