2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையின் அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களின் எதிர்காலம்

Thipaan   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுதன் ஸ்ரீரங்கன்
நிதிய முகாமையாளர்
(Fund Manager)GIH Capital Ltd.

இலங்கையின் அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களின் [State-Owned-Enterprises (SOEs)] வரலாறு பிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் அரசாங்கத்தின் கீழ் காணப்பட்ட நிறுவனங்களின் உரிமை மற்றும் மேலாண்மை மக்களின் நலன்களையும் நாட்டின் இறைமையையும் பாதுகாக்க அரசு தன்னகத்தே வைத்திருந்தது.

1970களில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் சோசலிச அல்லது முற்போக்கு சீர்திருத்தங்கள் என்ற பெயரில், 'பொருளாதாரத்தின் மிக உயர் நிலை' கட்டுப்பாட்டைப் பெற முற்பட்டது. ஆனால், 1977இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், மக்களுக்கான போக்குவரத்து, பொருட்கள் மற்றும் சில சேவைகளை வழங்கிய கணிசமான நிறுவனங்களை தனியார்மயமாக்கின. பின்னர் தனியார்மயமாக்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, அரசுக்குச் சொந்தமான பல பொது நிறுவனங்கள் செயல்திறன் இன்மையால் பலத்த இழப்பைச் சந்திக்க நேரிட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை செலுத்தியது.

இலங்கையில், அரசுக்குச் சொந்தமான 81 பொது நிறுவனங்கள், இலங்கை கம்பனிகள், நிறுவனங்களின் 2007ஆம் ஆண்டின் 7ஆம் பிரிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களின் 2014ஆம் ஆண்டின் தரவின்படி, இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாயானது, (Total Turnover) கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 294 நிறுவனங்களின் வருமானத்தை விட அதிகமானது. மேலதிகமாக அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.2 சதவீதம்; பங்களிப்பு செய்தது.

அரசுக்கு சொந்தமான அனைத்துப் பொது நிறுவனங்களும் தங்கள் இலாபத்தில் 30சதவீதம் அல்லது நிறுவனப் பங்கில் 15 சதவீதம், எது அதிகமோ ஆகிறதோ, அதனை ஒருங்கிணைந்த நிதியத்துக்கு (Consolidated Fund) பங்களிப்புச் செய்ய வேண்டும். இத்தகைய அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களில் வசூலித்த இலாபத் தொகை 2014ஆம் ஆண்டில் 31 பில்லியன் ரூபாய்களாகும். எனினும், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியன 48 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்தன. மேலும், ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பன  13 பில்லியன் ரூபாய் நட்டத்தை பதிவு செய்தன.

அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களின் நஷ்டங்கள்,

2010ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் வரவு- செலவுத் திட்டத்தில் பாரிய சுமையாகவே காணப்பட்டன. இதன் விளைவாக, அரச வங்கிகளின் இருப்பு நிலையில் தளம்பல் நிலை ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும், காலம் காலமாக பொது நிறுவனங்களின் நஷ்டங்களை குறைப்பதற்கும் அல்லது அதனை தனியார்மயமாக்கும் செயற்பாடுகளில் தோல்வியையே சந்தித்துள்ளன. அவ்வாறான நட்டங்களை ஈடுசெய்வதற்கு இறுதியில் மக்களின் மீது அதிகப்படியான நேரடி அல்லது மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன.

அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களான இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம் இலங்கை போக்குவரத்துச் சபை, ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை ஆகியன நட்டங்களுக்கு உள்ளாக பல காரணங்கள் உள்ளன. அவையாவன, தவறான நிர்வாகம், ஊழல், அரசியல் குறுக்கீடு, செலவு பிரதிபலிப்பு அல்லாத விலை நிர்ணய கொள்கைகள் (non-cost-reflective pricing policies) ஆகும்.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்க அறிக்கைகள் மற்றும் சில சுயாதீன ஆய்வாளர்களின் அறிக்கைகளில், இலங்கை சூழலில் பொதுவாக அரசாங்கங்கள் வணிக முயற்சிகளில் நுழைவதனைப் புறக்கணித்தன.

இத்தகைய அறிக்கைகள், அரசாங்க வரவு- செலவுத் திட்டத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மோசமான மேலாண்மை நடைமுறைகள் மற்றும் அரசியல் குறுக்கீடு பற்றி கவனம் செலுத்துவதனை விடுத்து, அதன் அடிப்பை செயற்றிறனையும்  இயலாமைகளையும் முன்னிலைப்படுத்தின.

இத்தகைய விவாதங்கள், இந்தக் கொள்கைகள் நீடித்த செயலாக்கம் இல்லாதது என்ற அடிப்படையை மறந்து பேசுவதாகும். அரசாங்கம் இத்தகைய கொள்கையை கடைப்பிடிக்கும் வரை தற்போதைய

வரவு- செலவுத் திட்ட  பற்றாக்குறை தொடரும் என்பது தெளிவாகிறது. பொதுக் கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை விடாப்பிடியாக இருக்கும்வரை, அரசாங்கத்துக்குச் சொந்தமான பொது நிறுவனங்களை விற்பனை தவிர்க்க முடியாததுதான்.

ஆனால், அதிலும் முரண்பாடுள்ளது, இந்த விற்பனை மூலம் வரும் வருமானம், வரி வருமானம் போலன்றி ஒரு முறை வருமானமே. ஒரு முறை விற்பனை செய்த சொத்தை மறுபடியும் பெற்று மற்றொருவருக்கு விற்க முடியாது.

பல்வேறு காரணங்களுக்காக, இத்தகைய முயற்சிகளுக்கு மிக விரைவில் ஒரு வரையறை அல்லது எல்லை வந்துவிடும். ஒரு தொடக்கமாகச் சொன்னால் இலாபகரமான அல்லது இலாபகரமாக இயங்கும் அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமே இந்த விற்பனை முயற்சி பலனளிக்கும். அதுபோல, சில அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறான அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களின் பங்கு விற்பனையால், நாளடைவில் அரசின் பங்குகள் விகிதம் குறைந்து, முடிவில் எந்தச் சொத்துகள் தற்போதைய அரசின் செலவினங்களைச் சந்திக்க பயன்பட்டதோ அந்தச் சொத்துக்கள் முழுமையாக தனியார்மயமாக்கப்படும்.

இந்தப் பங்கு விற்பனை சந்தை மூலமாக விற்கப்படுமானால், அந்தப் பங்குகளின் மதிப்பு அதன் 'உண்மையான' மதிப்பில் நிர்ணயிக்கப்படாமல், சந்தையில் உள்ள வௌ;வேறு சக்திகளின் தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.  என்னதான் பங்குச் சந்தை ஏற்றம்மாக இருந்தாலும், பங்குச் சந்தையின் அடிப்படை காரணிகள், மேலோங்கி, பங்குகளின் சரிவைப் பதிவு செய்யும். ஒரு குறிப்பிட்ட அளவு சொத்துக்களை பெற, அதிக அளவிலான பங்குகளை விற்கவேண்டும் என்பதுடன், முடிவில் இலாபகரமான பங்குகள் முற்றாக தீர்ந்து போகும் நிலை ஏற்படும். மேலும் பங்குச்சந்தை பலவீனமாக உள்ள போது, அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களின் பங்குகளை விற்க வேறு வகையில் முயற்சிக்க வேண்டி வரும்.

உதாரணமாக, அரசு தனியாரை அதிகப்படியான பங்கை வாங்க வைக்க அதிகப்படியான நிர்வாக மேலாண்மை பொறுப்பையும் கொடுக்கிறார்கள். பங்குகளை வாங்குபவர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கே விற்க திறந்த அழைப்பு விடுக்க வேண்டுமென்ற நிலையே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அப்படியும் அந்தப் பங்குகளின் மதிப்பு தேவையான நிர்வாகக் கட்டுப்பாட்டை பெறும் அளவுக்;கு இருக்காது. மேலும், இத்தகைய பங்கு விற்பனையில் வாங்குபவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அந்தப் பங்குகளை விற்பதற்கு பங்குகளின் விலையை குறைத்து மதிப்பிடவேண்டும்.

தற்போது கவனிக்க வேண்டியதெல்லாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி சாத்தியமா என்பதற்குப் பதில், சரியான முடிவா என்பதுதான். அரசாங்கத்தின் கணக்கின்படி, கடன் பெறுவதன் மூலம் அதிகரித்து வரும் கடன் சுமையிலிருந்து காத்துக்கொள்ளமுடியும். ஆனால், வரவு- செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்திக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்தல் வரவு-செலவு கண்ணோட்டத்தில் வைத்துப் பார்க்கையில் சரியானதாக தெரியவில்லை. அரசாங்கத்துக்குச் சொந்தமான பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினால் தனியாரின் நோக்கம் இலாபகரமாக இயங்குவது மட்டுமேயொழிய, பொதுப் படுகடன் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்காது.

ஏனென்றால், அரசாங்கத்தின் திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரசபிணைகளுக்கு அரசின் முழு உத்தரவாதம் இருப்பதால் எந்தவித நட்டத்துக்கும் இட்டுச் செல்லாது என்பதுதான் இதற்குக் காரணமாகும். இதன் அர்த்தம் என்னவென்றால், அரசின் பாதுகாப்பான திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரச பிணைகளுக்கு மூலமாக வரும் வட்டியைக் காட்டிலும், இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவதில் அதிக இலாபம் ஈட்ட முடியும் என்ற தனியாரின் கணிப்பேயாகும். எனவேதான், இந்த நிறுவனங்கள் விற்பனை ஏற்புடையதாகும் என்றால், கடன் பெறுவதற்குப் பதில் இந்தப் பங்கு விற்பனையே, பற்றாக்குறை வரவு-செலவு சமன் செய்யும் என்றிருந்தாலும், அரசு கடனுக்கான வட்டி விகிதத்தைக் காட்டிலும், வேறு வகை வருமானத்தை அரசாங்கம் விட்டுக் கொடுக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

தற்போதைய அரசாங்கம் புதிய தாராளமயக் கொள்கையை கடைப்பிடிப்பதில் அவசரம் காட்டுமேயானால், அது நடைமுறையில் அரசுப் பணத்தில் பெருமுதலாளிகளை மேலும் செல்வந்தர்களாக்கும் ஒரு நீடித்திரா நேர்மையற்ற நிதிக் கொள்கையாக மட்டுமே இருக்கும்.  இது மறுபுறம், இந்தப் அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, அவர்கள் போராடிப் பெற்ற நியாயமான வேலைநிலை மற்றும் ஊதியம், சலுகைகள்மீது எதிர் விளைவை உண்டாக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X