2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அபிநயக்ஷேத்ரா அளித்த ஆனந்தம்

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழின் செறிவையும் இசையின் ஆதிக்கத்தையும் நாட்டியத்தின் நுட்பங்களையும் ஒரே மேடையில் கண்டு இரசித்து சபைக்கு மகிழ்வைத் தரும் படைப்புக்களை தொடர்ந்தும்  வழங்கி வரும்  அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி, அண்மையில் மூன்று முக்கிய நடனத் தயாரிப்புகளினூடாக ஆன்ம ஈடேற்றத்துக்கான ஆனந்தத்தை நாட்டிய ரூபத்தில்  அளித்திருந்தனர்.

புராணக் கதைகளையும் இதிகாச பாத்திரங்களையும் மேடையில் விருந்தாக்கும் வழமைக்கு சற்று விலகி,  சம்பிரதாய நாட்டிய  மார்;க்கத்தில் அழிந்திடும் ஆக்கையின் அநாவசியங்களையும் ஆன்ம சக்தியின் அத்தியாவசியத்தையும் ஆடலால் வடிவமைத்திருந்தனர்.

சத்து -சித்து  ஆனந்தம் எனும் தயாரிப்பில் இராஜயோகாவின் ஒவ்வொரு படி நிலைகளையும் விளக்கி, தூய தமிழின் இயலாக்கத்தில் தேக அபிமானம் விடுத்து இறைவனை நாடி,  பின் ஆன்மாவினோடு அபிமானம் கொண்டு ஈற்றில் அகத்தினின் இறை உணரும் நிலையை நாட்டியத்தில் வழங்கினர். பிரம்மகுமாரிகளின் இராஜயோக படி அறிந்தோர் மட்டுமல்லாது, கலை ரசிகர்களின் தரத்தினையும் உன்னத நிலைக்கு அழைத்துச் சென்றது இவ் ஆழ்ந்த படைப்பு.

மறுநாள் நிகழ்வான ஷண்-மத -ஆனந்தம் எனும் தயாரிப்பில் ஆதிசங்கரர் அருளிய இந்து மதத்தின் ஆறு பிரிவுகளையும் விளக்கி, எவ்வித மார்க்கமாயினும் இறைவன் ஒருவனே இறைச் சக்தியை உணரும் இடம் அகம் மட்டுமே எனும் கருத்துச் செறிவில் வழங்கியிருந்தனர்.

பூகோளமயமாக்கல் தொழில்நுட்ப வலையமைப்பு விரிவாக்கல் என வர்த்தகப் பரிணாமத்துக்குள் பின்னிய இக்காலக்கட்டத்தினுள், சாஸ்திரிய சம்பிரதாய  கலைகளும் அகப்பட்டு, அதன் புனிதத்துவம் அருகி வரும் நிலை ஏற்படுகின்றது என்ற எண்ணத்தை  மாற்றும் முகமாய் அமைந்தது.

ஆனந்த சாதானர் எனும் அபிநயக்ஷேத்ராவின் மற்றுமொரு படைப்பு பூலோகத்தில் அதர்மம் ஆட்டிப் படைத்த காலத்தில் ஆன்மாக்களை நல்வழிப்படுத்தலே  நான்கு வேதத்திலிருந்து தொகுத்த மிகப் புனிதமான ஐந்தாம் வேதத்தை பிரம்மா படைத்தருளினார். அண்டர் கண்ட ஆடலில் ஆன்மா ஈடேற்றத்திற்காக சிவன் தாமாக வந்து திருநடனம் புரிந்தார். ஆடல் கலை  கற்றறிந்த யாவரும் உள்ளும், புறமும் இறையை காண, இரண்டற கலந்து  உயர் அறிவில் தெய்வீகத் தன்மை எய்திடுவர் எனும்  சிந்தைக்கு தேவையான அற்புதக்  கருத்தை முன்வைத்தனர்.

கலைப் பூமி என்றழைக்கப்படும் இந்தியாவில் சமீப காலங்களில் இவ்வாறான கருத்துக்களை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் நாட்டிய அமைப்புகளில் உள, உடல் மேம்பாட்டுக்கான யோகா முறைகள் ஆன்ம விழிப்புணர்ச்சியை வளர்த்திடும் நன் நெறிகள் என்பவை பகுக்கப்படுகிறது.
அந்த வகையில் சேவை நோக்க அடிப்படையில் மட்டுமே கலை வளர்த்திடும் நம் நாட்டு நடன கலைஞர் அபிநயக்ஷேத்ரா நடன பள்ளி இயக்குனர் 'கலாசூரி திவயா சுஜேன்';, உயர் கருத்துப் பரிமாற்ற ஊடகமாகக் கலைப் படைப்புக்களை கையாள்கின்றார்.

பன்முகப்பட்ட திறமைகளைக் கொண்ட திவ்யாவின் நெறியாள்கையில் அமைக்கப்படும் நாட்டியத்துக்கும் தமிழாக்கத்துக்கும்  உயிரூட்டும் சிறந்த இசையை இந்திய இசைக்கலைஞர்கள் வழங்கியிருந்தனர். உணர்வோடு உறையும் வகையில் இசை நுட்பங்களை இணைத்துப் பாடல் வழங்கியிருந்த தெய்வீக குரல் சாரம் கொண்ட நந்தகுமார் உன்னிகிருஷ்ணன், இசைநடன நுட்பம் அறிந்து லயம் வழங்கும் மிருதங்க கலைஞர் மாயவரம் டி.விஸ்வநாதன் மற்றும் குழல் இசை வழங்கி செவிகளை கனிவித்த தஞ்சாவூர் வசந்தகுமார் ஆகியோர் இரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து நம் மண்ணிற்கு வருகை தந்து தம் கலைச்சேவையை வழங்கி வருகின்றனர்.  

சபையோரின் புலன்களுக்கு மேடைக் கலைஞர்களுக்கும் ஆனந்தத்தை பரப்பிய இந்த மூன்று நிகழ்வுகள் பற்றி அறியும் வகையில் திவ்யா சுஜனோடு இணைந்த பொழுது, 'ஒவ்வொரு படைப்புக்களும் பல்வேறுபட்ட கலைப் பொக்கிஷங்களின் தேடலில் மலர்ந்தது என்பதால் அபிநயக்ஷேத்ரா மாணவிகளுக்கு நம் கலைப் பாரம்பரிய பண்பாட்டின் அவசியத்தையம் நுண் அறிவையும் தூண்டும் வகையில் அமைகிறது.

ஆழ்ந்த எண்ணக்கரு கொண்டமைந்தால், பரந்த சபையை கவரும் நோக்கம் விடுத்து ஒரு சில மனங்களுள் உட் சென்றாலே மகா சேவை, மகேசன் பணியெனக்; கருதுவதாக அமையும்' என குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .