2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது டிமோ

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 12 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் வர்த்தக சுப்பர் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில், மாஸ் அக்டிவ் அணியைத் தோற்கடித்து, டிமோ அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

வர்த்தக கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், வர்த்தக கிரிக்கெட் சங்க லீக் மற்றும் நொக் அவுட் தொடர்களின் சம்பியன்களான மாஸ் அக்டிவ் அணி, இப்போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியான முடிவாக இது அமைந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டிமோ அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் அக்டிவ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அஞ்சலோ பெரேரா 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், நிசல தாரக 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் புலின தரங்க 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டிமோ அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப் பந்தில் வெற்றிபெறுவதற்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 20 வயதான பிரமுத் ஹெட்டிவத்த, இலங்கையின் முன்னணி இருபதுக்கு-20 பந்துவீச்சாளரான இசுரு உதானவின் பந்தை, ஆறு ஓட்டங்களுக்கு விளாசினார்.

துடுப்பாட்டத்தில், நிபுண் கருணாநாயக்க 27 ஓட்டங்களையும் சரித்த குமாரசிங்க 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், இசுரு உதான 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் தனஞ்சய சில்வா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சரித் ஜயம்பதி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதேவேளை, மொறட்டுவை டைரோன் பெர்ணான்டோ விளையாட்டரங்கிலும் மாலையில் வர்த்தக கிரிக்கெட் சங்க மைதானத்திலும் இடம்பெறவிருந்த ஏனைய 3 காலிறுதிப் போட்டிகள், மழை காரணமாகப் பாதிக்கப்பட, அப்போட்டிகளின் முடிவுகள், நாணயச் சுழற்சி மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, கொமர்ஷல் கிரடிட் அணிக்கெதிராக டெக்டேர்ட் ஜேர்சி அணியும், ஹற்றன் நஷனல் வங்கி அணிக்கெதிராக சம்பத் வங்கி அணியும் ஜோன் கீல்ஸ் அணிக்கெதிராக மாஸ் யுனிசெல அணியும் வெற்றிபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .