2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மரண தண்டனையெனும் மாயப்பிசாசு

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

மரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சமிக்ஞையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்திய பின்னர், அண்மைக்கால அரசியல் கலந்துரையாடல்கள் போலவே, அதற்கு ஆதரவானதும் எதிரானதுமான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விவாதமும், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

மரண தண்டனையை இலங்கை அறிமுகப்படுத்துமா, இல்லையா என்பது தொடர்பில் குழப்பமான சமிக்ஞைகளே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் மரண தண்டனைக்கு நடைமுறையில் இல்லாத காரணத்தால், அந்த நிலைமையைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கும், அதன் தொடர்ச்சியாக மரண தண்டனையை இல்லாதொழிக்கவும் இலங்கை திட்டமிடுவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

ஆனால், அதன் பின்னர் காலியில் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி, நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளுமாயின், அடுத்த வருடத்திலிருந்து இலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வருமெனத் தெரிவித்திருந்தார். இதில் குறிப்பிடத்தக்கவொரு விடயம், மரண தண்டனை தொடர்பாக சட்டம், இலங்கையில் ஏற்கெனவே காணப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கைகள் சட்டம் 1979இன், 285ஆவது சரத்தின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், ஜனாதிபதி கையழுத்திடப்பட்டதும்

தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடுகிறது. ஆகவே, இதில் நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்கின்றதா, இல்லையா என்பது தொடர்பில் கருத்தறிய ஏதுமில்லை. மாறாக, ஏற்கெனவே காணப்படும் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி விரும்புகிறாரா, இல்லையா என்பது தான் இருக்கின்ற கேள்வியே.

இது இவ்வாறிருக்க, மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களமும் தெரிவித்து வருகின்றது. ஆகவே, இலங்கையின் நாடாளுமன்றம் விரும்புகின்றது என ஜனாதிபதி நினைத்தாராயின், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு அவரால் முடியும்.

இங்கு தான், மரண தண்டனை தேவைப்படுகின்றதா, அது பொருத்தமானதா என்ற கேள்விகள் எழுகின்றன.

வழக்கமாக வழங்கப்படும் நியாயப்படுத்தல் என்னவெனில், 'குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றைக் குறைக்க வேண்டுமாயின் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். வன்புணர்வு, கொலை, போதைப் பொருள் கடத்தல் போன்றனவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதைத் தவிர வேறு பொருத்தமான தண்டனை கிடையாது' என்பது தான்.

முதலில், மரண தண்டனையென்பது தேவையானதா என்றால், முன்னைய காலங்களில் மனிதச் சட்டத்தினிடத்தே மரண தண்டனையென்பது காணப்பட்டது தான். ஆனால், நாகரிகமடையத் தொடங்கிய பின்னர், நவீன உலகை உருவாக்கிய பின்னர், 'ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் அவருக்குத் தண்டனை வழங்குவது' என்பதிலிருந்த தவறை உணரத் தொடங்கினார்கள். ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது. ஏனெனில், ஒருவர் இறந்த பின்னர் அது அவருக்கான தண்டனையல்ல. மாறாக, அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உறவுகளுக்குமான தண்டனையே அது.

பொதுவாகவே, மரண தண்டனையை ஆதரிக்கும் போது, 'பாதிக்கப்பட்டவரின் பக்கம் இருந்து பாருங்கள். அப்போது தான் மரண தண்டனையின் நியாயம் புரியும்' என்ற வாதம் முன்வைக்கப்படும். உண்மை தான், என்னுடைய நெருங்கிய உறவினரொருவரைக் கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை நான் ஆதரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனது தனிப்பட்ட வலி என்பதனுடைய வெளிப்பாடு அது.

இதன் காரணமாகத் தான், சட்டத்தினுடைய தேவையும் வித்தியாசமும் உருவாகின்றது. என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளுக்கேற்றவாறு நான் தண்டனை வழங்க முயன்றால், அதன் பெயர் பழிவாங்கல். பழிவாங்கல்களில் நியாயமிருக்காது என்பதனால் தான், நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, நடுநிலையானவர்களாகக் கருதப்படும் நீதிபதிகள் மூலமாகத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட உணர்வுகள் சம்பந்தப்படாமல் தண்டனை வழங்கப்படுவது தான் நீதிமன்றத்தில் அடிப்படை நோக்கமாக இருக்கும் போது, மீண்டும் தனிப்பட்ட உணர்வுகளைத் தண்டனைக்குள் கொண்டுவருவதென்பது தவறானதாகவே அமையும்.

இவ்வாறு மரண தண்டனை கோரி நிற்பவர்களைச் சற்றுக் கவனமாக ஆராய்ந்தால், அவர்களின் நடவடிக்கைகளில் ஒரு போக்கை அவதானிக்க முடியும். உதாரணமாக, பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனைகளை எதிர்த்த பலர், இந்தோனேஷியாவில் வைத்து மயூரன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதும் எதிர்த்திருந்தார்கள். மரண தண்டனையென்பது இரக்கமற்றது என்றார்கள். ஆனால், அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர், 'வித்தியாவினை வன்புணர்ந்து கொன்ற இரக்கமற்ற கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும். அதுவே நீதியாகும்' எனக் குரலெழுப்பினார்கள்.

அதேபோல், 'தண்டனைகள் அதிகரிக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும், சவூதி அரேபியா போன்ற நாடுகளைப் பார்த்தால், வன்புணர்வுகளுக்கான தண்டனையாக மரண தண்டனை இருக்கின்றது, அதனால் அங்கு வன்புணர்வுகளே இடம்பெறுவதில்லை. அவ்வாறான தண்டனைகள் இங்கு வேண்டும்' என்றொரு வாதம் முன்வைக்கப்படுவதுண்டு.

முதலில், சட்டங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் சவூதி அரேபியாவையும் அதைப்போன்ற ஏனைய நாடுகளையும் உதாரணமாகக் கொள்ள முயன்றால், எமது மட்டத்தை நாம் குறைத்துக் கொள்கின்றோம் என அர்த்தம். மனித உரிமை மீறல்களுக்கும் சட்டம் நீதியாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்குமான உதாரணமாக அந்நாடுகள் காணப்படுகின்றன என்பது, மனித உரிமைகள் அமைப்புகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மரண தண்டனையென்பது பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றுக்கான தீர்ப்பாக இருந்தாலும், அந்தத் தண்டனை காரணமாக பாலியல் வன்புணர்வுகள், பாலியல் குற்றங்கள் குறைவடைந்துள்ளன என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. மாறாக, அங்கு காணப்படும் அதிகரித்த குற்றங்கள் தொடர்பான தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன.

தனது 5 வயது மகளை, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி, சித்திரவதை செய்து, கொலை செய்த தந்தையொருவர், சில மாதத் தண்டனைக்குப் பின்பு கடந்த ஓகஸ்டில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அங்குள்ள சட்டம் பொதுவாக, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டவரையும் உட்படுத்தியவரையும் தண்டனைக்குள்ளாக்கும் நடைமுறையும், சிலவேளைகளில், பாதிக்கப்பட்டவருக்கு அதிகமான தண்டனை கிடைக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக வேண்டுமானால், பாலியல் வன்புணர்வுகள் குறைவாகக் காணப்படுகின்றன என்றவாறான வெளித்தோற்றமொன்று காணப்படலாம்.

மறுபுறத்தில், தண்டனைகள் அதிகரிப்பட்டால் குற்றங்கள் குறையுமென்பது நிரூபிக்கப்படாத ஒரு கருத்தாகும். அவ்வாறே குற்றங்கள் குறைகின்றன என்று வைத்துக் கொண்டாலும், கடுமையான தண்டனை வழங்கப்படுவதை விட முக்கியமானதொன்று இருக்கிறது, அது தான், குற்றவாளிகள் மீது முதலில் சட்ட நடவடிக்கை எடுப்பது.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு துணை அமைப்புகள் இணைந்து, இலங்கையில் இடம்பெறும் வன்புணர்வுகள் சம்பந்தமாக 2013ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கையில் வன்புணர்வில் ஈடுபட்டோரில் 96.5 சதவீதமானோர் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 96.5 சதவீதம் பேர்‚

வன்புணர்வில் ஈடுபடும் 200 பேரில் வெறுமனே 7 பேர் மாத்திரம் தான் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகவுள்ளார்களெனில், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலென்ன, அவர்களை அதிகபட்ச சித்திரவதைப்படுத்தினாலென்ன. அது எவ்வாறு ஏனைய 193 பேரில் தாக்கத்தைச் செலுத்தும்?

ஆக, இருக்கின்ற சட்டத்தை முறையாக அமுல்படுத்தி, அதன் மூலம் குற்றங்கள் குறைகின்றவனவா என்பதை ஆராயாமல், தண்டனையை அதிகரிப்பதால் மாத்திரம் என்ன கிடைக்கப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது இல்லையா?

அதேபோல், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்

ஹூஸைன், இலங்கையின் நீதித்துறை சம்பந்தமாக அதிகபட்சமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நீதித்துறையின் சுயாதீனத் தன்மை குறித்த கேள்விகள் காணப்படுவதாகவும், அரசியல் தலையீடுகள் தொடர்ச்சியாகக் காணப்படுவதும் அவரது குற்றச்சாட்டுத் தெரிவித்தது. இவ்வாறு, உலகின் முக்கியமான சபையினது மனித உரிமைகள் பிரிவின் தலைவரது குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதித்துறையைச் சீரமைக்காமல், குற்றங்களைக் கடுமையாக்குவதைப் பற்றிச் சிந்திப்பதென்பது, எந்தளவு தூரம் பொருத்தமானது, எந்தளவு தூரம் சரியானதென்பது, ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியதொரு விடயம்.

ஏனென்றால், கொலை செய்யப்பட்ட 5 வயதுச் சிறுமியான சேயா சந்தவமியின் கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவனை, பொலிஸாரும் ஊடகங்களும் அவசர அவசரமாகக் கொலையாளியாக்கி, அவனது பெயரை நாசமாக்கிய சம்பவம் மிக அண்மையில் தான் இடம்பெற்றது. சிறிது தவறு நடந்திருந்தால் கூட, சவூதி அரேபியா போன்றதொரு சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருந்தால், அவனது உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கும் என்பது தான் யதார்த்தம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .