2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பப்பாசிப் பழ விற்பனையில் வவுனியா விவசாயிகள் சாதனை

George   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக பப்பாசிப் பழங்களை விற்பனை செய்துள்ளனர் என வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வவுனியா முத்தையா மண்டபத்தில் சர்வதேச கூட்டுறவாளர்தின விழா ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்து நின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி ஆகும்.

கூட்டுறவு அமைப்புகள் நலிவடைந்திருப்பதற்கு கடந்த காலப் போரையே பலரும் காரணமாகச் சொல்லி வருகிறார்கள். போரும் ஒரு காரணமே தவிர, போர் மட்டுமே ஒரு காரணம் அல்ல.

கூட்டுறவு அமைப்புகள் சரிவர இயங்க முடியாமல் இருப்பதற்கு, திறந்த பொருளாதாரத்தின் போட்டிச் சந்தைக்கு அவற்றால் முழுமையாக முகங்கொடுக்க முடியாமல் இருப்பதும் பெருங்காரணமாக உள்ளது. தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய புதிய வழிமுறைகளைக் கூட்டுறவு அமைப்புகள் கண்டறிந்து செயற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

கூட்டுறவால் சாதிக்க முடியும் என்பதற்கு வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் கூட்டுறவுச்சங்கம் ஒரு எடுத்துக்காட்டு. 200 பப்பாசிச் செய்கையாளர்கள் இணைந்து இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விவசாயிகளிடம் இருந்து சங்கம் கிலோவுக்கு 30 ரூபாய் கொடுத்துப் பப்பாசிப் பழத்தை கொள்வனவு செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில், இதுவரையில் 70 மில்லியன் ரூபாய்க்கு பழம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது.

வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பைப் பாராட்டுவதற்கு இன்னுமொரு விடயம் உள்ளது. இந்தக் கூட்டுறவுச் சங்கம் காலப் பொருத்தமாக சி.ஆர்.எக்ஸ்போர்ட் எனப்படும் ஏற்றுமதி நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து கொண்டுள்ளது. இந்தக்; கூட்டுத்தொழில் முயற்சியால், விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் பப்பாசிப் பழங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது.

இதன்மூலம் இந்த ஆண்டில் கூட்டுறவு அமைப்புக்கு 24 இலட்சம் ரூபாய் இலாபப் பங்காகக் கிடைத்திருக்கிறது.

வினைத்திறன் மிக்க இந்தச் சங்கத்தைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளனம் வடக்கின் 2015ஆம் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதை இதற்கு வழங்கிக் கௌரவித்திருக்கிறது. அந்தவகையில், ஏனைய உற்பத்திகளில் ஈடுபடும் விவசாயிகளும், கூட்டுறவு அமைப்புகளும் வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்தை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X