2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரிஸ் தாக்குதல்: யாருக்காக அழுவோம்?

Thipaan   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கொலைகள் கொடியன. எவரை எவர் கொன்றாலும் அது கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. மனித உயிர்கள் பெறுமதி மிக்கவை. அவை கூட்டல் கழித்தல் கணக்குக்குரியனவல்ல.

கடந்த வாரம் பிரான்ஸின் பரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தது. கண்டனச் செய்திகளும் அனுதாபச் செய்திகளும் உலகின் சகல மூலைகளிலிருந்தும் வந்தன. சமூக வலைத்தளங்களில் அது முக்கிய பேசுபொருளானது. இப் பின்னணியில் தாக்குதல்களின் நோக்கங்களையும் விளைவுகளையும் நோக்கல் தகும்.

ஐரோப்பா இரண்டு முக்கிய நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. முதலாவது, இன்று அங்கு மையங்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி. இரண்டாவது, இன்று ஐரோப்பாவை நோக்கிப் புலம்பெயரும் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாட்டு அகதிகளின் பிரச்சனை. ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி மிகக் கூர்மையடைந்து தீர்வின்றித் தவிக்கையில், அந் நெருக்கடியைத் திசைதிருப்பப் பரிஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் பயன்படுகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து ஐரோப்பா மீளமுடியாமைக்குப் பயங்கரவாத அச்சுறுத்தலே காரணம் எனவும் ஒருபுறம் கதை புனையப்படுகிறது.

ஐரோப்பாவுக்குள் அகதிகளை அனுமதித்ததனாலேயே பரிஸ் தாக்குதல் இடம்பெற்றது என்றும் அகதிகள் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்றும் மறுபக்கம் நியாயம் பேசப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கம், தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவரின் சிரியக் கடவுச்சீட்டை ஒரு சேதமுமின்றிக் கண்டெடுக்கிறது. அக் கதை ஊடகங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல்களை மேற்கொண்ட அனைவரும் ஐரோப்பிய குடியுரிமை பெற்றவர்கள், எவரும் சிரியர் அல்ல என்ற உண்மை சொல்லப்படவில்லை. மேலும் இத் தாக்குதல்கட்கு ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அழைக்கப்பட்டு இப்போது ஐ.எஸ் என அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய அரசு உரிமைகொண்டாடி அகதிகட்கும் முஸ்லிம்கட்கும் எதிராக ஐரோப்பியர்களின் பொதுப்புத்தி மனநிலையை மாற்றுவதற்கு உதவுகின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் பிரான்ஸில் மூன்று மாத அவசரகால நிலையை அறிவித்துள்ளார். அது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை விலக்கி, எல்லைகளை மூடி, எதிர்ப்புப் போராட்டங்கட்குத் தடைவிதித்து, தனிமனிதர்களைத் தேடுதலுக்கு உட்படுத்தவும் கைது செய்யவும்

பொலிஸுக்கு முழு அதிகாரம் வழங்குவதன் மூலம் பிரான்ஸை முற்றான ஒரு பொலிஸ் அரசாக மாற்ற முயல்கிறார். பரிஸ் தாக்குதல்களை அடுத்துப் நாடாளுமன்றத்தின் இரு அவைகட்கும் ஆற்றிய உரையில், அரச அதிகாரத்தைப் பொது நிர்வாக அமைப்புகளிடமிருந்து இராணுவ அமைப்புக்கட்கு மாற்றவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தவுமான அதிகாரங்களைத் தன்னிச்சையாகச் செயற்படுத்தும் உரிமையை ஜனாதிபதிக்கு வழங்குமாறும் அதற்கான யாப்புத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் அரசுக்கும் ஆளும் வர்க்கங்கட்கும் எதிரான மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கவும் எதிர்ப்பலைகளைச் சட்டங்களின் மூலம் முடக்கவுமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அவசர அவசரமாக முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் பாரிய எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. இன்று ஐரோப்பாவெங்கும் பரவிவரும் சமூகப் பதற்றங்களும் கிளர்ச்சி மனநிலையும் வெளிவெளியாகப் புலப்படுகையில் அவற்றைக் கட்டுப்படுத்த, 'ஜனநாயகமான நடவடிக்கைகள்' என்ற பெயரால் ஆளும் அதிகார வர்க்கம் அடக்குமுறையையும் உரிமை மறுப்பையும் சட்டரீதியாக்குகிறது. 

இன்று, மேற்குலகில் அதிகரித்துவரும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வன்முறை கொண்டு அடக்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு இலண்டனில் இளைஞர் கலகங்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறை தொட்டுச் சென்ற ஆண்டு மிசூரியின் ஃபெர்குசன் பகுதியில் கறுப்பினத்தவரான மைக்கல் பிரவுன் பொலிஸாரால் கொல்லப்பட்டதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான பலமான ஆயுதப் பிரயோகம் வரை பல உதாரணங்கள் உள்ளன. இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் 'பயங்கரவாதத்தின்' பெயரால் ஒடுக்கச் சட்ட அனுமதியை வழங்கப் பரிஸ் தாக்குதல்கள் உதவியுள்ளன.

ஐரோப்பாவில் மையங்கொண்டுள்ள அகதிகள் பிரச்சனை சிக்கலானது. சிரிய யுத்தத்தின் விளைவாக சிரியாவில் இருந்து இதுவரை வெளியேறிய 11.8 மில்லியன் சிரியர்களில் ஆறு சதவீதமானோரே ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளனர். ஏனையோர் சிரியாவினுள்ளும் அதன் அண்டை நாடுகளான லெபனான், துருக்கி, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும்; அடைக்கலம் புகுந்துள்ளனர். ஐரோப்பாவின் மிகப் பெரிய நெருக்கடி என்று கூறப்படும் அகதிகள் நெருக்கடி என்பது உண்மையில் சிரியாவில் இருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறிய 6சதவீத மக்கள் தொகை பற்றியதே.

இதுவரை மேற்குலக ஊடகங்கள் ஐரோப்பாவினுள் நுழைந்துள்ள அகதிகளை குடியேறிகள் (immigrants) என்றே அழைக்கின்றன. அவை அவர்களை ஒருபோதும் அகதிகள் (refugees) என அழைப்பதில்லை. ஐரோப்பிய அரசாங்கங்களும் அவர்களை அகதிகளாக ஏற்பதில்லை. அவர்களை அகதிகளாக ஏற்பதன் சர்வதேசச் சட்டக் கடப்பாடுகளை அவை நன்கறியும். எனவே. அவை அம் மக்களைக் குடியேறிகளாகவே ஏற்கின்றன.

ஐரோப்பாவெங்கும் அகதிகட்கும் முஸ்லிம்கட்கும் எதிரான மனநிலையைப் பரிஸ் தாக்குதல் உருவாக்கியுள்ளது. தாக்குதல்களை அடுத்து அகதிகள் பற்றிய 'மனிதாபிமான உணர்வு' ஊடகங்களின் உதவியுடன் 'எதிர்ப்பாகவும் வெறுப்பாகவும்' மாற்றப்படுகிறது. இப்போது அவர்களைத்; திருப்பி அனுப்புவதோ ஏற்காமையோ எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது. இவ் வகையில், பரிஸ் தாக்குதல் அகதிகள் விடயத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. 

பரிஸ் தாக்குதல் சில நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. இவ்வகையான தாக்குதல் ஒன்று நிகழும் என ஈராக்கிய புலனாய்வுத்துறை எச்சரித்த போதும் அதைக் கவனத்தில் எடாதது ஏன்? இவ்வாண்டுத் தொடக்கத்தில் பாரிஸில் நிகழ்ந்த சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின் கடுமையாக்கப்பட்ட பிரெஞ்சு பாதுகாப்பு வளையத்தை ஊடுருவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது எளிதா? தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ். அமைப்பு, ரஷ்ய விமானத்தையும் தாங்களே சுட்டு வீழ்த்தியதாக உரிமை கோரியது. ஆனால் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை எனப் பின்னர் நிறுவப்பட்டது.

மேற்குலக ஊடகங்கள் பரிஸ் தாக்குதல்கள் நடந்து ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியவை எனச் சொல்லத் தொடங்கின. ஒரு வாதத்துக்கு, இத் தாக்குதல்களை ஐ.எஸ். தான் மேற்கொண்டது எனக் கொண்டாலும் சில கவனிக்கத்தக்க கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இப்போது

ஐ.எஸ்.ஸுக்குப் பாரிய பின்னடைவுகளையும் இழப்புக்களையும் வழங்குவன ரஷ்ய விமானக் குண்டுவீச்சுக்களே. எனின் ஏன் ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை? அவ்வாறு நேட்டோ நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டின் முதலிற் குறிவைக்க வேண்டியது அமெரிக்கா அடுத்தது பிரித்தானியா. இந் நிலையில் பிரான்ஸ் குறிவைக்கப்பட்டது ஏன்? இதற்கான பதில்கள் என்றுங் கிடைக்கமாட்டா. இன்னொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆயத்தமாகும் மனநிலையை ஐரோப்பியர்களிடையே உருவாக்க இவை பயன்படுகின்றன.

பரிஸ் தாக்குதல்கள் உலகளாவிய கவனம் பெற்ற வேளை, அத் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு லெபனானில் தெற்கு பெய்ருட்டில் 43 பேரைக் கொன்ற இரட்டைக் குண்டுவெடிப்பை, மேற்குலக ஊடகங்கள் 'ஹிஸ்புல்லாவின் இரும்புப்பிடிப்' பிரதேசத்தின் மீது ஐ.எஸ்.ஸின் தாக்குதலாக அறிவித்துச் சிலாகித்தன. அது சிரியாவின் அசாத் அரசை ஆதரித்ததற்காக ஹிஸ்புல்லாவுக்குக் கிடைத்த பரிசு எனச் சொல்லப்பட்டது.

அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்கட்;காக உலகம் அழவில்லை. அதே போல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்களாற் கொல்லப்படும் பலஸ்தீனியர்கட்காக உலகம் அழவில்லை. நேட்டோப் படைகளின் குண்டு வீச்சுகளில் கொல்லப்படும் சிரியர்கட்காகவோ அமெரிக்காவின் இரகசிய விமானத் தாக்குதல்களின் (drone strikes) குண்டுவீச்சில் இறக்கும் பாகிஸ்தானிய, ஆப்கானியப் பொதுமக்கட்காக உலகம் அழவில்லை. யெமெனில் அமெரிக்க ஆசிகளுடன் நிகழும் சவூதி விமானக் குண்டு வீச்சுக்களில் மரிப்போருக்காக உலகம் அழவில்லை.

இதுவரை பன்னிரண்டு  மில்லியனுக்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கி, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோரைக் காவுகொண்ட சிரிய யுத்தத்தைத் தொடக்கித் தொடரும் பெருமை மேற்குலகினது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவற்றின் பிராந்தியக் கூட்டாளிகளான சவூதி அரேபியாவும் வேறு சில மத்தியகிழக்கு நாடுகளுமே சிரியாவில் ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகட்கும் மேலாக முயல்கின்றன.

அவர்கள் அதற்காக ஒருபக்கம் சிரிய விடுதலை இராணுவத்தை உருவாக்கினர். மறுபுறம் மத்திய கிழக்கில் வலுவான தளத்தையுடைய அல் கைடாவின் இணைப்பில் உள்ள அல் நுஸ்ராவுக்கு உதவி வழங்கின. ஈராக், லிபியா போர்களின் பின்னணியில் அங்குள்ள முன்னாள் படைவீரர்கள், போராளிகள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி, அமெரிக்காவின் வழிகாட்டலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆசியுடன் இப்போது ஐ.எஸ். எனப்படும்  ஐ.எஸ்.ஐ.எஸ். தோன்றியது. எனினும் பரிஸ் தாக்குதல்களை நடாத்தியது ஐ.எஸ். என்று நம்ப வைக்கப்படுகிறது. 

வெல்ல முடியாத போரொன்றில் நேட்டோ நாடுகள் சிரியாவில் சிக்கியுள்ளன. ரஷ்யாவின் பிரவேசம் சிரியக் களநிலவரங்களை முற்றாக மாற்றியுள்ளது. ஐ.எஸ். மீது குறிவைத்த ரஷ்ய விமானக் குண்டுவீச்சையடுத்து சிரிய இராணுவம் நாட்டின் பல பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்கு மீட்டுள்ளது.

வடக்கே ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை குர்தியப்; போராளிகள் மீட்டுள்ளார்கள்.   இப்போது வேறுவழியின்றிப் போருக்கு ஆட்களை அனுப்பியாவது சிரியாவில் தமது தோல்வியைத் தவிர்க்கும் கட்டாயத்தில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ நாடுகள் உள்ளன. எனவே, ஐ.எஸ். அமைப்பை அழிக்க சிரியாவில் நேரடியாகத் தலையிடவேண்டும் என்ற வாதத்திற்குப் பரிஸ் தாக்குதல்கள் களமமைத்துள்ளன. 

பரிஸ் தாக்குதலின் பின்னர் நடந்த ஜி-20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிய முக்கியமான உண்மைகள் ஊடகவெளியில் உலாவவில்லை. அவர் சொன்ன இரண்டு முக்கியமான விடயங்களாவன: முதலாவதாக, ஏறத்தாழ 40 நாடுகள் ஐ.எஸ். அமைப்புக்கு நிதியுதவுகின்றன. அதிற் பல ஜி-20 நாடுகளும் அடங்கும். இரண்டாவதாக, ஐ.எஸ். அமைப்பின் முக்கியமான நிதிமூலம் எண்ணெய் விற்பனை. அவர்கள்; சிரியாவிற் களவாடும் எண்ணெயைத் துருக்கிக்குப் பத்திரமாகக் கொண்டுசெல்ல அமெரிக்க ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பு வழங்குகின்றன. பின்னதற்கான புகைப்பட ஆதாரங்களையும் புட்டின் வழங்கினார். அவை பரிஸ் தாக்குதல்கள் பற்றிப் புதிய கேள்விகளை எழுப்புவன.

நாம் யாருக்காக அழலாம் என்பதை அவர்கள் நமக்காகத் தீர்மானிக்கிறார்கள். நாம் ஏற்கிறோம். எனவே, டமாஸ்கஸையும் பெய்ரூட்டையும் விடப் பரிஸ் துன்பமானதாகத் தெரிகிறது. தோற்ற மயக்கங்கள் அபத்தமானவை மட்டுமல்ல, ஆபத்தானவையுமாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .