2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-8)

Thipaan   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே.அஷோக்பரன்

சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த வேளையிலே, அதற்கு மறுதாக்கமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை, நாட்டில் ஆங்காங்கே தலை தூக்க ஆரம்பித்தது. தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அனுமதிக்க பண்டாரநாயக்க நினைத்த போதும், தீவிர சிங்களத் தலைமைகள் அதனைப் பலமாக எதிர்த்தன.

'முழு இலங்கையும் சிங்களவருக்கே', 'தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை சிங்களம் மட்டுமே' என்ற கோஷத்தை அவர்கள் முன்வைத்தனர். அதனை எதிர்த்து, தமிழ் மொழியின் நியாயமான பாவனையை அங்கிகரிக்கும் திராணி, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிடம் இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வி, சிங்கள 'ஸ்ரீ' அறிமுகம் என தமிழ் மக்களின் குறைந்த பட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல், தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகும் நிலையே காணப்பட்டது. இந்நிலையில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது மாநாட்டை வவுனியாவில் கூட்டியது. இந்த மாநாட்டில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்பட்டதனை எதிர்த்து, அஹிம்சை வழியில் நேரடிப் போராட்டத்தில் இறங்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து வேலையிழந்த தமிழ்த் தொழிலாளர்களை பொலன்னறுவையில் குடியேற்றும் முயற்சிக்கு, பொலன்னறுவை சிங்கள மக்களிடையே கடுமையான எதிர்ப்புக் காணப்பட்டது. இந்த எதிர்ப்பலையை தமக்குச் சாதகமாக்கிய சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள், தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து வவுனியா செல்லும் கட்சியினரைத் தாக்க இந்த மக்களைப் பயன்படுத்தின.

1958ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி பொலன்னறுவை ரயில் நிலையத்தினுள் அத்துமீறி உட்புகுந்த இந்த வன்முறைக் கும்பல், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதத்தை அடித்து நொறுக்கினர். அதிர்ஷ்டவசமாக, இந்த வன்முறைக் கும்பல் தாக்கவிருப்பது பற்றிய தகவல் முன்னமே கிடைத்துவிட்டதால், ஒரு பயணியைத் தவிர ஏனையோர் பொலன்னறுவைக்கு முன்பாக வெலிக்கந்தயிலேயே இறங்கிவிட்டனர். ஒரே ஒரு பயணியோடு வந்த ரயில்;, பொலன்னறுவையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. அதன் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த ஒரே ஒரு பயணியும் தாக்கப்பட்டார்.

1958 மே 23ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு சென்ற ரயில் 215ஆவது மைல்கல்லுக்கருகே வைத்து தடம்புரளச் செய்யப்பட்டது. இதில் ஒரு பொலிஸ் சாஜனும், புகையிரதத் தொழிலாளியும் உயிரிழந்தனர்.

இன்னும் சிலர் படுகாயமடைந்தனர். வெறும் 47 பேர் மட்டுமே பயணம் செய்த அந்த ரயிலில் பெரும்பான்மையாகப் பயணித்தது சிங்களவர்களே. அந்த ரயிலைத் தடம்புரளச் செய்து தாக்கியவர்களது எண்ணம், வவுனியா செல்லும் தமிழ்ப் பயணிகளைத் தாக்குவதாகும், ஆனால், தவறான ரயிலை அவர்கள் தாக்கியிருந்தார்கள்.

1958ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி, பொலன்னறுவை ரயில் நிலையத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியது. இதில் அங்கு அதிகளவில் நின்றிருந்த சிங்கள மக்களும் தாக்கப்பட்டனர், ரயில் நிலையத்துக்;கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பொலன்னறுவையில் கடுமையானளவில் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ஏற்கெனவே, திருகோணமலையிலிருந்து தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படும் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், அன்று எழுந்திருந்த அரசியல் சூழல் அதற்கு எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்தது. இந்த நிலையில், 1958ஆம் மே 25ஆம் திகதி, பொலன்னறுவையில் கூடிய ஏறத்தாழ 3,000 அளவிலான சிங்கள வன்முறையாளர்களால், தமிழ் மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

பெண்கள், கர்ப்பிணிகள் என எந்தவிதப் பேதமின்றி, மனிதாபிமானமின்றி வெறித்தனமான தாக்குதலுக்கு பொலன்னறுவை வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுத்தனர்.

பொலன்னறுவையைப் பொறுத்தவரை அங்கு பொலிஸாரின் அளவு குறைவாகவே காணப்பட்டது. மூவாயிரம் அளவிலான வன்முறையாளர்களைச் சமாளிக்குமளவுக்கு அவர்களுக்கு ஆட்பலமிருக்கவில்லை.

உடனடியாக மேலதிக படைகளைக் கேட்டும், அரசாங்கம் இந்த வன்முறைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதே 1958ஆம் ஆண்டு மே 25இல் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

இத்தகையதொரு சம்பவத்தில் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயரான டி.ஏ.செனவிரட்ன, மட்டக்களப்பில் உயிரிழந்தார். டி.ஏ.செனவிரட்ன மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டமைதான் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் வெடிக்க காரணம் என பிரதமர் பண்டாரநாயக்க, மே 26ஆம் திகதி சொன்னார்.

ஆனால், டி.ஏ.செனவிரட்ன கொல்லப்பட்ட மே 25க்கு 3 நாட்களுக்கு முன்பதாக, மே 22 இலேயே வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பமாகிவிட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற இனவெறித் தாக்குதலுக்கு பிரதமர் பண்டாரநாயக்க காரணம் கற்பித்தாரே ஒழிய, அதனைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் அதுவரை எடுக்கவில்லை. இதைப் பற்றி தனது 'எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)' நூலில், 'சிலோன் ஒப்சேவர்' பத்திரிகையின் ஆசிரியராக அன்று இருந்த டாஸி விட்டாச்சி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்: 'செனவிரட்னவின் பெயரை மட்டும் பிரதமர் தனியே சுட்டிச் சொன்னமைக்குக் காரணமென்ன? கடந்த நாட்களில் பல மக்களும் உயிரிழந்துள்ளார்கள். செனவிரட்ன ஒரு செல்வந்தர் என்பதுதானா அவரது பெயரை மட்டும் இப்படியொரு முக்கியமான சூழலில் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம்?'.

சா.ஜே.வே. செல்வநாயகமும், பிரதமர் பண்டாரநாயக்க, செனவிரட்னவின் மரணத்தை சுட்டிக்காட்டியதை கண்டித்தார். செனவிரட்னவின் மரணம் கலவரத்தால் வந்ததா, தனிப்பட்ட பகை காரணமாகக் கொல்லப்பட்டாரா என்பதைக் கண்டறியாது, அன்றைய சூழலில் பிரதமரானவர் செனவிரட்னவினது பெயரைப் பயன்படுத்தியமை மிகத் தவறானது என்று பின்பு நாடாளுமன்றில் பேசிய செல்வநாயகம் சுட்டிக்காட்டினார்.

1958ஆம் ஆண்டு மே 25 - 26 அளவில், கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கூட வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. புறக்கோட்டை, மருதானை, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, தெஹிவளை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் மீது வன்முறையாளர்கள் இனவெறித்தாக்குதலை நடத்தினர். தமிழ் மக்களின் வீடுகள், கடைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1958ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி காலையில் ஆர்.ஈ.ஜயதிலக தலைமையிலான பல்லினக் குழுவொன்று பிரதமர் பண்டாரநாயக்கவை அவரது ரொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் சந்தித்து உடனடியாக அவசரகால (எமர்ஜென்ஸி) பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு பண்டாரநாயக்க 'நீங்கள் (சிறிய விடயத்தை) மிகைப்படுத்துகிறீர்கள். நிலைமை அவ்வளவுக்கு மோசமில்லை' எனப் பதிலளித்தார். பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு அவசரகாலப் பிரகடனம் செய்வதில் நிறையவே தயக்கம் இருந்தது.

1953ஆம் ஆண்டு ஹர்த்தாலின் போது அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க அவசரகாலப் பிரகடனம் செய்ததும், அதனைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் பிரபல்யமிழந்ததும், டட்லி சேனநாயக்க அதன் விளைவாகப் பதவி விலகியதும், அவசரகாலப் பிரகடனம் செய்வதில் பண்டாரநாயக்கவுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கும். அவசரகாலப் பிரகடனத்தை பண்டாரநாயக்க தோல்வியின் சாட்சியாகப் பார்த்தார் என்கிறார் அன்றைய 'சிலோன் ஒப்சேவர்' ஆசிரியர் டாஸி விட்டாச்சி. அதே 27ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்யுமாறு பிரதமர் பண்டாரநாயக்கவிடம் கோரியிருந்தார். ஆனால், பண்டாரநாயக்க எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதே 1958ஆம் ஆண்டு மே 27இல் பாணந்துறையில் ஒரு வதந்தி பரவியது. பாணந்துறையிலிருந்து மட்டக்களப்புக்குக் கற்பிக்கச் சென்ற சிங்கள ஆசிரியை ஒருவர், அங்கு தமிழ் வன்முறைக் கும்பலால் மார்பகங்கள் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதன் விளைவாக பாணந்துறைப் பகுதியில் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. இந்த இனவெறிக்கும்பல் பாணந்துறையிலிருந்த இந்துக் கோவிலொன்றுக்குத் தீவைக்க முயற்சித்தது. அது தோல்வியடையவே, அங்கிருந்த கோவில் ஐயர் ஒருவரை உயிருடன் எரித்தார்கள்.

மட்டக்களப்பு ஆசிரியர் பற்றிய வதந்தி கல்வியமைச்சுக்கும் எட்டவே, அவர்கள் அதைப்பற்றி விசாரிக்க ஓர் அதிகாரியை அனுப்பிவைத்தனர். அவரது அறிக்கையில், அந்த வதந்தியில் இம்மியளவும் உண்மை இல்லை எனவும், பாணந்துறையிலிருந்து சென்று மட்டக்களப்பில் ஓர் ஆசிரியர் கற்பிப்பதாகப் பதிவுகளிலே இல்லை எனவும் தெரிவித்தார். இதைப் போல பல வதந்திகள் பரவின. துளியேனும் உண்மையில்லாத இந்த வதந்திகள் இனவெறியையும் வன்முறையையும் தோற்றுவித்தன. மட்டக்களப்பு, ஏறாவூரிலும் கடுமையான இனவெறித்தாக்குதல் இடம்பெற்றது. கொழும்பில் பரவலாகத் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களுடைய வீடுகள், கடைகள், வியாபாரஸ்தலங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன, தீயிட்டுக் கொழுத்தி எரிக்கப்பட்டன. 1958 கலவரத்தின் வன்முறைச் சம்பவங்கள் பற்றி விரிவாக பல

நூல்கள் பதிவு செய்துள்ளன. இதில் டாஸி விட்டாச்சி எழுதிய 'எமர்ஜென்ஸி 1958 (ஆங்கிலம்)' முக்கியமானதொரு ஆவணம். இலங்கையின் முன்னணி பத்தரிகையான 'சிலோன் ஒப்சேவரின்' அன்றைய ஆசிரியரான டாஸி விட்டாச்சி 1958இன் துன்பியல் நிகழ்வுகளைக் காத்திரமாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழர்களை அடையாளங்காண முயற்சித்த விதம், பௌத்தரல்லாத சிங்களவர்களும் தாக்கப்பட்டமை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. ஏனென்றால், இவை இத்தோடு முடிந்துவிடவில்லை. இலங்கையின் இரத்தம் தோய்ந்த இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு கலவரத்திலும் இது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதைக் காணவிளையும் போது, இலங்கையில் தமிழ் மக்கள் கடந்து வந்த பாதையைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்ந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். சுதந்திர இலங்கை வரலாற்றில் 1956ஆம் ஆண்டு கல்ஓயா கலவரத்துக்;குப் பின்னர், தமிழ் மக்கள் மிகக்கொடூரமானதொரு இனவெறித் தாக்குதலை நாடுதழுவிய ரீதியில் 1958ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சந்தித்திருந்தனர்.

தமிழ் மக்களது மொழியுரிமை பறிக்கப்பட்டது, அவர்கள் மீது சிங்கள மொழி திணிக்கப்பட்டது, சிங்கள 'ஸ்ரீ' அவர்களது வாகனங்களில் பொறிக்கப்பட்டது, இதை அஹிம்சை வழியில் தமிழ்த் தலைமைகள் எதிர்க்க விளைந்தபோது, தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பிரதமர் பண்டாரநாயக்கவிடம் நிச்சயம் இருந்தது. ஆனால், அதை அவர் செய்யவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை. 1958 மே 27 நண்பகலை நெருங்கும் வேளையில், அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க, மரபினை மீறி, பிரதமர் பண்டாரநாயக்கவை, பிரதமரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

மதியமளவில், பிரதமரின் சம்மதத்தோடு, ஆளுநர் சேர் ஒலிவர் குணத்திலக்க அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு தழுவிய ரீதியில் வன்முறையை அடக்க இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மொழிப் பிரச்சினை தொடர்பில் இருவேறு தீவிர எல்லைகளிலிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன.

(அடுத்தவாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .