இருப்பு
21-11-2015 02:42 PM
Comments - 0       Views - 163அண்டம் கடந்த ஓலங்கள் - சதைப்
பிண்டம் கடந்த பயணங்கள்
இரத்தம் தகிக்கும் தருணங்கள்
நித்தம் நித்தம் துயரங்கள்
வலிசுமந்த வாழ்வொன்று
குடிபுகுந்தது நம்மோடு
கூவிவரும் எறிகணைகள்
காவிப்போயின உயிர்களை
எச்சங்கள் மட்டும்
மிச்சமாய் எமக்கு.

நடந்தோம்.. நடந்தோம்...
வலிகளைச் சுமந்து நடந்தோம்
விலைகள் பல கொடுத்து நடந்தோம்.
தலைகள் தப்பவென
தாழ்ந்து நடந்தோம்.
முக்காடாய் முகாம்களுள்
முகங்கள் புதைப்பட்டுப்போக
தாழ்ப்பாள் கொட்டகைக்குள்
தாள்பணிந்துகொண்டோம்.
ஆத்மாவைத் தொலைத்த
சுதேஷ அகதிகளாய்...
எஞ்சிய வாழ்வதை
கஞ்சியோடேனும்
சொந்தமண்ணதில் கழிக்க
நொந்த நெஞ்சங்கள் பலதின்
நிறைவான விருப்பு.
எம் இரப்புகள் யாவும்
உரைப்பைப் பொட்டலங்களாய்
சேமிக்கப்பட்டன.

மெல்ல அடியெடுத்த மீள்குடியமர்வு
செல்லாக்காசாய் சிலருக்கு
மண்டியிட்ட மனைகளும்
மண்டையுடைந்த பனைகளும்
கண்டபடி கண்ணிகளுமாய்
சண்டைபட்ட நிலங்களில்
இப்போ நாம்
வேற்றுக்கிரகவாசிகளாய்....

சொந்த ஊர்களிலே – மீண்டும்
குந்திக்கொண்டன கொட்டகைகள்
வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சும்
சின்னச் சங்கதிகள்.
முகாமிருளின் மீட்சியாய்...
மறுவாழ்வு தேடி
மண்வாசம் நாடி
ஓடிவந்த எமக்கான
உ(றை/ற)விடங்கள் அவைதான்.
வலி தந்த வாழ்வதற்கு
கனிவாக விடைகொடுத்து
வலம்வருவோம் விண்ணதில்.
வாசம் வீசும் மலர்களாய்
மீண்டும் ஜனனிப்போம்
மோசம் கண்ட உலகதில்.
எமக்கான இருப்பு – வேறு
எவரிடம் இரப்பு?
எம்மிடமே இருப்பு
இனி உயிர்ப்போம்.

-மல்லாவி கஜன்

"இருப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty