2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பசுமை அபிவிருத்திக் கடன்களைத் தொடங்கியுள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுமை  அபிவிருத்தி கடன்கள் திட்டத்தை தொடக்கியுள்ளமை பற்றி கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள வர்த்தகங்கள் தமது செயற்பாடுகளை மேலும் சுற்றாடலுக்கு இசைவானதாக ஆக்கிக் கொள்ள தனது ஆதரவை வழங்கும் வகையில் இந்தக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SMEs) சக்தி சேமிப்பு தொழில்முயற்சிகளில் முதலீடு செய்ய விரும்புகின்றவர்களுக்கு, சூரிய சக்தி உட்பட மீள்சுற்று சக்தி திட்டங்களில் அல்லது சக்தி ஆற்றல் தொழில் பிரிவில் முதலீடு செய்ய விரும்புகின்றவர்களுக்கு 25 மில்லியன் ரூபா வரையில் சலுகை வட்டி அடிப்படையில் கடன்கள் வழங்கப்படும் என்று நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் பசுமை அபிவிருத்திக் கடன்கள் தமது கழிவு முகாமைத்துவத்தை விருத்தி செய்து தேசிய சுற்றாடல் தரங்களுக்கு இசைவாகச் செல்லும் தேவை உடைய அமைப்புக்கள், அல்லது தமது கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை அமைத்துக் கொள்ளும் தேவை உடைய அமைப்புக்கள், வாயு மாசடைதல் கட்டுப்பாட்டு முறைகளை அமைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், திண்மக் கழிவு மீள்சுற்று, தொடர்பான பொறிமுறைகள், ஓசை மாசடைவு கட்டுப்பாட்டு பொறிமுறைகள் என்பனவற்றின் தேவை உடைய அமைப்புக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட இந்தக் கடன் திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

ஏழு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய ஓராண்டு சலுகைக் காலம் கொண்ட இந்தக் கடன்கள் சலுகை வட்டி வீதத்தில் வழங்கப்படும்.

'எமது சொந்த செயற்பாடுகளை சுற்றாடலுக்கு சிநேகமானதாக ஆக்கி வருகின்ற அதேவேளை எமது வாடிக்கையாளர்களும் தமது வர்த்தகத்தை நிலைத்தன்மையானதாக்க உதவுவது நாம் பிரதானமாக கவனம் செலுத்துகின்ற பிரிவுகளில் ஒன்றாகும்' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் தனியாள் வங்கிப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சண்ட்ரா வல்கம. 'SME பிரிவு நிதித்துறையில் இலங்கையில் தலைமை தாங்கும் நிறுவனம் என்ற வகையில் வர்த்தகங்களின் வளர்ச்சிக்கும் கண்டுபிடிப்புக்கும் உதவுவதில் வங்கி ஏற்கனவே பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. எனவே சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத முறையில் வர்த்தகங்கள் எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கும் எவ்வாறு அதற்கு தேவையான மாற்றங்களை அணுக வேண்டும் என்பதற்கும் வங்கி ஒரு உந்து சக்தியாகத் திகழ்கின்றது'என்று அவர் மேலும் கூறினார்.

புதிய பசுமை அபிவிருத்தி கடன் திட்டத்தின் கீழ் கடன்களைப் பெற தற்போதைய பாவனையை விட பத்து சதவீதம் சக்தி பாவனையை மீதப்படுத்தக் கூடிய திட்டங்களை தகுதியான திட்டங்களாக வங்கி அடையாளம் கண்டுள்ளது. மேலும் தேசிய சுற்றாடல் விதிமுறைகளுக்கு ஏற்ப செலவுகளைக் கொண்ட திட்டங்கள், சூரிய சக்தி மற்றும் சூரிய வலை மாணி முறைகள் போன்ற சக்தி சேமிப்புத் திட்டங்களோடு தொடர்புடைய நேரடியாக அடையாளம் காணப்பட்ட திட்டங்கள், LED ஒளியமைப்பு முறைகள் அல்லது சக்தி சேமிப்புத் திட்டத்துக்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பொறிமுறைகள், கழிவு முகாமைத்துவ முறைமைகளை விருத்தி செய்வதோடு தொடர்புடைய முதலீடுகள் என்பனவும் இந்தக் கடனைப் பெற தகுதியான திட்டங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

1979இல் தொடங்கப்பட்ட SME-1 திட்டம் முதல் நாட்டில் SME பிரிவுக்கான ஒவ்வொரு மீள் நிதி வழங்கல் திட்டத்திலும் பங்களிப்புச் செய்துள்ள நாட்டில் உள்ள ஒரு சில வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கி 'E நண்பர்கள்-1' 'E நண்பர்கள் ii' மற்றும் ' Eநண்பர்கள் 1 (மீள்)' ஆகிய சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கி (JBIC) வழங்கிய எல்லா கடன் பிரிவுகளிலும் பங்களிப்புச் செய்துள்ளது என வங்கி அறிவித்துள்ளது.

தனது சொந்த பசுமை நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக வங்கி தனக்கு சொந்தமான காணிகளில் அமைத்துள்ள கிளைக் கட்டிடங்களை புதிய சுற்றாடலுக்கு இசைவான மாதிரிக் கிளைக் கட்டிடங்களாக உருவாக்கியுள்ளது. பாரம்பரியமான வங்கி முறைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் நடமாடும் தொலைபேசி மூலமான அல்லது இணைய வழி வங்கி சேவை மூலமான டிஜிட்டல் வங்கி தளத்துக்கு புலம் பெயர்வதை வங்கி பெரிதும் ஊக்குவித்துள்ளது. கடதாசி பாவனைகளை இயலுமானவரைக்கும் குறைக்கும் வகையிலான தன்னியக்கச் செயற்பாடுகளில் அதிகம் முதலீடு செய்யப்பட்டு வருகின்றது. பணம் மற்றும் காசோலை வைப்பு, பணம் மீளப் பெறல், சேமிப்புக் கணக்குகளைத் திறத்தல், சில்லறைக் கடன்களுக்கு விண்ணப்பம் செய்தல், இணைய வழி வங்கிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் என பல சேவைகளை உள்ளடக்கிய வங்கியின் வாட் பிளேஸ் கிளையில் உள்ள தன்னியக்க வங்கிச் சேவை இதில் குறிப்பிடத்தக்கதாகும். பண வைப்புக்கு கடதாசி சிற்றைகளை பயன்படுத்துவதை முழுமையாக நீக்கும் பசுமை வங்கித் தளங்கள் (GBC) கொண்ட புதிய தலைமுறை தன்னியக்க பணவைப்பு தளங்களின் அறிமுகம் என்பனவற்றையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

இந்த பசுமை முயற்சிகளுக்கு அண்மையில் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ஏஸியன் கஸ்டமர் என்கேஜ்மன்ட் போரம் (ACEF) அமைப்பு 2015ம் ஆண்டுக்கான 'சிறந்த நிலைதன்மை கொண்ட பசுமை முயற்சி' க்கான விருதை வங்கிக்கு வழங்கியுள்ளது. அண்மையில் மும்பாயில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும். கொமர்ஷல் வங்கி  நாடு முழுவதும் 246 கிளைகளுடனும், 618 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. 2014ல் இலங்கையின் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டது.  கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல சர்வதேச வெளியீடுகளால் வழங்கப்பட்ட விருதுகளையும வங்கி; வென்றுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 18 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக  செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2015 செப்டம்பரில் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் திறப்பதற்கான உரிய அங்கீகாரத்தையும் வங்கி பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .