2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொறுமை காக்குமா தமிழர் தரப்பு?

Thipaan   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி, ஜோர்தானில் இருந்து திரும்பியதும், போரை வென்று விட்டோம், பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டோம், ஈழக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம் என்று  தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அதுபோலத் தான், ஐ.நா பொதுச்சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு, கடந்தவாரம் நாடு திரும்பியதும், சர்வதேச ஆதரவை வென்று விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், உலகில் இப்போது இலங்கைக்கு எதிரி நாடுகளே இல்லை, எல்லா நாடுகளும் நட்பு நாடுகள் தான் என்றும் கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ வென்றதாக கூறியது ஆயுதப்போரில், மைத்திரிபால சிறிசேன வென்றதாகக் குறிப்பிட்டது இராஜதந்திரப் போரில்.

இந்த இரண்டு ஜனாதிபதிகளும், தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் மார்தட்டிக் கொண்டுள்ளதன் மூலம், எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என்பதை தமிழர் தரப்பு புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமானதல்ல.

ஆனால், இந்த இரண்டு ஒற்றுமைகளின் ஊடாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டில், சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொண்டார், கிட்டத்தட்ட தன்னை ஒரு மாமன்னராகவே மாற்றிக் கொண்டார்.

அவருக்கான ஆதரவு பெருகியது, நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியைப் பெற்று தன் பலத்தை நிரூபித்துக் கொண்டார்.

அதுபோலவே இப்போது, மைத்திரிபால சிறிசேன, உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தன் செல்வாக்கை வலுப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு அளித்த விருந்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் அமர்ந்திருந்த தலைமை மேசையில் ஆசனம் அளித்திருந்தார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

அதனை இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரமாக, ஆதரவாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் தனது பக்கத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

அதிலும், ஜெனீவா தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியதன் மூலம், சர்வதேச ஆதரவை வென்றெடுத்துள்ளது.

இது தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கவனிக்கத்தக்க விடயம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒரு தருணம்.

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ஆதரவு கிடைத்திருக்கின்ற சூழலில்,  தமிழர் தரப்பினால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயற்பட முடியாது.

அரசாங்கத்துக்கு இப்போது கிடைத்திருக்கின்ற சர்வதேச ஆதரவு என்பது சாதாரணமான ஒன்று அல்ல.

அதேவேளை, இந்த ஆதரவானது அரசாங்கத்துக்கு ஒரு விஷப் பரீட்சை போலத் தான்.

இந்த அரசாங்கம் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளின் மீது தான், சர்வதேச ஆதரவுத் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தற்போதைய அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பலவற்றை அவர் வரவேற்றிருந்தாலும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க தற்போதைய அரசாங்கம் மறுத்து விட்டது என்பதையும், கடந்த 30ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் அவர்  சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனால் தான், அவர், கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

அவர் முன்வைத்த கலப்பு நீதிமன்றப் பரிந்துரைக்கு இணையானதாக இல்லாவிட்டாலும், சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கு ஜெனீவா தீர்மானத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும், இந்தத் தீர்மானத்துக்கு இணங்கியிருக்கிறது.

தனியே விசாரணைப் பொறிமுறை மட்டுமன்றி, அரசியல்தீர்வு, தமிழர் பகுதிகளில் இயல்புவாழ்வு,  13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் இணங்கியிருக்கிறது.

இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் இணங்கியதால் தான், இலங்கைக்கான சர்வதேச ஆதரவு உறுதியாகியிருக்கிறது.

அவ்வாறாயின், அதன் அர்த்தம் என்ன? நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்கியிருக்கிறது என்பது தான்.

இவை எதற்கும், இணங்காத மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமல், அதனுடன், முட்டி மோதிக் கொண்டிருந்த சர்வதேச சமூகம், இப்போது நிபந்தனை அடிப்படையில் தான் ஆதரவளிக்கிறது.

சர்வதேச சமூகம் ஒன்றும் இலங்கையை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அதனிடம் சில விடயங்களை எதிர்பார்க்கிறது.

இலங்கையிடம் இருந்து வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறது, நிறைவேற்ற வேண்டிய விடயங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.

அதேவேளை, தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், இந்த தீர்மானம் தமக்குச் சாதகமானதா- பாதகமானதா என்ற குழப்பத்தில் இருக்கிறது.

கடந்தகால அனுபவங்கள், ஏமாற்றங்கள், வாக்குறுதி மீறல்கள் எல்லாமே, தமிழர் தரப்பிடையே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி, சர்வதேச சமூகமும் தம்மைக் கைவிட்டு விடுமோ, ஏமாற்றி விடுமோ என்ற கலக்கம் அவர்களிடம் இருக்கிறது.

அந்த அச்சத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான், ஜெனீவா தீர்மானம் பலராலும் பார்க்கப்படுகிறது. சந்தேகிக்கப்படுகிறது.

அதற்காக, ஜெனீவா தீர்மானம் என்பது தமிழர் தரப்புக்கு உயர்ந்த நியாயத்தை வழங்கும் என்றோ, அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஒன்றாக இருக்கும் என்றோ கருத முடியாது.

அதேவேளை, இது தமிழர்களுக்கு முற்றிலும் விரோதமானது என்றும் கூற முடியாது.

இந்தக் கட்டத்தில், தமிழர் தரப்பு கவனிக்க வேண்டியது, சர்வதேச அரசியல் சூழல் தமக்கு எந்தளவுக்கு சாதகமாக உள்ளது, இலங்கை அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு சாதகமாக உள்ளது என்பதைத் தான்.

இப்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான அரசியல் சூழல் தான் சர்வதேச அரங்கில் இருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில், தமிழர் தரப்பு தலைகீழாக நின்றாலும், எதுவும் நடக்கப் போவதில்லை.

2009 இல் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களால் இதனைத் தெளிவாக உணர முடிந்தது.

போரை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் தமிழர்கள் முன்னெடுத்த எத்தனையோ போராட்டங்களால் எந்தப் பயனும் கிட்டவில்லை.

இப்போதும் கூட, தமிழர் தரப்பு ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோ, அதனை செயற்படுத்த ஒத்துழைக்க மறுப்பதோ, அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கே வழியை ஏற்படுத்தி விடும்.

இப்போதைய நிலையில், சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்ற விடயம் சாத்தியமற்றது.

அத்தகையதொரு பொறிமுறையைத் தமிழர் தரப்பு உருவாக்க விரும்பினால், இப்போது முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை நியாயமற்றது என்று நிரூபிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் நியாயமான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை.

அதற்காக, அரசாங்கம் உருவாக்கப்போகும் பொறிமுறையை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

அது நீதியாக- நியாயமாக செயற்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குக் காலஅவகாசம் தேவை.

ஒருவேளை, அரசாங்கம் உருவாக்கும் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்துவதாக கூட அமையலாம்.

அத்தகைய கட்டத்தில், வீம்புக்காக அதனை எதிர்க்க முனைந்தாலும் ஆபத்து நிகழும்.

அதேவேளை, அரசாங்கம், ஜெனீவா தீர்மானத்தை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்த தவறினால், அதற்காக பதில் சொல்ல வேண்டிய தருணம் ஒன்று உருவாகும்.

தற்போதைய சர்வதேச அரசியல் சூழல் இப்படியே தொடரும் என்று கருத முடியாது.

அதுபோலவே இலங்கையின் அரசியல் சூழலும் இப்போதுள்ளவாறு இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது.

இத்தகைய கட்டத்தில், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறினால், தமிழர் தரப்புக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வாய்ப்புக் கிட்டும்.

அத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். அது இலங்கை அரசாங்கத்தின் கையில் தான் இருக்கிறது.

தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாது போனால் தான் அந்த வாய்ப்பு உருவாகும்.

அப்போது சர்வதேச சமூகம் இலங்கையுடன் நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

போர் முடிந்தவுடன், சர்வதேச சமூகம் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் நின்றது, எல்லா உதவிகளையும் அள்ளி வழங்கியது.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர் நடந்து கொள்ளவில்லை.

அதன் விளைவு தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த அவர் இன்று ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக மாறக் காரணமாயிற்று.

அத்தகைய நிலை, இப்போதைய அரசாங்கத்துக்கு ஏற்படாது என்பது நிச்சயமில்லை.

சர்வதேச சமூகம் கொடுத்துள்ள வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் முறை தான் அதனை நிச்சயிக்கப் போகிறது.

எனவே சர்வதேச சமூகம், இலங்கையுடன் ஒட்டி நிற்கும் போது தமிழர் தரப்பு, அதனுடன் எதிர்த்து நின்று முரண்படுவது புத்திசாலித்தனமானதாக இருக்காது.

அங்கு பலம் எப்போது குறையத் தொடங்குகிறதோ, சர்வதேச ஆதரவை எப்போது இழக்கத் தொடங்குகிறதோ அப்போது, அதனை எதிர்கொள்வது தான் சிறந்த இராஜதந்திரமாக இருக்கும். அதுவரை தமிழர் தரப்பு பொறுமை காக்குமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X