2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்)

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழல் இனிது யாழ் இனிது என்பர் 
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்...

சிறுவர்கள் உலகில் சஞ்சரிப்பது என்பது மிகவும் மகத்தானதொரு செயல். இந்தச் சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிறுவர் தினம், 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் இன்றைய தினமான ஒக்டோபர், 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. (முதியோர் தினமும் இன்றைய நாளிலேயே கொண்டாடப்படுகின்றது) எனினும், இச்சிறுவர்கள் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் வௌ;வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்நாளில் நினைவுகூறப்படுகின்றமை விசேட அம்சமாகும். 

வளர்ந்த பெரியவர்கள் அனேகர் 'நான் இன்னும் சிறு வயதுடையவராகவே இருந்திருக்கலாம்' என வாய்விட்டுக்கூறுகின்றனர். காரணம், சிறு வயதில் தாம் விட்ட தவறுகளை சரிப்படுத்த எண்ணுகின்றனர். காலம் திரும்பாது அல்லவா? எனவே, தற்போதுள்ள சிறுவர்களாகிய நீங்கள் உங்கள் சிறு வயதுக் காலத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

'ஒப்புரவு ஒழுகு' 
என்கின்றது ஒளவையாரின் ஆத்திசூடி. இதன் பொருள் யாதெனில், உலகத்தின் போக்கு எப்படி என்று அறிந்து; அதற்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும் என்பதாகும். உலகம் என்பது உங்களைச் சுற்றியிருக்கும் சமூகம். இச்சமூகம் நன்மையானதாகவும் இருக்கும். தீமையானதாகவும் இருக்கும். நன்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் நல்லவற்றை உள்வாங்கி அதற்கு ஏற்றால்போல் ஒழுகுதல் வேண்டும். தீமையாக இருக்கும் போது, அதைவிட்டு விலகிச் செயற்படுதல் வேண்டும். இதுவே எதிர்கால சமூகத்தின் விழுதுகள் ஆகிய சிறார்களின் பொறுப்பாகும். 

சமூகமானது பல விதிமுறைகளை விதித்திருக்கின்றது. அவ்விதிமுறைகளை ஒழுகாததன் காரணமாக அதாவது கடைப்பிடிக்காமையினால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. சாதாரணமாக ஒரு சின்ன விடயமாக இருந்தாலும் அதற்கென்று இருக்கும் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும். சிறுபராயம் முதலே இவ்வாறான விதிமுறைகளை மிகச் சரியான முறையில் கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகளே வராது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்வார்களே.

சிறுபராயமானது அநாவசியமான எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத வயது. ஆகவே, இவ்வயதில் நல்லவற்றை விதைப்போம். இந்த விதை ஆலமரமாகும் போது சமூகத்துக்கு நிழல் எனும் சுகத்தை உண்டாக்கும்.

சமூகத்தின் விதிமுறை எனும் போது, தொழிலை சரியான முறையில் மேற்கொள்ளுதல், அன்பு, பண்பு, தீயதை தீண்டாது இருந்தல், சட்டங்களை மதித்தல் மற்றும் விதிகளை மீறாது இருத்தல் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். 

சிறுவர்களது தொழில் கல்வி கற்பது. இக்கல்வியை சிறுவயது முதற்கொண்டு சரியான முறையில் உள்வாங்கிக் கற்க வேண்டும். கற்றது மாத்திரமல்லாது கற்ற கல்வியின் படி நடத்தல் வேண்டும். 

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இக்குறளின் பொருள் யாதெனில், கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்க நெறியில் நிற்கவேண்டும். கல்வி மூலமாக சிறந்த ஒழுக்கம், பண்பு, இரக்கம், தீயன விலக்கி நடத்தல் மற்றும் அன்பு என பல நல்ல விடயங்களையும் சேர்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.  

ஒரு நன்நெறிக் கதை உண்டு. 

பெரியவர் ஒருவர் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். மேடும் பள்ளமுமாக இருந்த அந்தப் பாதையில் நடக்க அவர் துன்பப்பட்டார். 

களைப்பு அடைந்த அவர், ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார். அப்பொழுது ஏழு வயது சிறுமி ஒருத்தி, இரண்டு வயதுடைய பையன் ஒருவனை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த மலைப்பாதையில் ஏறி வந்துகொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்த அவர், 'பையனைத் தூக்கிக்கொண்டு இந்தக் கடினமான மலைப்பாதையில் ஏறி வருகின்றாயே. இவன் உனக்குப் பாரமாகத் தெரியவில்லையா?' என்று கேட்டார். 

'ஐயா! இவன் எனது தம்பி. இவன் எப்படி எனக்குப் பாரமாகத் தெரிவான்?' என்று பதில் கேள்வி கேட்டாள் அவள். 

'நீ சொல்வது சரிதான். அன்பு இருந்தால் எதுவும் நமக்குத் துன்பமாகத் தெரியாது' என்றார் அவர். 

இக்கதையிலிருந்து இச்சிறுமி அன்பு எனும் உணர்வைக் கடைப்பிடித்திருக்கின்றாள். சிறு வயது முதல் அனைவரிடமும் அன்பாகப் பழகும்போது எம்மீதான மற்றவர்களின் மரியாதையும் அதிகரிக்கும் என்பதை சிறார்கள் ஆகிய நீங்கள் மனதில் நிறுத்துங்கள். அன்பு செலுத்துவது மாத்திரமல்ல விதிமுறைகளையும் சரியாகக் கடைப்பிடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். 

பெரியோர்களைவிட சிறார்களாகி நீங்கள் அவதானித்திருப்பீர்கள் இன்றளவில் விபத்துக்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன? நொடிக்குப் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு விபத்துக்கள் ஏன் அதிகரித்துள்ளன என உங்கள் சின்னஞ்சிறு சிந்தனைகளைப் பரப்பிப்பாருங்கள். மிகச் சிறிய விடயம்தான். அதற்கென்று இருக்கும் விதியை சரியான முறையில் கடைப்பிடிக்கவில்லை. அதாவது, வீதி ஒழுங்கைப் பேணவில்லை. 

சிறுவயது முதல் இந்த வீதி ஒழுங்குகளை நீங்கள் சரியாக கடைப்பிடியுங்கள். உங்கள் மூலமாக பெரியவர்களைத் திருத்துங்கள், தவறில்லை. (மேற்குறிப்பிட்டிருந்த நன்னெறிக் கதையில் மலைப்பாதையில் ஏற சிரமப்பட்ட பெரியவரை, சிறுமி திருத்தியது போன்று) சட்டங்களை மதித்து நடந்துகொள்ளுங்கள். பாதசாரிக் கடவையில்தான் வீதியைக் கடக்க வேண்டும் என்பது அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறை. அப்படியிருக்கும் போது பாதசாரிக் கடவையில் மட்டும் வீதியைக் கடவுங்கள். இது சின்ன விடயம் தானே என ஒதுக்கி விடாதீர்கள். 

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது 

எனவே, சின்னச் சின்ன விடயமாக இருந்தாலும் எதிலும் பிழைவிடாதீர்கள். இவ்வாறான சின்னச் சின்ன விடயங்களில் விடும் பிழைகள் தான் சமூகத்தில் தற்போது தலைதூக்க முடியாத பல்வேறு குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. 

இன்று, சிறுவர் துஷ்பிரயோகம் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றது. சிறார்களாகிய உங்களை அடித்தல், தீயால் சுடுதல், நஞ்சூட்டல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தல், புறக்கணித்தல், உணர்ச்சியை மதிக்காமை, சமூக தொடர்பைத் துண்டித்தல், அச்சுறுத்தல், பாலியல் உறவுக்கான தூண்டுதல் மற்றும் வற்புறுத்தல் என்பன சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆகும். இந்த தீமைகளிலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது உங்கள் வயது சிறார்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

ஏனேனில், எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போவது நீங்களே. ஆகவே, மனதாலும் உடலாலும் வலுவானவர்களாகத் திகழுங்கள். மனதால் வலுவானவர்களாகத் திகழ சூரியன் உதிப்பதற்கு முன்னரே நீங்கள் எழுந்திருங்கள். தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் யோகாசனத்தால் மனதை ஒருநிலைப்படுத்துவது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைளை முன்னெடுங்கள். 

சரியான ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பித்து உங்கள் சின்னஞ்சிறு உடலைப் பாதுகாத்துக்கொள்வதுடன் வலிமையானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தற்போதுள்ள கொடிய சமூகத்திடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 

எனவே, இன்று முதலே சிறுவர்களாகிய நீங்கள் நல்லவற்றை இனங்கண்டு அவற்றை உள்வாங்கி, ஒரு நல்ல பிரஜையாக வாழுங்கள். இவ்வாறு இருக்கும் போது பெரியவர்களுக்கு முன்மாதிரியாக மட்டுமல்லாது எதிர்கால சமூகத்துக்கும் பாதுகாப்பு நிறைந்த வலுவான அத்திபாரமாகுங்கள்.

- ப.பிறின்சியா டிக்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .