2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மைக்ரோசொப்ட்டின் முதலாவது மடிக்கணினி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முதலாவது மடிக்கணினியை மைக்ரோசொப்ட் நிறுவனமானது கடந்த செவ்வாய்க்கிழமை (06) அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் புதிய வரிசை திறன்பேசிகளையும், புதிய Surface Pro டப்லெட்டையும், இற்றைப்படுத்தப்பட்ட அணியக்கூடிய உடற்கூற்று கண்காணிப்பான மைக்ரோசொப்ட் Band ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவையனைத்தும், மைக்ரோசொப்ட்டின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இலேயே இயங்கவுள்ளது.

தற்போது, டப்லெட் மற்றும் திறன்பேசிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தென் கொரியாவின் சம்சுங், அப்பிளுடன் போட்டியிடும் முகமாக விண்டோஸ் 10 ஐ, கடந்த ஜூலை மாதம் மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இதில் 110 மில்லியன் சாதனங்கள் இயங்குவதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

Surface Book என்றழைக்கைப்படும் தனது மடிக்கணனியின் விலை 1,499 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. இது, அப்பிளின் MacBook Pro ஐ விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. இந்த மடிக்கணினி 13.5 அங்குலம் கொண்ட தொடுதிரையை கொண்டதாக அமையவுள்ளதோடு, இதன் தொடுதிரையையை தட்டச்சுப்பலகையில் இருந்து தனியாக பிரித்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸல் என்று தெளிவைக் கொண்டிருப்பதுடன், கண்ணாடியால் ஆன கணினிச் சுட்டி தொடுபரப்பையும் கொண்டமையவுள்ளது. இதன் நிறை 700 கிராம் என்பதோடு, 7.7 மில்லிமீற்றர் தடிப்பை கொண்டதாக அமையவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி முதல் இது சந்தைக்கு வரவுள்ளது. இதற்கான முற்பதிவுகள் நேற்று ஆரம்பமாயிருந்தன.

இது தவிர, நியூயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வில், லூமியா 950, லூமியா 950XL, லூமியா 550 என மூன்று திறன்பேசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. லூமியா 950 ரக திறன்பேசியின் விலை 549 அமெரிக்க டொலர்களாக அமையவுள்ளதோடு, லூமியா 950XL ரக திறன்பேசியின் விலை 649 அமெரிக்க டொலர்களாக அமையவுள்ளது. இந்த இரண்டு ரக திறன்பேசிகளும் எதிர்வரும் மாதம் சந்தைக்கு வரவுள்ளன. லூமியா 550 ரக திறன்பேசியின் விலை 139 அமெரிக்க டொலர்களாக அமையவுள்ளது. இது எதிர்வரும் டிசம்பர் மாதம் சந்தைக்கு வரவுள்ளது.

லூமியா 950 ரக திறன்பேசி, 5.2 அங்குல தொடுதிரையுடன், Qualcomm Snapdragon 808 processor உடன் இணைந்த hexacore CPU ஐ கொண்டிருப்பதுடன், லூமியா 950XL ரக திறன்பேசிகள், 5.7 அங்குல தொடுதிரையக் கொண்டிருப்பதுடன், Snapdragon 810 processor உடன் இணைந்த octa-core CPU ஐயும் கொண்டுள்ளது. தவிர, 20 மெகா பிக்ஸல் கமெராவையும், அதற்கான தனி பொத்தானையும், 4K காணொளியை எடுக்கக்கூடிய வகையிலும். 32GB நினைவகத்தையும் கொண்டமைந்துள்ளது. லூமியா 550 ரக திறன்பேசி, 4.7 அங்குல திரையுடனும், Qualcomm's Snapdragon 210 processor உடன் அமையவுள்ளது.

இது தவிர, முன்னைய Surface Pro 3  டப்லெட்டுடன் பல இற்றைப்படுத்தல்களுடன் Surface Pro 4 டப்லெட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 12.3 அங்குல தொடுதிரையைக் கொண்டமையவுள்ளதோடு, ஒரு அங்குலத்துக்கு 267 பிக்ஸல் தெளிவுத்தன்மையையும் கொண்டுள்ளது. இது 6ஆவது தலைமுறை Intel Core processor ஐ கொண்டிருப்பதுடன், 16GB RAM ஐயும், 1TB நினைவகத்தையும் கொண்டுள்ளது. இது அப்பிளினுடைய MacBook Air ஐ விட 50 சதவீதம் வேகமாக இயங்கும் என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. இதுவும் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியாகவுள்ளதோடு, இதற்கான முற்பதிவுகள் நேற்று ஆரம்பமாயிருந்தன. இதன் விலை 899 அமெரிக்க டொலர்களாக அமையவுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மடிக்கணினி, டப்லெட், திறன்பேசிகள், இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி உயிரியல் உள்நுழையும் Windows Hello வசதியைக் கொண்டு அமையவுள்ளன. இந்த வசதி மூலம் பயனர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களின் முகம், கண், விரலடையாளம் என்பவற்றை ஸ்கான் செய்ய முடியும்.

மேலும், ஒரு வருட கால ஆயுட்காலத்தை உடைய Surface Pen ஐ மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1,024 அழுத்த புள்ளிகளைக் கொண்டிருப்பதுடன், ஐந்து வெவ்வேறு நிறங்களிலில் வெளிவரவுள்ளது. இதேவேளை, பயனர்களின் உடற்கூற்று மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கும் 249 அமெரிக்க டொலர் பெறுமதியான மைக்ரோசொப்ட் Band 2 உம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வளைந்த திரையையும் கொரில்லா கண்ணாடி 3 ஐயும் கொண்டமைந்துள்ளது. இது ஒக்டோபர் 30ஆம் திகதி சந்தைக்கு வரவுள்ளது.

இது தவிர தனது மெய்நிகர் தோற்ற மெய்மை தலையணியான HoloLens ஐயும் மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த வருட ஆரம்பம் முதல் வெளிவரவுள்ளதோடு, இதன் விலை 3,000 அமெரிக்க டொலராக அமையவுள்ளது. அறிமுக நிகழ்வின்போது இதன் மூலம் கலப்பு தோற்ற மெய்மை விளையாட்டு ஒன்று காட்டப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X