2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை, மேற்கிந்திய ஒ.நா தொடர் முன்னோட்டம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இலங்கை,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணிக்கு வாய்ப்புகள் கூடிய தொடராக இந்த தொடரை கருத முடியும் என்று கூறினாலும், மேற்கிந்திய தீவுகள் அணி போராடும். இலகுவாக இலங்கை அணி இந்த தொடரை எடுத்துக்கொள்ளாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கான தயார்படுத்தலாக இந்த தொடரை பாவித்து அணியை தயார் செய்வதே நல்லது. டெஸ்ட் தொடரில் அவ்வாறான தயார்ப்படுத்தலில் வெற்றி கண்டுள்ளது.

மேற்கிந்தியதீவுகள் அணி சிறந்த ஒரு நாள் சர்வதேசப்போட்டிக்கான வீரர்கள் இருந்தும் அவர்கள் இல்லாத 7நிலையில் களமிறங்கவுள்ளது. அவர்களுக்கு நல்ல தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என அனைவரும் பாராடுகின்ற போதும் அவருக்கு ஏற்ற அணியில்லாமல் தடுமாறி வருகின்றார். இந்த மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் அவரால் தனித்து நின்று எதனையும் செய்துவிடமுடியாது.

மேற்கிந்திய தீவுகள் அணி சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான வீரர்களை வைத்து உள்ள போதும் அவர்கள் யாரும் இல்லாதா நிலையில் இந்த அணி இலங்கை வந்துள்ளது. ஜேசன் ஹோல்டர் சிறந்த தலைவர் என பலரும் போற்றும் நிலையில் சிறந்த வீரர்கள் இல்லாமல் அவர் தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது. போட்டிகளை வென்று கொடுக்கவும் முடியாது. துடுப்பாட்டம் அவர்கள் பக்கமாக இல்லாத போதும் பந்துவீச்சு பலமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகள் போன்றே இலங்கை அணிக்கு சவால்களை வழங்கினாலும் வெல்லக்கூடிய நிலையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொள்ள முடியாது. காலநிலை சீராக இருக்கும் என்ற நிலையில் இந்த எதிர்வு கூறல்களை கூறமுடியும். மழைக் குறுக்கீடு இருப்பின் தொடரில் எது வேணும் என்றாலும் நடக்கலாம்.

 

அணி விபரம்

இலங்கை அணி

திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, லஹிறு திரிமான்னே, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ்(தலைவர்),மிலிந்த சிறிவர்த்தன, தனுஸ்க குணதிலக,அஜந்த மென்டிஸ்,லசித் மாலிங்க,சுரங்க லக்மால், துஸ்மாந்த சமீர,நுவான் குலசேகர, செகான் ஜெயசூரியா, சசித்திர சேனநாயக்க, ஜெப்ரி வன்டர்சே.

இறுதியாக பாகிஸ்தான் தொடரில் விளையாடிய குழுவில் இருந்து 6 வீரர்கள் வெளியேற்றப்பட்டு 6 புதிய வீரர்கள் அணிக்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர். ஒரே தொடரில் 6 வீரர்கள் மாற்றப்படும் நிலையில் இலங்கை அணியின் தெரிவு உள்ளது. இது இந்த தொடரில் மட்டுமல்ல அண்மைக்காலமாக இதே நிலைதான். துடுப்பாட்ட வரிசை ஓரளவு நிரந்தரமாகவுள்ளது. அண்மைக்காலமாக அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் லஹிறு திரிமானே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார். குஷால் பெரேராவின் மீள் வருகை திருப்தியளிப்பதாக உள்ளது. முதல் ஐந்து வீரர்களும் நிரந்த வீரர்களாக உள்ளனர். மேலே கூறப்பட்ட ஒழுங்கில் துடுப்பாடுவார்கள். ஆறாமிடத்தில் மிலிந்த சிறிவர்த்தன நிரந்தரமாக இடத்தைப் பெற்றுள்ளார்.கடந்த ஒரு நாள் சர்வதேசத் தொடரிலும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் நிரூபித்துக் காட்டி நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.

அறிவித்துள்ள அணியின் படி ஏழாமிடத்தில் இன்னுமொரு சுழற்பந்து வீசும் சகலதுறை வீரருக்கு இடம் உண்டு. அந்த இடம் தனுஸ்க குணதிலக பெற்றுக்கொள்ளும் வாய்பு உண்டு. மூன்று சகலதுறை வீரகளை கொண்ட அணியாக இலங்கை அணி இனி உருவெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படியான நிலை உருவாகினால், வெளிநாட்டு ஆடுகளங்களில் முழுநேர சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் நிலையை உருவாக்க முடியும். ஆனால் எந்த அணியும் துணிந்து அவ்வாறன முடிவை எடுக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த தொடரி;லசித் மாலிங்க மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். சுரங்க லக்மால், துஸ்மாந்த சமீர ஆகியோர் விளையாடும் வாய்புகள் உள்ளன. நுவான் குலசேகர மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள போதும் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது போட்டிகளின் பின்னரே தெரிய வரும்.   

மீண்டும் லசித் மாலிங்க , நுவான் குலசேகர ஜோடி பந்துவீசினால் , விக்கெட்களை கைப்பற்றினால் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளின் சிறந்த ஆரம்ப பந்துவீச்சு ஜோடி என்ற பலம் கிடைக்கும். ஆனால் இந்த ஜோடி எதிர்காலத்துக்கு எந்த அளவில் இலங்கை அணிக்கு கைகொடுக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது. துஸ்மாந்த சமீர மிகப்பெரியளவில் எதனையும் செய்து காட்டாத போதும் இளைய வீரர். அவருக்கு போதியளவு வாய்ப்பு வழங்க வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகுவது கடினம். இவரை உருவாக்கும் பொறுப்பு இலங்கை அணியிடம் உள்ளது. சுரங்க லக்மால் பெரியளவில் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் அண்மைக்காலமாக எதனையும் செய்யவில்லை. நான்கு வேகப்பந்துவீச்சாளர்களில் மூவர் விளையாடுவது உறுதி.

இந்த அணியில் மூன்று வீரர்கள் புதிய வீரர்கள். மூவருமே சுழற்பந்து வீச்சுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். முழு நேர சுழற்பந்து வீச்சாளராக ஜெப்ரி வன்டேர்சே இணைக்கப்பட்டுள்ளார். சசித்திர சேனநாயகவும் அணியில் உள்ளார். மூன்று பேரில் ஒருவர் மட்டும் விளையாடும் வாய்ப்புகளை கொண்டுள்ள நிலையில் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என கேள்வி எழுப்பும் நிலையும் உள்ளது. திலகரட்ன டில்ஷானும் சுழற்பந்து வீச்சாளர்.   இலங்கை அணி மீண்டும் ஒரு நல்ல சமநிலை அணியாக உருவாகும் நிலை உள்ளது. தெரிவுக்குழுவினர் மீண்டும் ஒரு தடவை இதே போன்ற பாரிய மாற்றங்கள் இல்லாத அணியை இந்த தொடரின் பின்னர் அறிவிக்க வேண்டும் ஆயின் வீர்கள் திறமையாக செயற்படவேண்டும்.

இந்த அணியில் மூன்று புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் செஹான் ஜெயசூரியா பாகிஸ்தான் அணியுடனான 20-20 போட்டியில் சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். மூன்றாமிலக்கதில் துடுப்பாடக்கூடிய சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர். 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் 57 இன்னிங்சில் 1710 ஓட்டங்களை 31.66 என்ற சராசரியில் 3 சதங்கள், 11 அரைச்சதங்களுடன் பெற்றுள்ளார்.  55 இன்னிங்சில் 50 விக்கெட்களை 31.32 என்ற சராசரியில் பெற்றுள்ளார். அண்மைக்காலமாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். பந்துவீச்சுக்காகவே இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் 58 ஓட்டங்களையும், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். நியூசிலாந்து A அணியுடன் நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் 4 போட்டிகளில் 74 ஓட்டங்களையும், 6 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

தனுஸ்க குணதிலக துடுப்பாட்ட வீரராகவே அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் 50 ஓவர்கள் போட்டியில் பந்துவீச்சில் நல்ல சராசரியைக் கொண்டுள்ள போதும் அண்மைக்கால போட்டிகளில் இவற்றின் பந்துவீச்சு பாவிக்கப்படவில்லை. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நல்ல  முறையில் துடுப்பாடிய வீரர். 55 இன்னிங்சில் 1590 ஓட்டங்களை 36.13 என்ற சராசரியில் பெற்றுள்ளார். பந்துவீச்சில் 22 இன்னிங்சில் 23 விக்கெட்களை 26.43 என்ற சராசரியில் பெற்றுள்ளார். தனுஸ்க குணதிலக, செஹான் ஜெயசூரியா ஆகியோர் குஷால் பெரேரா, லஹிறு திரிமான்னே ஆகியோரை கருத்திற்கொண்டு மேலதிக வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என நம்பலாம். ஆனாலும்   மத்திய வரிசையில் இவர்களில் ஒருவர் விளையாடுவது நிச்சயம் என்ற நிலை உள்ளது.

பாகிஸ்தான் 20-20 தொடரில் சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட லெக்ஸ்பின் பந்துவீச்சாளர் ஜெப்ரி வன்டேர்சே. விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை. 50 ஓவர்கள் போட்டியில் 7 போட்டிகளில் மாத்திரமே விளையாடி 6 விக்கெட்களை கைப்பற்றியுளார். 14 ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றிய நிலையில் 20-20 அணியில் இணைக்கப்பட்டு இருந்தார். தற்போது ஏன் பெரியளவில் எதனையும் சாதிக்காத நிலையில் இலங்கை குழுவில் என்ற கேள்வி நிச்சயம் உண்டு. முதற்தரப் போட்டிகளில் நல்ல முறையில் பந்து வீசியுள்ளார். டெஸ்ட் அணியில்தான் இவருக்கு இடம் வழங்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற எந்த 50 ஓவர்கள்  போட்டிகளிலும் இவர் அதிக விக்கெட்களை கைப்பற்றவும் இல்லை.

மேற்கிந்திய தீவுகள்

அணி விபரம்

ஜோன்சன் சார்லஸ், அன்றே பிளட்சர், டரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ்,தினேஷ் ராம்டீன், ஜொனதன் கார்ட்டர்,அன்ட்ரே ரஸல்,ஜேசன் ஹோல்டர் (கப்டன்),சுனில் நரைன்,ரவி ராம்போல்,  ஜெரோம் டெய்லர் தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வூட், கார்லோஸ் பிரத்வைட், ஜேசன் முகமட்.

மேற்கிந்திய தீவுகளின் அணியின் 11 பேரை தெரிவு செய்வது என்பது மிகக்கடினமே. பல வீரர்கள் உலகக்கிண்ண தொடருக்கு பின் வெளியேறியுள்ளார்கள். இறுதியாக உலகக்கிண்ண தொடரிலேயே ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடியது. 8 வீரர்கள் அந்த அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களில், க்ரிஸ் கெயில், டரின் சமி ஆகிய முக்கிய வீரர்கள் உபாதை காரணமாக அணியால் விலகியுள்ளனர். புதிய வீரர்களாக 8 வீரர்கள் அணிக்குள் மீண்டும் வந்துள்ளனர். இவர்களில் டரன் பிராவோ, சுனில் நரையன்  ஆகிய வீரர்கள் முக்கியமானவர்கள்.

க்றிஸ் கெயிலின் இடத்தை 15 போட்டிகளில் 254 ஓட்டங்களை பெற்றுள்ள அன்றே பிளட்சர் பெற்றுக்கொள்வார். உலகக்கிண்ண தொடரில் இணைந்த ஜோன்சன் சார்லஸ் இந்த வருடத்தில் 2 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். அவரை விட வேறு தெரிவு இல்லை. மூன்றமிடத்தை மீண்டும் அணிக்குள் வந்துள்ள டரன் பிராவோ பெற்றுக்கொள்வார். மார்லன் சாமுவேல்ஸ் அடுத்த இடத்தை நிச்சயம் பெறுவார். ஆனால் இவர்கள் இருவரினதும் போர்ம் மோசமாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இவர்கள் செய்தாலும், இல்லாவிட்டாலும் அணியால் நீக்க முடியாது. ஐந்தாமிடத்தில்  விக்கெட் காப்பாளர் தினேஷ் ராம்டீன் ஐந்தாமிடத்தை பெற்றுக்கொள்வார். 10 போட்டிகளில் 193 ஓட்டங்களைப்பெற்ற ஜொனதன் காட்டரை விட வேறு வீரர்கள் இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நல்ல முறையில் துடுப்பாடி வரும் ஜெர்மைன் ப்ளக்வூட் ஐந்தாம் இடத்தில் துடுப்பாடுவது பொருத்தமாக இருக்கும். அப்படியானால் ஜொனதன் காட்டரை அணியால் நீக்க வேண்டும்.

அடுத்த இடத்தில் அன்றே ரசல் பெறுவார். 20-20 போட்டிகளில் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு வீரராக இருந்து வருகின்றார். ஒரு நாள்ப்போட்டிகளில் இன்னிங்சை நிறைவு செய்யக்கூடிய அதிரடி துடுப்பாட்ட வீரர். வெகப்பந்துவீச்சாளர். அடுத்த இடம் அணியின் தலைவர். இவரையும் சகலதுறை வீரராக வர்ணிக்கமுடியும். சுனில் நரையன் பந்தை  எறிவதாக இந்திய சம்பியன் லீக் தொடரில் தடை செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசப்போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து களமிறங்குகின்றார் என நம்பலாம். இவர் மீது நடுவர்கள் மிகக்கடுமையாக கவனம் செலுத்துவார்கள். ரவி ராம்போல் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் ஏன் உலகக்கிண்ண அணியால் நீக்கப்பட்டார்  என்பது தெரியவில்லை. இந்திய தொடர் சிக்கல் காரணமாக இருக்கலாம். ஜெரோம் டெய்ய்லர்  மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்போதைய  சிறந்த ஒரு நாள்   வேகப்பந்து வீச்சாளர். நல்ல உலகக்கிண்ண தொடர் இவருக்கு.

பந்துவீச்சு இலங்கை அணிக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும். அனுபவம் மிக்க பந்துவீச்சாளர்கள். நரையன் எப்படி பந்துவீசப் போகின்றார் என்பதை போட்டிகளின் போதே பார்க்க முடியும். அவரின் பந்துவீச்சில் சிக்கல்கள் இருந்தாலும் தொடர் முழுவதும் பந்து வீசமுடியும். இரண்டாவது சுழற்பந்துவீச்சு மேற்கிந்திய தீவுகளுக்கு சிக்கலே. சாமுவேல்ஸ் டெஸ்ட் போட்டியின் போது பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேவேந்திர பிசூ அணிக்குள் வரவேண்டுமாக இருந்தால் அன்றே ரசல் வெளியேற வேண்டும். வேகப்பந்துவீச்சில் ரெய்ளர், ராம்போல், ஹோல்டர், ரசல் என நால்வருமே பலமானவர்கள். ஆக இலங்கை அணிக்கு துடுப்பாட்டம் சிக்கல் இல்லை. இருப்பினும் இலங்கை அணியின் பந்துவீச்சும் முழுமையாக இல்லை என கூறலாம். மீண்டும் பந்துவீச்சு வரிசையினை அமைக்க வேண்டும். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக செயற்பட்டால் சவால்கள் இல்லாமல் இலங்கை அணி வெல்ல  முடியும்.

இலங்கை அணிக்கு மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மழை குறுக்கீடு மட்டுமே இந்த வெற்றி வாய்ப்புகளை இல்லாமல் செய்யும். இலங்கை அணி கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி'கொண்டது போல இம்முறை வெற்றி கொள்ள முடியாது.

கடந்த காலம்

இரு அணிகள் மட்டும் இலங்கையில் விளையாடும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடர் இது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பித்த தொடர் 1-1 என்ற சமநிலையில் நிறைவடைந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2- 0 என இலங்கை தொடரைக் கைப்பற்றியது. இரண்டு தொடர்களிலும் ஒரு போட்டி மழை காரணமாக கை விடப்பட்டது. இரு அணிகளுக்குமிடையில் 11 போட்டிகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்குமிடையில் 51 போட்டிகள் இதுவரையில் மொத்தமாக நடைபெற்றுள்ளன. இலங்கை அணி இவற்றுள் 21 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 27 போட்டிகளிலும் வென்றுள்ளன. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .