2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'அனைத்து பட்டதாரிகளுக்கும் அரச துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கமுடியாது'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

வேலையற்ற பட்டதாரிகள் எல்லோருக்கும் அரசாங்கத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கமுடியாது. மாறாக, தனியார் மற்றும் பிரத்தியேகத் துறைகளுள் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே, பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்க்கமுடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் மூலவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நாடு முழுவதும் பசுமையான கரையோர வலயங்களாக மாற்றப்படும் தேசிய மரம் நடுகைத்திட்டம், கல்லடிப்பாலத்துக்கு அருகிலுள்ள வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் உட்பட வேலையற்றோர் 3 இலட்சம் பேர் உள்ளனர்' என்றார்.
 
'கிழக்கு மாகாணசபை கலைவதற்கு முன்னர் 100,000 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். அபிவிருத்தி, தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வலயம் உள்ளிட்ட துறைகளில் கிழக்கு மாகாணத்துக்கு பாரிய முதலீட்டாளர்களை அழைத்துவந்து தொழிற்பேட்டைகளை அமைத்து ஏற்றுமதி வலயமாக மாற்றுவதற்கு அமைச்சர் ஆதரவளித்துள்ளார்' எனத் தெரிவித்தார்.  

'இனப்பிரச்சினை தீர்வை நோக்கிய பாதையில் 30 வருடங்கள் பின்நோக்கிய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கிறோம். மேலும், மூவின மக்களும் கணிசமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் எமது சிந்தனைகள் சமாதானத்தை நோக்கிய வழிகாட்டிகளாக மாறி கிழக்கு மாகாணத்தை மாற்றியமைக்க வேண்டும்' என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த கரையோரம் பேணல் மற்றும் கரையோரவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி, "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் இங்கு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

இன்று நாட்டின் கரையோரப்பிரதேசங்களில் காணப்படும் 20 வீதமான பசுமையான வளத்தை எதிர்வரும் மூன்றாண்டுகளில் 32 வீதுமாக மாற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையில் இந்த தேசிய மரநடுகை திட்டம் கரையோரப்பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

கரையோர வளங்களை பாதுகாப்பதற்காக நிழல் தரும் மரங்கள், பழ மரங்கள், போன்ற மரங்கள் நாட்டப்படுகின்றனஇதன் மூலம் நாட்டின் கரையோரப்பிரதேசம் பசுமையாக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வதாரமும் மேம்படுத்தப்படுகின்றது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .