2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றம்

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

'வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்' என அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை (26) மாலை, மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் இது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இப்பிரேரணையை உறுப்பினர்கள் பலரும் வரவேற்று உரையாற்றியதுடன் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமது நாட்டுத் தேர்தல்களில் பங்கேற்பதற்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

பிரேரணையை நிறைவு செய்து உரையாற்றிய முதல்வர் நிஸாம் காரியப்பர் கூறியதாவது;

'வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது நாட்டுச் சகோதரர்களுக்கு இங்கு நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் அந்தந்த நாடுகளில் இருந்தவாறே வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்' என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

அதனை அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் சாதகமாக பரிசீலித்து வருகிறது. இலத்திரனியல் வாக்களிப்பு முறை எமது நாட்டில் இன்னும் அறிமுகம் செய்யப்படாததால் நமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அந்த வசதியை உடனடியாக செய்து கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவே தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு எமது மாநகர சபையின் இந்தத் தீர்மானம் மேலும் வலுச் சேர்க்கும் என நம்புகின்றேன்' என்று தெரிவித்தார்.

நிறைவேற்றப்பட்டுள்ள இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டுத் தொழில் உறவுகள் அமைச்சர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்குமாறு சபையின் செயலாளருக்கு முதல்வர் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .