2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குற்றவியல் வழக்கொன்றின் ஆவணங்கள் மாயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவியல் வழக்கொன்று தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட ஆவணமொன்று மாயமாகியுள்ளதாக இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாசவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

1997ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதியன்று, இரத்தினபுரி பலாபத்தலவில் வீடொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் மேன்முறையீடு (இலக்கம் 87/2000) வழக்கு கோவை 2008ஆம் ஆண்டு, நீதியமைச்சின் செயலாளரினால் எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னர், அந்த ஆவணம் மாயமாகிவிட்டது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் கோவை, தன்னுடைய அமைச்சருக்கு வாசித்துக் காண்பிப்பதற்காகவே அப்போதிருந்த செயலாளரினால் எடுத்துச்செல்லப்பட்டமாக இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் கோவை மாயமாகியுள்ளமையின் பின்னணியில், பிரபலமான அரசியல்வாதி இருக்கின்றாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக சட்டத்தரணி நிரோஷ் நிந்தவத்த தெரிவித்தார்.

நாட்டில் விசேட அதிகாரத்தை கொண்டிருக்கின்ற நபரினால் செய்யப்பட்டதாக கூறப்படும் முறைக்கேடாக செயற்பாட்டினால், நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட முழு நீதிமன்ற தொகுதியும் அச்சமடைந்துள்ளது என்றும் இரத்தினபுரி மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாஸ சுட்டிக்காட்டினார்.

87/2000 வழக்குக் கோவை மாயமாகியிருந்தால் அது விசேட சந்தர்ப்பமாகும். இது அதிவிசேடமான மனிதரினால் நீதிமன்றத்தை  அச்சுறுத்தும் செயற்பாடாகும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவெல படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு மறுநாள், அதாவது 1997ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதியன்று, இரத்தினபுரி பலாபத்தவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டமை மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இரண்டு குற்றச்சாட்டுகளில் ஒன்பது பேர் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு,  2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதியன்று மேல்நீதிமன்ற நீதிபதி அனோமா விஜயவர்தனவினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு 6வருடங்கள் சிறைத்தண்டனையும் அதற்கு மேலதிகமாக தலா 5,000 ரூபாயும் தண்டம் விதிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பு எதிராக குற்றவாளிகள் ஒன்பது பேரினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அந்த குற்றவாளிகளில் மூவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்குக்கான கோவையே மாயமாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X